You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விம்பிள்டன்: வெள்ளை உடையும் மாதவிடாயும் - டென்னிஸ் வீராங்கனைகள் எழுப்பும் கேள்விகள்
- எழுதியவர், வந்தனா விஜய்
- பதவி, இந்திய மொழிகள் தொலைக்காட்சி ஆசிரியர்
ஒரு பெண் வீராங்கனை, மாதவிடாய் காலத்தில் அவதிப்படுவதுடன் வெண்ணிற ஆடைகளில் கறை ஏற்பட்டு விடக் கூடாது என்ற கவலையும் சேர்ந்து கொண்டால் அது எவ்வளவு மன உளைச்சலைத் தரும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
விளையாடும் வீராங்கனை ஒருவருக்கு வெற்றி தோல்வி குறித்த விவகாரங்கள் மனதுக்கு வரலாம். ஆனால், வெள்ளை உடை அணிந்திருக்கும்போது மாதவிடாய் வந்துவிடக்கூடாதே என்ற மனச்சிக்கல் வரலாமா? விம்பிள்டனில் நடந்து வரும் டென்னிஸ் போட்டிகளில் வீராங்கனைகள் தரப்பில் நின்று கவனிக்க வேண்டிய ஒன்று வெள்ளை உடையும், மாதவிடாயும்.
விம்பிள்டனில் விளையாடும் பெண் வீரர்கள் வெள்ளை உடை அணிந்து விளையாடுவதும், அந்த இரண்டு வாரங்களில் மாதவிடாய் வந்துவிடக்கூடாதே என்று அஞ்சுவதும் ஒரு சங்கடமான மன உளைச்சல்.
முன்னாள் டென்னிஸ் ஒலிம்பிக் சாம்பியனான மோனிகா புய்க் சமீபத்தில் இது குறித்து ட்வீட் செய்து இந்த பிரச்னையை எழுப்பியுள்ளார்.
விம்பிள்டன் என்பது இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஆர்வமாகப் பார்க்கப்படும் ஒரு முக்கியமான போட்டி. மேலும், வெள்ளை ஆடைகளை அணிவது இங்கு பாரம்பரியமாக இருந்து வருகிறது.
விம்பிள்டன் விதிகளின்படி, ஸ்கர்ட், ஷார்ட்ஸ் மற்றும் டிராக்சூட்கள் அனைத்தும் வெண்மையாக இருக்க வேண்டும். மேலும், வெள்ளை என்பது அரை வெள்ளை அல்லது கிரீம் வெள்ளை என்றால் கூட ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. பளீரென்ற வெண்மைதான் ஏற்றுக்கொள்ளப்படும் .
விளையாட்டுகளில், வெள்ளை உடை அணிய வேண்டிய கட்டாயம், பெண்களுக்கு விரோதமானதா என்ற விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது மோனிகா புய்க் ட்வீட்.
வசதியை விட பாரம்பரியம் பெரிதா?
ஒரு பெண் வீராங்கனை மாதவிடாய் காலத்தில் அவதிப்படுவதுடன் வெண்ணிற ஆடைகளில் கறை ஏற்பட்டு விடக் கூடாது என்ற கவலையும் சேர்ந்து கொண்டால் அது எவ்வளவு மன உளைச்சலைத் தரும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
டென்னிஸ் வீராங்கனைகள் பலர் மாதவிடாய் காலங்களில் வெள்ளை உடையில் விளையாடுவது தங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக குரல் எழுப்பி வருகின்றனர். அவர்களது கருத்து முற்றிலும் சரியானது.
விம்பிள்டனில் வெள்ளை அணிவது பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று பலர் வாதிடுகின்றனர். ஆனால், மைதானத்தில் இறங்கி விளையாடும் வீராங்கனையின் வசதியை விட பாரம்பரியம் பெரிதா என்பதுதான் நாம் கேட்க வேண்டிய கேள்வி.
விம்பிள்டனில் ஆடைக் கட்டுப்பாடு
வீரர்கள் வெண்ணிற ஆடை அணிவது கட்டாயம்.
வெண்மையில் அரை வெண்மை அல்லது கிரீம் வெண்மைக்கு அனுமதியில்லை.
