You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகளை கட்சியில் இணைக்க இலங்கை தமிழரசுக் கட்சி முடிவு
இலங்கையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை தமது கட்சி அரசியலில் இணைத்துக் கொள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சி என கருதப்படும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மட்டக்களப்பு நகரில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்றது.
முன்னாள் விடுதலைப்புலி போராளிகளின் புனர்வாழ்வு , வாழ்வாதாரம் மற்றம் அரசியல் வாழ்க்கை தொடர்பாக ஆராய்யப்பட்டு அது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அக்கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.
''புனர்வாழ்வு பெற்ற போராளிகளின் வாழ்க்கை முறையை சரியான முறையில் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சமூகத்தில் உள் ஈர்ப்பு செய்யப்பட்டு சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் .
அரசியல் வாழ்க்கைக்கு சரியான விதத்தில் உரிய நேரத்தில் கதவு திறக்கப்பட்டு அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும் '' என அந்த தீர்மானம் குறிப்பிடுவதாக அவர் கூறினார்.
போர் காரணமாக நீண்ட காலம் இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மட்டத்திலான உப குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது.
அதன் செயல்பாட்டுக்குரிய வரையறைகளிலிருந்து தமிழ் மக்கள் விடுபடுவதாகவே தெரிவதாக இலங்கை தமிழரசு கட்சி கூறுகின்றது.
இந்த விடயத்தை பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற மற்றுமோர் தீர்மானமும் அக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பாக விளக்கமளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம் . ஏ. சுமந்திரன் " நீண்ட காலம் இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பாக ஆராயும் செயலணியின் செயல்பாடுகள் குறித்த இனத்திற்கு மட்டும் என இருக்க கூடாது . எந்தவொரு இனத்திற்கும் பாரபட்சமாக இருக்க கூடாது . குறித்த திகதிக்கு முன்னர் இடம் பெயர்ந்த சகலரும் அதற்குள் உள்வாங்கப்பட வேண்டும் '' என கூறினார்.
மற்றும் பாதுகாப்பு தரப்பு நிலை கொண்டுள்ள தனியார் மற்றம் பொது பயன்பாட்டு காணிகளை விடுவிப்பது தொடர்பாக தொடர்ந்தும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் , இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் செயலாளர் கி. துரைராஜசிங்கம் உட்பட மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு சம கால அரசியல் மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
முன்னாள் போராளிகளின் அரசியல் பிரவேசம்
இதே வேளையில், ஏற்கனவே முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் வட மாகாண சபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட ஆர்வம் கொண்டிருந்தனர். அதற்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
ஜனநாயக போராளிகள் கட்சியாக நாடாளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட போதிலும் ஒரு ஆசனத்தை கூட அவர்களால் பெற முடியவில்லை அக் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய தயாராகி வரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் அரசியல் வேலைத் திட்டங்கள் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் என தற்போது தொடருகின்றது.
இதுவும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்