சிஎஸ்கே சொதப்பல் தொடருமா? ஜடேஜாவின் வியூகங்கள் பலிக்குமா? - ஓர் அலசல்

    • எழுதியவர், அஷ்ஃபாக்
    • பதவி, பிபிசி தமிழ்

ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவுவது இது 2வது முறை. 2010ல் தோனி தலைமையில் விளையாடிய சென்னை அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ஆனால் கேப்டன் தோனியின் வியூகத்தால் அந்த தொடரில் இறுதிப்போட்டி வரை சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் முறையாக கோப்பையையும் வென்று ஆச்சரியப்படுத்தியது.

2010க்குப் பிறகு தற்போது மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து 4வது தோல்வியை பதிவு செய்திருக்கிறது. நடப்பு சாம்பியன் சி.எஸ்.கேவை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்துள்ளது சன் ரைசர்ஸ் ஐதராபாத்.

ஜொலித்த தமிழக பவுலர்கள்

நவி மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத், சென்னையை பேட்டிங் ஆட அழைத்தது. தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும் 25 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது சி.எஸ்.கே. வாஷிங்டன் சுந்தர் சுழலில் 15 ரன்களில் உத்தப்பா விடைபெற்றார்.

தொடரின் முதல் 3 போட்டிகளில் தடுமாறிய ருத்துராஜ் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 16 ரன்களில் நடராஜனின் துல்லியமான பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மொயின் அலி 2 ரன்களில் அரைசதத்தை நழுவ விட, அம்பத்தி ராயுடு, ஜடேஜா ஆகியோர் கணிசமான ரன்களை சேர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்.எஸ். தோனி 3 ரன்களில் வெளியேறினார்.

சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஐதராபாத் அணி தரப்பில் தமிழக வீரர்களான நடராஜனும் வாஷிங்டன் சுந்தரும் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி கவனம் ஈர்த்தனர்.

குறிப்பாக இருவரின் பந்துவீச்சில்தான் சி.எஸ்.கேவின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். 155 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் 18வது ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

50 பந்துகளில் 3 சிக்சர் 5 பவுண்டரிகள் விளாசி 75 ரன்கள் சேர்த்து ஐதராபாத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடரும் சி.எஸ்.கேவின் சொதப்பல்

ஐதராபாத்தின் முதல் விக்கெட்டை எடுக்க சென்னை பவுலர்கள் கடுமையாக திணறினர். பவர் பிளேயில் இந்த முறையும் சென்னை அணியால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. 154 ரன்கள் என்பது வலுவான இலக்கு அல்ல. கடந்த சீசனில் சிறப்பாக ஜொலித்த ருத்துராஜ் கெய்க்வாட், இந்த முறை நிலைத்து ஆட முடியாமல் தொடர்ந்து திணறுவது அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.

டு பிளெசிஸ் இல்லாததும் ஒருவகையில் சென்னையை பாதித்து வருகிறது. முதல் 4 பேட்டர்கள் கணிசமான ரன்களை விளாசினால் மட்டுமே பெரிய ஸ்கோரை எட்ட முடியும். பந்துவீச்சில் எதிரணியின் விக்கெட்களை சென்னை அணி வேகமாக வீழ்த்த வேண்டும். பவர் பிளேயில் முக்கிய விக்கெட்களை வீழ்த்துவதில் தீபக் சஹர் வல்லவர்.

தற்போது அவரும் அணியில் இல்லாதது சென்னைக்கு கூடுதல் நெருக்கடியை அளித்துள்ளது. கடந்த போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய பிரிட்டோரியஸை இந்த போட்டியில் சி.எஸ்.கே. அணியில் சேர்க்காததும் பின்னடைவாக கருதப்படுகிறது.

சென்னை அணி எஞ்சிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே பிளே ஆப்க்குள் நுழைய முடியும். 2020ல் சென்னை அணி சந்தித்த மோசமான தோல்விகளை போன்று இந்த முறையும் நிகழாமல் தவிர்க்க கேப்டன் ஜடேஜாவின் வியூகங்கள் பலிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :