You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: கிழக்கு மாகாணத்தில் காணி உரிமை தொடர்பாக முரண்பாடுகள்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் போருக்கு பின்னர் காணி உரிமை தொடர்பாக வனத்துறையினருக்கும், பொது மக்களுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
வன இலாகாவிற்குரிய காணிகளின் எல்லைகள் வனத் துறையினரால் தற்போது அடையாளமிடப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் இது தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சனையை முன் வைத்து, வியாழக்கிழமை (இன்று ) விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தங்களின் நெல் வேளாண்மை செய்கைக்குரிய சுமார் 2000 ஏக்கர் காணி வன இலாகாவினால் கையகப்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளினால் இந்த ஆர்பாட்டத்தில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், இந்நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இதன் முடிவில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே . விமலநாதனிடம் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளினால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கான மனுக்கள் கையளிக்கப்பட்டன.
இம் மனுக்களின் பிரதிகள் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான கவிந்திரன் கோடிஸ்வரன், பிரதேச செயலாளர்களான எஸ்.ஜெகநாதன் மற்றும் வி. ஜெகதீஸன் ஆகியோரிடமும் கையளிக்கப்பட்டன.
1962-ஆம் ஆண்டு முதல் நெல் வேளாண்மை பணியில் ஈடுபட்டு வரும் தங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்காவினால் வழங்கப்பட்ட காணி உரிமைக்கான உறுதி உள்பட பல சட்ட ரீதியான ஆவணங்கள் பல தங்களிடம் இருப்பதாக விவசாயியான தம்பியப்பா கைலாயபிள்ளை தெரிவித்தார்.
வன இலாகாவிற்குரிய காணி என்றால் ஏற்கனவே எல்லையிடப்பட்ட அடையாள கற்களை அவர்களால் காட்ட முடியுமா என்றும் வினா எழுப்பிய அவர், தற்போது காணி உரிமை தங்களின் மூன்றாவது சந்ததியினரை சென்றடைந்துள்ள நிலையில், இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
2010-ஆம் அண்டு அக்டோபர் மாதம் 01-ஆம் தேதியன்று, வன வள சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரகடனத்தின் படி குறித்த காணிகள் வன இலாகாவிற்குரியது என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்திலும் இதே பிரச்சனை
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் மற்றும் குச்சைவெளி ஆகிய பிரதேசங்களில் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு பாதிப்புக்குள்ளான பொது மக்களால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த வாரம் நடைபெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் இந்த பிரச்சனை தமிழ் - முஸ்லீம் மக்கள் பிரதிநிதிகளினால் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக குச்சைவெளி பிரதேசத்தில் மட்டும் பெரியகுளம் தொடக்கம் தென்னைமரவாடி வரை 4835 ஏக்கர் காணி இவ்வாறு வனத் துறையினரால் அடையாளமிடப்பட்டுள்ளதாக அக்கூட்டத்திற்கு தலைமை வகித்த எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் வன இலாகா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
இக்காணிகளில் 3420 ஏக்கர் காணிக்கு காணி அபிவிருத்தி உரிமை பத்திரம் ஏற்கனவே அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது . 500 ஏக்கர் காணி தனியாருக்கு சொந்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக காரணமாக கைவிடப்பட்டிருந்த காணிகள் தற்போது காடாக காணப்படுவதால் தாங்கள் எல்லையிட்டதாக வனத் துறைஅதிகாரிகள் இதற்கு பதில்அளித்தனர்.
குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு மீளக் கையளிக்கப்பட வேண்டும் என அவர் அதிகாரிகளை பணித்துள்ளார்..