You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குப்பைமேடு சரிந்ததால் பலரது வாழ்க்கையும் சரிந்து போனது (படத்தொகுப்பு)
இலங்கையில் கொழும்பு மாவட்டம் கொலன்னாவ பிரதேசத்திலுள்ள மீதொட்டுமூல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை சடலங்களாக மீட்கப்பட்ட 19 பேரில் 7 பெண்களும் 5 சிறுவர்களும் அடங்குவதாக இராணுவம் தெரிவிக்கின்றது.
சம்பவத்தின் பின்னர் அந்த பகுதியை சேர்ந்த சிலர் காணாமல் போயுள்ள நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் இவர்கள் சிக்கியிருக்கலாம் என கருதப்படுவதாக உறவினர்கள் கருதுகின்றனர்.
சம்பவம் இடம் பெற்று 24 மணித்தியாலயங்கள் கடந்து விட்ட நிலையிலும் இடிபாடுகளை அகற்றி மீட்பு பணிகளில் போலிஸ் மற்றும் முப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.
சுமார் 600 படை வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவிக்கின்றார்.
18 - 19 பேர் வரை காணாமல் போயிருக்கலாம் என மீட்பு பணியாளர்களின் தரப்பு தகவல்கள் மூலம் தன்னால் அறிய முடிவதாக அங்கு சென்று திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கின்றார்.
6 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரையில் பதிவாகியுள்ளதாக போலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் இயற்கை அனர்த்தமா ? மனித செயல்பாடுகளினால் ஏற்படுத்தப்பட்டதா ? என்ற பார்வையில் நடைபெறும் போலிஸ் விசாரணைக்கு குற்றப்புலனாய்வு துறையின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
145 மக்கள் குடியிருப்புகள் குப்பை மேட்டினால் மூடப்பட்ட நிலையில் முழுமையாகவும் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. அக் குடியிருப்புகளில் வசித்த 180 குடும்பங்களை சேர்ந்த சுமார் 625 பேர் இரு அரசு பள்ளிக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபை மற்றும் கொலன்னாவ மாநகர சபை நிர்வாகத்திற்கு உட்பட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை அந்த இடத்தில் கொட்டுவதற்கு ஏற்கனவே பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்ட போதிலும் மாற்று இடத்தை அடையாளம் காண்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக அதற்கான தீர்வை இதுவரை எட்ட முடியவில்லை.
அந்த இடத்தில் காணப்படும் குப்பை மேடு காரணமாக அருகாமையிலுள்ள குடியிருப்புகளுக்கு ஏற்படும் சேதம் மற்றும் சுகாதார அச்சுறுத்தல்களையடுத்து குடியிருப்பாளர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக கொழும்பு மாநகர சபையினால் ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஒரு வருடத்திற்கு முன்னர் சுமார் 25 குடும்பங்கள் இழப்பீட்டுக் தொகையை பெற்று அங்கிருந்து வெளியேறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்தார்.
பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கும் மாற்று குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தல் தொடர்பாக கொழும்பு மாநகர சபை ஒரு வாரமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது. குடியிருப்பாளர்கள் இழப்பீடு போதாது என்ற காரணத்தை முன் வைத்துள்ள நிலையில் அது தொடர்பாக இழுபறி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்