காலணிகள், சாக்ஸ், தொப்பி அனைத்தும் வெண்மையாக இருக்க வேண்டும்.
வியர்வை அல்லது வேறு காரணங்களால் உள்ளாடைகள் தெரிந்தால், ஒரு சென்டிமீட்டர் பட்டை தவிர அவையும் வெண்மையாக இருக்க வேண்டும்.
டென்னிஸ் மட்டுமல்லாமல், மற்ற விளையாட்டுகளிலும், பல இந்திய மற்றும் சர்வதேச வீரர்கள் இப்போது வெள்ளை ஆடைகள் தொடர்பான விதிகள் குறித்து கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
சிக்கி ரெட்டி என்ற ஒரு இந்திய பெண் பேட்மின்டன் வீராங்கனை, 2009 முதல் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார். அவர், இது குறித்து, "எந்தவொரு வீரருக்கும் சிறப்பாகச் செயல்படுவது மிக முக்கியமான விஷயமாக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் வசதியாக இருந்தால் மட்டுமே அவர்களால் சிறப்பாகச் செயல்பட முடியும்.
சிறப்பு ஆடைகளை அணியச் சொல்வது வீராங்கனைகளின் பிரச்னைகளை அதிகரிக்கும். இதில் எதுவும் சரியென்றோ தவறேன்றோ இல்லை. இது தனிப்பட்ட விருப்பமாக இருக்க வேண்டும். இதைக் கொண்டு யாரையும் எடை போடுவது தவறாகும்.
நான் எப்படி ஆடை அணிவது என்பது தேவையற்ற விஷயம். என்னுடைய செயல்பாடு மட்டுமே முக்கியம். நான் எதை அணிந்தாலும் அது எனக்கு வசதியாகவும், நன்றாக விளையாட உதவும் ஆடையாகவும் இருக்க வேண்டும். உங்கள் ஆடைகளை மதிப்பிடுவது விளையாட்டிலிருந்து திசைதிருப்பப்படுவது மட்டுமல்லாமல், தேவையற்ற மன அழுத்தத்துக்கும் காரணமாகும்" என்கிறார்.
மாதவிடாயைத் தள்ளிப்போட மருந்து
மாதவிடாய் என்பது பெரும்பாலான வீரர்கள் இதுவரை வெளிப்படையாகப் பேசாத ஒரு பிரச்னை. இது இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்.
பிரிட்டனின் ஹைதர் வாட்சன் கலப்புப் பிரிவில் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனாக இருந்தவர். பிபிசி ஸ்போர்ட்ஸ் உடனான உரையாடலில் அவர், "மாதவிடாய்க் காலத்தில் வெள்ளை ஆடை அணிவதால், விம்பிள்டனில் வீரர்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள். வீரர்கள் ஊடகங்களுடன் பேச முடியாது, ஆனால், அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
விம்பிள்டனின் போது மாதவிடாய் வராமல் இருக்க மாத்திரை உட்கொள்ளலாம் என்று நானே பல முறை நினைத்துள்ளேன். மகளிர் ஆட்டங்களில் விளையாடுவோர் எப்படி இது குறித்துப் பேசியிருப்பார்கள் என்று யோசித்துக்கொள்ளலாம்" என்கிறார்.
விம்பிள்டனின் வரலாறு
1877 ஜூலையில் முதல் போட்டி.
அப்போது பெண்களுக்கு ஆட அனுமதியில்லை.
1884-ல் பெண்கள் ஒற்றையர் ஆட்டம் தொடங்கியது.
மேட் வாட்ஸன் தனது சகோதரியை வென்று முதல் சாம்பியன் பட்டம் பெற்றார்.
1913-ல் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் தொடங்கின.
பெண்களுக்கான கழிவறை இடைவேளை
வெண்ணிற ஆடைகள் மற்றும் மாதவிடாய்க் கறை ஏற்படும் அச்சம் மட்டுமே பிரச்னை இல்லை. பெண் வீராங்கனைகள் தொடர்பான பல பிரச்சனைகளும் அலசப்படுகின்றன. விம்பிள்டன் போன்ற எந்த ஒரு விளையாட்டுப் போட்டியிலும், போட்டியின் போது கழிவறை இடைவேளை எடுப்பது சகஜம் தான். ஆனால், பல பெண் வீராங்கனைகள் ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கான விதிகள் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்றும் இது அவர்களின் செயல்திறனை பாதிக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
ஆண்களோ பெண்களோ, டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் கழிப்பறை இடைவேளைகளை இன்னும் குறைக்க வேண்டும் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த இடைவெளியை வீரர்கள் தங்களுக்குக் கூடுதல் நேரத்தைப் பெறுவதற்கான சூழ்ச்சியாகப் பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்கள் வாதம்.
ஒரு பெண் டென்னிஸ் வீராங்கனையாக
"ஒரு பெண் வீராங்கனை தனது மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் அவள் ஒரு போட்டியில் விளையாடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவள் சானிட்டரி பேடை மாற்றுவதற்கு முழுமையான செட் மாறும் வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில், கழிப்பறை இடைவேளை குறைவாக உள்ளன. இது பெண்களின் தேவைகளுக்கு மிகவும் மோசமான நிலைமை. ஆண் வீரர்களிடமிருந்து வேறுபட்டது. விம்பிள்டன் விதிகளை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது" என்று அவர் கூறுகிறார்.
ஆண் - பெண் வீரர்களின் தேவைகளில் வேறுபாடு
விதிகளின்படி, போட்டியின் போது, ஒரு பெண் வீராங்கனைக்கு மூன்று நிமிடங்கள் வரை கழிவறை இடைவேளை எடுக்க ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது - அல்லது பேட்கள் அல்லது உடைகளை மாற்ற வேண்டும் என்றால், ஐந்து நிமிடங்கள். கிராண்ட்ஸ்லாம் விதிகளின்படி, ஒரு பெண் வீராங்கனை அதிக நேரம் எடுத்துக் கொண்டால், தண்டனை விதிக்கப்படலாம்.
ஒரு பெண் வீராங்கனை மாதவிடாய் காரணமாக மற்றொரு கழிவறை இடைவேளைக்கு நடுவரிடம் அனுமதி பெற வேண்டுமானால், அதை எல்லோர் முன்னிலையிலும் செய்ய வேண்டும், நடுவரின் மைக்ரோஃபோன் ஆன் செய்யப்பட்டுள்ளது அல்லது கேமரா இயங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒரு பெண் வீராங்கனை எல்லோர் முன்னிலையிலும் இதைக் கோர முடியாது.
டென்னிஸ் களத்தில் மட்டும் நான் ஆணாகி விட்டால்
ஆடைக் கட்டுப்பாடு மற்றும் இடைவேளை போன்ற சிக்கல்களைத் தவிர, பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த பெண் விளையாட்டு வீராங்கனைகள் தங்கள் செயல்திறன் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் பேசுகிறார்கள்.
2022 பிரெஞ்ச் ஓபனின் முக்கியமான போட்டியில் 19 வயது டென்னிஸ் வீரர் யாங் சின்வினின் ஆட்டம் மக்களுக்கு நினைவிருக்கும். உலகின் நம்பர் ஒன் வீரருக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு வலி ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட யாங் சின்வின், தோல்விக்குப் பிறகு, இந்த வலி, தனக்கு மாதவிடாய் காரணமாக ஏற்பட்டதாகக் கூறினார்.
டென்னிஸ் மைதானத்தில் மட்டும் நான் ஆணாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று அவர் கூறியது, இந்த நிலையின் தீவிரத்தை விளக்கப் போதுமானது.
டென்னிஸ் மட்டுமின்றி, ஒவ்வொரு விளையாட்டிலும் பெண் வீராங்கனைகள் இந்தப் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.
பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் 2021 ஆம் ஆண்டுக்கான பிபிசி விளையாட்டு வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டார். மீராபாய் எனக்கு அளித்த ஒரு நேர்காணலில், ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாகவே தனக்கு மாதவிடாய் தொடங்கியதாகவும், பெரிய ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எப்படி தயார்படுத்திக் கொண்டேன் என்றும் கூறினார்.
வீராங்கனைகளின் வசதியை விடப் பாரம்பரியம் முக்கியமா?
'த டெலிகிராப்' நாளிதழ் கடந்த ஆண்டு இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் தொடர் குறித்த செய்தியை வெளியிட்டது.
அதில், "இந்தியா-இங்கிலாந்து இடையேயான இந்தப் போட்டியில், இங்கிலாந்தின் டெஸ்ட் அணி வீரர்களில் பாதி பேருக்கும், ஒரு இந்திய வீரருக்கும் மாதவிலக்கு ஏற்பட்டது. இங்கிலாந்து வீரர் டாமி பியூமாண்டின் மாதவிடாய் முதல் நாள். பாரம்பரிய வெள்ளை ஆடைகள் அணிவதால் கறை ஏற்படும் அச்சமும் அடிக்கடி கழிப்பறைக்குச் செல்ல நேரலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது. தொலைக்காட்சி நேரலையில் அவரது ஆடைகள் கறைபட்டால்? ஏழு வருடங்களில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடும் முன் இதையெல்லாம் சிந்திக்க விரும்பவில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
2020 ஆம் ஆண்டில் பிபிசியின் மகளிர் விளையாட்டுக் கணக்கெடுப்பின்படி, 60 சதவீத வீராங்கனைகள் மாதவிடாய்க் காலத்தில் தங்கள் செயல்திறன் பாதிக்கப்படுவதாகவும், 40 சதவீத வீராங்கனைகள் இது குறித்துத் தங்கள் பயிற்சியாளரிடம் பேசமுடிவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
நிறுவனங்களின் பங்கு என்ன?
இருப்பினும் விளையாட்டு தொடர்பான சில நிறுவனங்கள் அதில் பணியாற்றி வருகின்றன. அடிடாஸின் தளத்தில் வீராங்கனைகளுக்கான மாதவிடாய் சிறப்பு ஆடைகள் கிடைக்கின்றன.
தளத்தில் எழுதப்பட்ட தகவல்களின்படி, உறிஞ்சக்கூடிய அடுக்கு மற்றும் கசிவு ஏற்படாத சவ்வு போன்றவை அந்த ஆடைகளில் பயன்படுத்தப்படுகிறது, இதனால் கசிவு ஏற்படாது. பிபிசி ஸ்போர்ட்ஸ் உடனான உரையாடலில், அடிடாஸ் பெண்களின் சிறப்புத் தேவைகளை மனதில் கொண்டு தயாரிப்புகளை உருவாக்குவதாகத் தெரிவித்தது.
விம்பிள்டனின் கருத்து
விம்பிள்டனைப் பொருத்தவரை, பெண் வீரர்களின் பிரச்னைகள் பல, ஆனால், எல்லா வீரர்களும் வெளிப்படையாக பேசுவதற்கு முன்வருவதில்லை. சில சமூகத்தின் பல பிரிவுகளில் பீரியட்ஸ் போன்ற பிரச்னைகள் இன்னும் விவாதத்திற்கு வரவில்லை. இதை ஒரு சாக்காகச் சொல்வதாகக் குற்றம் சாட்டப்படவும் சிலர் விரும்புவதில்லை.
இருப்பினும், விம்பிள்டன் சார்பில் அறிக்கை ஒன்றை அளித்து, "பெண்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதையும், பெண் வீரர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வசதிகள் வழங்கப்படுவதையும் நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். விம்பிள்டனில் விளையாடும் வீரர்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்வது எங்களுக்கு முக்கியம்" என்று விளக்கியுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் டென்னிஸ் விளையாடிய தாருகா ஸ்ரீவாஸ்தவா, இந்த முழு விவாதத்தையும் பின்வருமாறு சுருக்கமாகக் கூறுகிறார், "விம்பிள்டனில் வெள்ளை ஆடை அணிவது பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று பலர் வாதிடுகின்றனர். ஆனால், நாம் கேட்க வேண்டிய கேள்வி, மைதானத்தில் இறங்கி விளையாடும் ஒரு வீராங்கனையின் சௌகரியத்தை விட, இந்தப் பாரம்பரியம் பெரியதா என்பது தான்".
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்