யாழ்ப்பாணத்தில் நீதிபதி கார் மீது துப்பாக்கிச்சூடு; இரு பாதுகாவலர்கள் காயம்

யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலடியில் இன்று மாலை 5.10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் காரை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மெய்ப்பாதுகாவலர் இருவர் காயமடைந்தனர். ஆயினும் நீதிபதி இளஞ்செழியனுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

நல்லூர் பின்வீதி வழியாக தனது மெய்ப்பாதுகாவலருடன் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது காரில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். கோயில் பின்வீதி வழியாக அவரது கார் நாற்சந்தியை வந்தடைந்தபோது, அதற்கு வழிவிடும் வகையில் அவருடைய காருக்கு முன்னால் மோட்டார் சைக்களில் சென்ற அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாகனங்களை மறித்து வழியேற்படுத்தினார்.

அப்போது, அந்த இடத்தில் நடந்து வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த காவலருடைய இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியைப் பறித்தெடுத்து நீதிபதியின் காரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

அந்த நபர் துப்பாக்கியைப் பறித்தெடுத்தபோது, அந்த காவலருடன் இடம்பெற்ற இழுபறியில் காவலர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தின்போது, நீதிபதி இளஞ்செழியனைப் பாதுகாத்த அவருடன் இருந்த பாதுகாவலர், நீதிபதியைப் பாதுகாத்த வண்ணம் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். அந்த வேளை நீதிபதியுடன் இருந்த காவலரும் காயமடைந்தார். எனினும் நீதிபதி இளஞ்செழியனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் காவல் துறையினரிடம் இருந்து பறித்தெடுத்த கைத்துப்பாக்கியுடன் தப்பியோடியுள்ளார்.

யாழ் நகரில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குக் காவல் துறையின் உயரதிகாரிகளும் மேலதிக காவலர்களும் விரைந்து பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன் தப்பியோடிய நபரைத் தேடிப்பிடிப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

காயடைந்த இரு காவல்துறையினரும் உடனடியாக நீதிபதி இளஞ்செழியனால் யாழ் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு படுகாயமடைந்த ஒரு காவல் துறையினருக்கு அவசர சத்திர சிகிச்சை (அறுவை சிகிச்சை )மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட மாகாணம் உட்பட நாடு முழுவதும் பெரும் பரபரப்பில் ஆழ்த்திய புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவடீலாகநாதன் வித்தியா கொலை வழக்கின் ட்ரையல் எட் பார் விசாரணையில் நீதிபதி இளஞ்செழியனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதினெட்டு வயதுடைய மாணவி வித்தியா 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக 9 பேருக்கு எதிராக 41 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவழக்கு விசாரணை ஜுன் மாதம் 28 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர், இளஞ்செழியன் ஆகிய மூவர் அடங்வகிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது.

வழக்கு விசாரணையின்போது இதுவரையில் அளிக்கப்பட்ட சாட்சியங்களில் பரபரப்பூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்ற பின்னணியிலேயே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்