You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் கிரிக்கெட் அணியினரின் 'கண்ணீரை வரவழைக்கும்' போராட்ட வரலாறு
- எழுதியவர், சாரதா உக்ரா
- பதவி, மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்தி
இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீராங்கனைகள் சமீபத்தில் ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான T-20 உலக கோப்பையை வென்றனர். ஒரு பெரிய சர்வதேச அளவிலான போட்டியில் நாட்டிற்கு முதல் வெற்றியை தேடிக் கொடுத்தனர்.
ஒப்பீட்டளவில் பலம் வாய்ந்ததாக கருதப்படும் இங்கிலாந்து மகளிர் அணியை இந்தியா தோற்கடித்ததால் இந்த வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த மாதம் மகளிர் ஐபிஎல் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
போட்டியில் ஒரு பந்து கூட இன்னும் விளையாடப்படவில்லை. ஆனாலும் அது தொடர்பான விவாதம் தொடங்கி விட்டது.
மகளிர் பிரீமியர் லீக் (WPL) அணியிலும் அதன் ஊடக உரிமைகளிலும் காணப்பட்ட முதலீடு, மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரியது.
மகளிர் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக போராடி இந்த நிலையை அடைந்துள்ளனர். எனவே மகளிர் கிரிக்கெட்டை ஆண்களின் தயவு என்று பார்க்கும் காலம் இப்போது இல்லை. வரும் நாட்களிலும் அது இருக்காது.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு 1970களில் தொடங்கியது. ஆனால் இதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, 1745 இல் முதல் மகளிர் கிரிக்கெட் போட்டி அதிகாரபூர்வமாக நடத்தப்பட்டது.
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் சங்கம் 1927 இல் நிறுவப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மகளிர் அணி முதல் முறையாக 1934 இல் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது.
ரயிலின் இரண்டாம் வகுப்பில் பயணம்
இந்தியாவில் கிரிக்கெட் வீராங்கனைகளின் போராட்டங்கள் குறித்து பல கதைகள் உள்ளன.
1970கள் மற்றும் 1980களின் பிற்பகுதி வரை, இந்தியாவின் சர்வதேச அணி ரயில்களில் இரண்டாம் வகுப்பில் பயணிக்க வேண்டியிருந்தது. சாந்தா ரங்கசாமி, டயானா எடுல்ஜி போன்ற ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் அந்தக் காலகட்டத்தில் அணியில் இருந்தனர்.
இந்த வீரர்கள் தங்கள் கிட் பேகுகளுடன் ரயிலில் பயணிக்க வேண்டியிருந்தது. சில நேரங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவும் செய்யப்படாமல் இருக்கும்.
ஒரு பெரிய பள்ளியின் பிரார்த்தனைக் கூடத்தில் தரையில் மெத்தைகளை விரித்து இரண்டு அணிகள் தங்கவைக்கப்படும். அதிலிருந்து வீரர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை அளவிட முடியும்.
இரு அணிகளுக்கு நடுவே ஒரு கயிற்றை கட்டி அதில் போர்வையை தொங்கவிட்டு தடுப்புச்சுவர் எழுப்பப்படும்.
இன்று நம்புவது கடினமாக இருக்கலாம். ஆனால் மகளிர் கிரிக்கெட் அந்த காலகட்டத்தையும் கண்டிருக்கிறது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்க மாட்டோம் என்று வீரர்கள் மிரட்டி வாரியத்திடம் இருந்து போட்டிக் கட்டணத்தை வசூலிக்க வேண்டியிருந்தது.
மகளிர் கிரிக்கெட்டை கண்காணிக்கும் பொறுப்பை பிசிசிஐ ஏற்றுக்கொண்டபோதும் நிலைமை அவ்வளவாக மாறவில்லை. ஆண் வீரர்களின் ஸ்பான்சர்கள் தயாரித்து கொடுத்த மீதமுள்ள உடைகளை வீராங்கனைகள் அணிந்து விளையாட வேண்டிய நிலை இருந்தது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவர், முன்னாள் இந்திய கேப்டன் டயானா எடுல்ஜியிடம், "என்னால் முடிந்தால், மகளிர் கிரிக்கெட் உருவாக அனுமதித்திருக்கவே மாட்டேன்" என்று கூறினார்.
தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளும், மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன. இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் பல சந்தர்ப்பங்களில் தங்கள் வலுவான ஆட்டத்தால் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளனர்.
இரண்டு பெரிய போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் விளையாடிய அணி
மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி இரண்டு முக்கிய ஐசிசி போட்டிகளில் இறுதிப்பந்தயத்தில் விளையாடியுள்ளது.
