You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CSK Vs LSG ஐபிஎல் 2022: ஒரே ஓவரில் 25 ரன்கள் கொடுத்து வெற்றியை நழுவவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
- எழுதியவர், அஷ்ஃபாக்
- பதவி, பிபிசி தமிழ்
23 பந்துகளில் 55 ரன்கள். நடப்பு ஐபிஎல் சீசனில் வேகமாக அரைசதம் விளாசிய பெருமை. கேம் சேஞ்சர், ஆட்டநாயகன் விருது இப்படி எவின் லூயிஸின் க்ளாஸான ஆட்டத்தால் சி.எஸ்.கே.வின் வெற்றி கானல் நீராகிவிட்டது.
மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 7வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வென்ற லக்னோ அணி சென்னையை பேட்டிங் ஆட வைத்தது. அடுத்தடுத்து 2 பவுண்டரிகளுடன் ஆக்ஷன் ஆட்டத்தை தொடங்கினார் உத்தப்பா.
210 ரன்கள் குவித்த சென்னை அணி
கடந்த சீசனில் உத்தப்பா 3 அல்லது 4வது இடத்தில்தான் களமிறங்கினார். ஆனால் இன்றைய ஆட்டத்தில் உத்தப்பாவை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினார் ஜடேஜா. அதன் விளைவு 25 பந்துகளில் அரைசதம் விளாசினார் உத்தப்பா. ருத்துராஜ் கெய்க்வாட் 1 ரன்னில் விடைபெற்றார். அவரை தொடர்ந்து மொயின் அலி 35, ராயுடு 27, ஷிவம் துபே 49, ஜடேஜா 17, தோனி 16 ரன்கள் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய இளம் வீரர் ரவி பிஷ்னாய் 4 ஓவர்களில் 2 விக்கெட்களை கைப்பற்றி வெறும் 24 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 211 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் கடினமான இலக்கை துரத்தியது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ். ஓபனிங் பேட்ஸ்மேன்கள் கே.எல்.ராகுலும் - டி காக்கும் தொடக்கம் முதலே பட்டையக் கிளப்பினர்.
பிரிட்டோரியஸ் எனும் துருப்புச் சீட்டு
பிராவோ, மொயின் அலி, ஜடேஜா உள்ளிட்ட அனுபவ வீரர்களால் கூட முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை. 5 பவுலர்கள் மாறிமாறி பந்து வீசினர். பவுண்டரியும் சிக்சருமாக பந்து பறந்ததுதான் மிச்சம். கடைசி துருப்புச் சீட்டாக அறிமுக ஆட்டக்காரர் பிரிட்டோரியசை கொண்டு வந்தார் கேப்டன் ஜடேஜா. வெறும் ரென்டே பந்துகளில் கே.எல்.ராகுலின் விக்கெட்டை வீழ்த்தி வேலையை கச்சிதமாக முடித்துக் கொடுத்தார் பிரிட்டோரியஸ். ஒருவழியாக 99 ரன்களில் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. இருந்தாலும் டி காக்கின் ஆட்டம் முடிவுக்கு வந்தபாடில்லை. மீண்டும் ஜடேஜாவுக்கு பிரிட்டோரியஸ் தேவைப்பட்டார். 61 ரன்களில் டிகாக்கின் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார். அத்துடன் லக்னோவின் ரன் புயல் கட்டுக்குள் வந்துவிட்டதாக ரசிகர்கள் எண்ணியிருக்கலாம். ஆனால் அதுதான் நடக்கவில்லை. களத்திற்குள் இறங்கிய எவின் லூயிஸ், 23 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகள் என 55 ரன்கள் விளாசினார்.
கேப்டன் ஜடேஜாவின் தவறு
ஜடேஜா செய்த பெரிய தவறு 19வது ஓவரை ஷிவம் துபே வசம் வழங்கியது. முக்கியமான டெத் ஓவரை பரிட்சயம் இல்லாத ஷிவம் துபே வீச, 2 சிக்சர் 2 பவுன்டரிகள் என 25 ரன்களை ஒரே ஓவரில் சேர்த்து வெற்றியை உறுதி செய்தது லக்னோ அணி. மும்பை போன்ற பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் சேசிங் செய்யும் அணி, விரைவாக விக்கெட்களை கைப்பற்ற வேண்டும். தீபக் சஹர் அணியில் இல்லாதது சென்னைக்கு டெத் ஓவர் பந்துவீச்சில் பின்னடைவு தந்திருக்கிறது. 30 ரன்கள் எடுத்திருந்தபோது டிகாக்கின் கேட்சை மொயின் அலி தவறவிட்டது. 36 ரன்கள் எடுத்திருந்தபோது கே.எல்.ராகுலின் கேட்சை தேஷ்பன்டே நழுவவிட்டது என 2 முக்கிய கேட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட விலை 99 ரன்கள்.
தோல்விக்குப் பின்னர் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ஜடேஜா, "எங்களுக்கு நல்ல தொடக்கம் அமைந்தது. ராபி மற்றும் ஷிவம் துபே அற்புதமாக விளையாடினர். போட்டியை வெல்ல வேண்டுமானால் பீல்டிங்கில் முக்கியமான கேட்சகளை பிடிக்க வேண்டும். பந்து கையில் ஒட்டவில்லை. அடுத்த முறை ஈரமான பந்தில் பயிற்சி செய்ய வேண்டும். டாப்-சிக்ஸ் மற்றும் மிடில் ஓவர்களில் நாங்கள் அற்புதமாக பேட்டிங் செய்தோம். ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் நன்றாக இருந்தது," என தெரிவித்தார்.
பின்னர் பேசிய லக்னோ கேப்டன் கே.எல் ராகுல், "லூயிஸ் பேட்டிங்கில் கடினமாக பயிற்சி பெற்றிருக்கிறார். அவரது டைமிங் சிறப்பாக உள்ளது. நிறைய வீரர்கள் நல்ல ஃபாமில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது," என்று தெரிவித்தார்.
கேப்டன்சி பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து 2வது முறையாக தோல்வியை சந்தித்திருக்கிறார் ஜடேஜா, 3வது தோல்வியை தவிர்க்க, வரும் ஞாயிறு அன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்