மித்தாலி ராஜ் ஓய்வு: இந்திய பெண்கள் கிரிக்கெட் ராணியின் சாதனைகள் என்னென்ன?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மித்தாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

23 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத இடத்தில இருந்த மித்தாலி குறித்த சில முக்கிய தகவல்கள் இங்கே.

1. 39 வயதாகும் மித்தாலி ராஜ், 232 ஒருநாள் போட்டிகளிலும், 89 டி20 போட்டிகளிலும், 12 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

2. 1999ல் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானபோது இவருக்கு வயது 16 மட்டுமே. அயர்லாந்துக்கு எதிராக அறிமுகமான தமது முதல் போட்டியிலேயே ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் எடுத்தார்.

3. மித்தாலி ராஜ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7,805 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவரது சராசரி 50.68.

4. ஒருநாள் கிரிக்கெட்டில் 64 அரை சதங்களும் ஏழு சதங்களும் எடுத்துள்ளார்.

5. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு 155 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

6. ஒருநாள் போட்டிகள், டெஸ்ட், டி20 கிரிக்கெட் என மூன்றிலும் சேர்ந்து 10,868 ரன்கள் குவித்துள்ளார் மித்தாலி. உலக அளவில் பெண்கள் கிரிக்கெட்டில் இதுதான் ஒருவரின் அதிகபட்ச ரன்கள்.

7. 2019இல் டி20 கிரிக்கெட்டில் இருந்து இவர் ஓய்வுபெற்றார். டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்த பெண் கிரிக்கெட்டர் மித்தாலி ராஜ்தான்.

8. 2005இல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இவர் பொறுப்பேற்றார். இரு முறை (2005இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2017இல் இங்கிலாந்துக்கு எதிராக) தமது அணியை உலக்கோப்பை இறுதிப்போட்டி வரை வழிநடத்திய பெருமை உடைய ஒரே இந்திய கேப்டன் இவர்தான். ஆண்கள் கிரிக்கெட், பெண்கள் கிரிக்கெட் ஆகிய இரண்டிலும் இதுதான் இந்திய அளவிலான சாதனை.

9. 2017இல் விஸ்டன் லீடிங் உமன் கிரிக்கெட்டர் இன் தி வேர்ல்டு (உலகின் முன்னணி பெண் கிரிக்கெட் வீரர்) என்று மித்தாலி ராஜ் கௌரவிக்கப்பட்டார்.

10. 2002ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மித்தாலி எடுத்த 214 ரன்கள், பெண்கள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ஒன்றில் எடுக்கபட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: