You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதிய அரசியல் யாப்பு தொடர்பாக இறுதி ஆவணம் எதுவும் தயாரிக்கப்படவில்லை - சிறிசேன
இலங்கையில் புதிய அரசியலமைப்பு மாதிரி சட்ட மூலத்தை தயாரிப்பது குறித்து அது தொடர்பாக பௌத்த மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு அல்லது தற்போதைய அரசியலமைப்பு மாற்றம் ஏதுவாயினும் தற்போதைக்கு தேவையில்லை என பௌத்த உயர் பீடத்தினரான மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த மகா சங்கத்தினரால் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது.
வியாழக்கிழமை மாலை கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் பௌத்த மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் தயாரிக்கப்படவில்லை என்றும், புதிய அரசியலமைப்பு குறித்து தற்போது கலந்துரையாடல் ஒன்று நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும், '' அரசினால் அத்தகைய சட்ட மூலமொன்று தயாரிக்கப்படுமாயின் நாட்டின் எதிர்கால நன்மை மற்றும் ஸ்திரதன்மை தொடர்பாக ஆழமாக ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அது தயாரிக்கப்படும் '' என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமயம் தொடர்பாக மகா சங்கத்தினரால் கருத்துக்களும் ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டு அது தொடர்பான முன் மொழிவுகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்