இந்திய அணி 2017 மகளிர் உலகக் கோப்பை மற்றும் 2020 டி 20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியை எட்டியது. இவை எப்போதும் முக்கியமான மைல்கற்களாக நினைவில் இருக்கும்.
இந்த இரண்டின் மூலம் இந்திய வீரர்களுக்கு அதிக அனுபவம் கிடைத்தது. பெண்கள் பிக் பாஷ் போட்டியிலும், இங்கிலாந்தில் நடைபெறும் KIA சூப்பர் லீக் மற்றும் 'விமன்ஸ் ஆகியவற்றிலும் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
மகளிர் கிரிக்கெட்டில் எல்லா வயதினரும் தங்கள் சொந்த போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் பொறுமை மற்றும் நம்பிக்கையுடன் போராடுகிறார்கள். ஆனால் சமீப காலமாக, இந்த ஆண் ஆதிக்க விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் புதிய வரலாற்றை எழுதி வருகின்றனர்.
பல வழிகளில், கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை முதன்முதலில் எழுதியவர்கள் மகளிர் கிரிக்கெட் வீரர்கள்தான்.
இன்றைய கிரிக்கெட்டின் அடிப்படை விஷயத்திலிருந்து ஆரம்பிக்கலாம். இப்போதெல்லாம் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்கள் கைக்கு மேல் பந்து வீசுவதை பார்க்க முடிகிறது.
ஆனால் 1822ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி முதல் முறையாக கென்ட்டின் ஜான் வில்லிஸ், ஓவர் ஆர்ம் பந்தை வீசியபோது அது நோ பால் என்று அழைக்கப்பட்டது.
முன்பு கிரிக்கெட்டில் அண்டர் ஆர்ம் பந்து மட்டுமே வீசப்பட்டது. ஆனால் வில்லிஸுக்கு இந்த ஓவர் ஆர்ம் பந்தை வீசும் யோசனை அவரது சகோதரியிடமிருந்து வந்தது.
ஓவர் ஆர்ம் டெலிவரி
தன் சகோதரனுக்கு அண்டர் ஆர்ம் பந்து வீசும்போது கிறிஸ்டினா வில்லிஸின் கை, கனமான பாவாடையில் மீண்டும் மீண்டும் சிக்கும். அதனால் அவர் தோளுக்கு மேல் கையை வைத்து பந்து வீச ஆரம்பித்தார்.
சகோதரரின் பந்து நோ பால் என்று அழைக்கப்பட்டபோது அவர் கோபத்தில் போட்டியை விட்டு வெளியேறினார்.
ஆனால் 1864இல் ஓவர் ஆர்ம் பந்துவீச்சு கிரிக்கெட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் யார்?
இந்தக் கேள்விக்கான பதில் இயன் போத்தம் என்று பெரும்பாலானவர்கள் சொல்வார்கள். அது சரி என்றும் கருதப்படுகிறது.
ஆனால் இது தவறு. ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீராங்கனை பெட்டி வில்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக இந்த சாதனையை படைத்தார்.
1948 முதல் 1958 வரை ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய வில்சன், பெண் பிராட்மேன் என்று அழைக்கப்பட்டார்.
டெஸ்ட் சதம் மற்றும் 10 விக்கெட் சாதனை
1958 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான அவரது கடைசி கிரிக்கெட் தொடரின் போது, ஆஃப் ஸ்பின்னராக ஒரு டெஸ்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் ஒரு சதத்தையும் அடித்தார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆலன் டேவிட்சன், போத்தமுக்கு 22 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 100 ரன்கள் மற்றும் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை செய்திருந்தார். வில்சனுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் டேவிட்சன் இந்த சாதனையைச் செய்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் அடித்தவர் யார்?
நாம் சச்சின் டெண்டுல்கரின் பெரிய ரசிகர்களாக இருக்கலாம் மற்றும் குவாலியரில் அவரது இன்னிங்ஸை நினைவில் வைத்திருக்கலாம் ஆனால் உண்மை என்னவென்றால், ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை ஆஸ்திரேலிய வீரர் பிலிண்டா கிளார்க் டென்மார்க்கிற்கு எதிராக 1997 உலகக் கோப்பை போட்டியில் மும்பையில் அடித்தார்.
13 ஆண்டுகளுக்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்தும் பெரும் உற்சாகம் நிலவுகிறது.
இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை பந்தயங்கள் இந்தியாவில் நடைபெற உள்ளன. அது பற்றிய பேச்சுக்கள் ஏற்கனவே நடந்து வருகின்றன.
ஆனால் முதன்முதலில் உலகக் கோப்பை போட்டி, ஆண்கள் கிரிக்கெட்டில் நடக்கவில்லை என்பதை வெகு சிலரே அறிந்திருப்பார்கள். இதையும் பெண் வீராங்கனைகளே துவக்கி வைத்தனர்.
முதல் முறையாக, 1973 இல் இங்கிலாந்தில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது.
இங்கிலாந்து அணித்தலைவர் ரேச்சல் ஹே பிளின்ட்டின் ஸ்பான்சர்களுக்கான தேடுதல் காரணமாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
மேலும் மகளிர் கிரிக்கெட்டில் 40 ஆயிரம் பவுண்டுகள் முதலீடு செய்ய தொழிலதிபர் ஜாக் ஹேவர்டை அவர் தயார்படுத்தினார்.
விக்கிபீடியாவில் இந்தத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை, விளையாட்டு உலகின் பழமையான உலக சாம்பியன்ஷிப் என்பது முற்றிலும் சரியானது.
1973 மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
லார்ட்ஸ் மைதானத்தில் இயங்கும் Marylebone Cricket Club (MCC), 1999 வரை பெண்களுக்கு உறுப்பினர் அந்தஸ்தை வழங்கவில்லை என்பது சுவாரசியமான விஷய
முதல் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியால் பங்கேற்க முடியவில்லை. ஆனால் இரண்டாவது உலக கோப்பை போட்டியை 1978ல் இந்தியா நடத்தியது.
இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என நான்கு நாடுகள் மட்டுமே பங்கேற்றன.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஆடவர் உலக கோப்பை போட்டியை கூட்டாக நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
1978-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலக கோப்பை போட்டி
இந்த போட்டிகள் பாட்னா, ஜம்ஷெட்பூர், கல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றன.
வெளிநாட்டு மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை பார்க்க 25 முதல் 30 ஆயிரம் பார்வையாளர்கள் திரண்டனர், இந்த பார்வையாளர்கள் வீரர்களிடம் ஆட்டோகிராஃப் கேட்பதும் வழக்கம்.
ஆற்றங்கரையில் வீரர்களின் ஆடைகள் துவைக்கப்பட்டு கற்கள் மீது உலர்த்தப்பட்டன.
இதற்குப் பிறகு, இந்தியா இரண்டு முறை அதாவது 1997 மற்றும் 2013 இல் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தியது. இது போன்ற வரலாற்று உண்மைகள் இத்துடன் முடிவடையவில்லை.
சர்வதேச டி20 கிரிக்கெட்டையும் மகளிர் கிரிக்கெட்டே தொடங்கியது.
2004 ஆகஸ்டில் இங்கிலாந்து பெண்கள் அணி நியூசிலாந்திற்கு எதிராக, ஹோவே சசெக்ஸில் முதல் T20 பந்தயத்தை விளையாடியது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 2003 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டை இன்டர் கவுண்டி கிரிக்கெட்டாக தொடங்கியது.
2005 ஆம் ஆண்டுக்கு முன்புவரை, சர்வதேச மகளிர் கிரிக்கெட் கவுன்சில் உலகம் முழுவதும் பெண்கள் கிரிக்கெட்டை நிர்வகித்து வந்தது. இது 1958 இல் நிறுவப்பட்டது. 2005 இல் இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் (ICC) இணைக்கப்பட்டது.
ஆண்களுக்கான முதல் சர்வதேச டி20 போட்டி 2005 பிப்ரவரியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே நடைபெற்றது.
இது மட்டுமின்றி ஆஸ்திரேலியா 2008ல் இளஞ்சிவப்பு (pink) பந்து சோதனையை தொடங்கியபோது, குயின்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே இளஞ்சிவப்பு பந்துடன் முதல் கண்காட்சி போட்டி நடந்தது.
இப்போது ஆண்களுக்கான டெஸ்ட் போட்டிகளுக்கு இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படுகிறது.
மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகளை பார்க்க உங்கள் டிவி பெட்டியைத் திறந்து அதில் முதல் பந்து வீசப்படும் போது, மகளிர் கிரிக்கெட் மற்றும் வீராங்கனைகளின் விடாமுயற்சி மற்றும் ஆட்டத்தை மதிக்கும் வகையில் எழுந்து நின்று கைத்தட்டுங்கள். இது நான் உங்களுக்கு கூறும் ஒரு யோசனை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்