You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 16 பிரிட்டிஷ் குழந்தைகள்
தன்னார்வத் தொண்டு நிறுவனம் நிதியுதவி செய்யும் குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று உதவிசெய்வதற்காக சென்னை வந்த பிரிட்டனைச் சேர்ந்த 16 மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சரகம் விசாரித்துவருகிறது.
ஜூலை 17ஆம் தேதியன்று இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, சென்னை வந்தடைந்த 16 மாணவர்களும் அவர்களுடன் இருந்த மூன்று ஆசிரியர்களும் சென்னை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, அடுத்த விமானத்திலேயே பிரிட்டன் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் 19ஆம் தேதி துபாய் வழியாக மீண்டும் மான்செஸ்டர் வந்தடைந்தனர்.
இவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் பொறையாறில் உள்ள ஜாய் குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகளைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் பள்ளியும் உள்ளூர் சமூகமும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்திருப்பதாக மான்செஸ்டரில் உள்ள பாய்ன்டன் மேல் நிலைப்பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் டேவிட் வா தெரிவித்தார்.
இதற்குமுன் இதேபோல மூன்று முறை இங்கிலாந்தைச் சேர்ந்த மாணவர்கள் சென்னை வந்து திரும்பியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் அவர்கள் இணைந்து பணியாற்றவிருந்த நிலையில், அந்தக் குழுவினரிடம் இருந்த சுற்றுலா விசா அதற்குப் பொருந்தாது என்பதால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்காக எடுத்துச் சென்ற பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களுடன் அந்தக் குழுவினர் ஊர் திரும்பினர்.
தாங்கள் உதவிய குழுந்தைகளுடன் விளையாடவும் சுவர் ஓவியம் ஒன்றை வரையவுமே இந்தக் குழந்தைகள் இங்கிருந்து சென்றார்கள். 48 மணி நேரம் மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயணம் செய்ததால், அவர்கள் களைப்பிலும் அதிர்ச்சியிலும் உள்ளனர் என டேவிட் வா பிபிசியிடம் கூறினார்.
புகார் செய்வதற்காக இந்தியத் தூதகரத்தைத் தான் தொடர்பு கொண்டதாகவும் ஆனால், அவர்கள் இணைய தளத்தைப் பார்க்கும்படி கூறிவிட்டதாகவும் டேவிட் வா தெரிவித்தார்.
மாச்செல்ஸ்ஃபீல்டில் உள்ள இந்தியா டைரக்ட் என்ற சிறிய தொண்டு நிறுவனத்திற்காக கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர்கள் 27,000 பவுண்டுகளை வசூலித்துக் கொடுத்திருக்கிறது.
இந்தியா டைரக்ட் அமைப்பு சென்னைக்கு அருகில் உள்ள பெத்தேல் குழந்தைகள் இல்லத்தையும் பொறையாறில் உள்ள ஜாய் குழந்தைகள் இல்லத்தையும் ஆதரித்து வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சென்னையில் உள்ள குடியேற்றத் துறை அதிகாரிகளின் கருத்துக்களைப் பெற முயன்ற முயற்சிகள் பலனளிக்கவில்லை.
"அங்கிருந்து இதற்கு முன்பாகவும் குழந்தைகள் இதே போன்ற விசாவில்தான் வந்திருக்கிறார்கள். இப்போது என்ன ஆனதென்று தெரியவில்லை. பொறையாறில் உள்ள எங்களது இல்லத்தில் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். மீதமிருக்கும் நாட்களில் அவர்கள் சுற்றுலாப் பயணிகளைப் போலத்தான் இருப்பார்கள். ஆனால், இப்படியாகிவிட்டதில் ஏமாற்றம்தான். மீண்டும் அவர்கள் வேறு விசாவில் வருவார்கள் என்று நம்புகிறேன்" என இந்த பெத்தேல் மற்றும் ஜாய் குழந்தைகள் இல்லங்களை நடத்திவரும் லவ் அண்ட் கேர் சாரிடபிள் ட்ரஸ்ட்டின் நிர்வாக அறங்காவலர் மார்ட்டின் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வெளியுறவு அமைச்சகம் இந்திய அரசுடன் பேசி வருவதாகத் தெரிகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்