இந்தியா vs நியூசிலாந்து: ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் முன்னுள்ள சவால்கள் என்ன?

ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோஹித் சர்மா

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையிலான மூன்று டி20 போட்டிகளைக் கொண்ட தொடர் இன்று இரவு 7 மணிக்கு ஜெய்பூரில் தொடங்க உள்ளது. நவம்பர் 19 மற்றும் 21ம் தேதிகளில் ராஞ்சி மற்றும் கொல்கத்தாவில் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற உள்ளன.

டி20 உலக கோப்பையை வெல்லாத இந்திய அணியின் உற்சாகக் குறைவு, புதிய அணித் தலைவர், புதிய பயிற்சியாளர், அடுத்தடுத்து வரும் முக்கிய ஐசிசி கோப்பைகள், அப்போட்டிகளுக்கு முன் கூட்டியே ஒரு வெற்றி அணியை உருவாக்க வேண்டிய அழுத்தம்... என பல சவால்களை எதிர்கொள்ளவிருக்கும் இந்தியா ஏன் இந்த தொடரில் வெல்வது முக்கியம்?

அரை இறுதி கனவை தகர்த்த நியூசிலாந்து

டி20 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்ற பிறகும், நியூசிலாந்தை வென்றால் அரை இறுதிக்குள் நுழைய அதிக வாய்ப்பு இருந்தது. நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்ததால் விராட் கோலியின் கோப்பை கனவு தகரத் தொடங்கியது.

மேலும் நியூசிலாந்தை, ஆப்கானிஸ்தான் தோற்கடித்திருந்தால் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறி இருக்கலாம். அங்கும் நியூசிலாந்து ஆப்கானிஸ்தானை வென்று, கோலியின் நீலப் படையை இந்தியாவுக்கு விமானம் ஏற்றி வழியனுப்பிவைத்தது.

இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை நேரடியாக தகர்த்த அணி என்பதால், இப்போட்டி ஒரு பலப் பரிட்சையாகவே பார்க்கப்படுகிறது.

புதிய பயிற்சியாளர், புதிய கேப்டன்

ரோஹித் மற்றும் டிராவிட்

பட மூலாதாரம், BCCI, Twitter

படக்குறிப்பு, ரோஹித் மற்றும் டிராவிட்

இந்திய டி20 அணியின் புதிய அணித்தலைவராக ரோஹித் சர்மாவும், இந்திய அணியின் தலைமை பயிற்றுநராக ராகுல் டிராவிடின் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா விளையாடும் முதல் போட்டி இது.

மொஹம்மத் அசாருதீன், செளரவ் கங்கூலி, மகேந்திர சிங் தோனி போன்ற சிலருக்கு மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியை சிறப்பாக கையாண்டு வெற்றிகளை குவித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் உட்பட பல நட்சத்திர வீரர்கள் இப்பதவியில் சிறப்பாக செயல்பட முடியாமல் தோல்வி கண்டுள்ளனர். இப்போது ரோஹித்தின் தலைமைப் பண்பு சோதிக்கப்பட உள்ளது.

விராட் கோலி ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை தாங்குவதிலிருந்து கூட விலக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாயின. எனவே ராகுல் டிராவிட் - ரோஹித் சர்மா இணை அதிவிரைவாக ஓரணியாக ஒருங்கிணைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்த வகையிலும் இப்போட்டி இந்திய தரப்பில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா வெற்றி பெறுவதைத் தாண்டி, அணியில் வீரர்கள் தங்களுக்கான இடத்தை வலுப்படுத்திக் கொள்ளவும், நிலைநிறுத்திக்கொள்வதும் பெரும் சவாலான காரியம் என்பதால், ரோஹித் - டிராவிட் அதையும் உறுதி செய்ய வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர்.

அடுத்த இரு ஆண்டுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் என பல முக்கிய ஐசிசி கோப்பை போட்டிகள் வரும் சூழலில், இந்த போட்டியில் இந்தியா வென்றால், இந்திய வீரர்களின் துவண்டமனநிலையையும், உற்சாகத்தையும் மீட்டெடுக்க உதவும்.

முக்கிய வீரர்கள் இல்லை

ராகுல் டிராவிட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் டிராவிட்

ரோஹித் தலைமையிலான அணியில் விராட் கோலி, ரவீந்த்ர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீட் பும்ரா, ஷர்துல் தாகூர், மொஹம்மத் ஷமி என பல முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

மிக முக்கியமாக இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங் கடந்த பல போட்டிகளில் பலவீனமாக இருப்பதைக் காண முடிகிறது. அது நியூசிலாந்துக்கு எதிராக களமிறங்க உள்ள வீரர்கள் பட்டியலிலும் பார்க்க முடிகிறது.

யார் ஐந்தாவது, ஆறாவது இடத்தில் களமிறங்கி அணியை கரை சேர்ப்பார்கள் என்பது இப்போது வரை உறுதி செய்யப்படாமலேயே உள்ளது.

இந்த தொடரிலும் இந்தியா வெல்லவில்லை எனில், டி20 உலகக் கோப்பையின் போது எழுந்தது போல அணி தேர்வு குறித்த சர்ச்சைகள் மீண்டும் எழும், அது அணியின் ஒட்டுமொத்த உற்சாகத்தையும் கேள்விக்குள்ளாக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :