You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்கன் தாலிபன் கொலை மிரட்டலுக்கு அஞ்சி தலைமறைவாக வாழும் கிரிக்கெட் வீராங்கனைகள்
அசெல் மற்றும் அவரது சர்வதேச கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சகாக்கள் இப்போது தலைமறைவாக உள்ளனர். அசெல் என்பது என்பது அவருடையை உண்மையான பெயர் அல்ல. அதிகாரத்துக்கு வந்ததுமே தாலிபன்கள் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளை வலைவீசித் தேடி வந்தனர்.
"கிரிக்கெட் அல்லது பிற விளையாட்டுகளை ஆடும் எந்தப் பெண்ணும் இப்போது பாதுகாப்பாக இல்லை," என்று கூறுகிறார் அசெல். "காபூலில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது." என்கிறார் அவர்.
"நாங்கள் வாட்ஸ்அப்பில் ஒரு குழுவை வைத்திருக்கிறோம், ஒவ்வோர் இரவிலும் நாங்கள் எங்கள் பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறோம். என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய திட்டங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். எங்களுக்கு இப்போது நம்பிக்கையே இல்லை."
ஆகஸ்ட் 15-ஆம் தேதி தாலிபன்கள் காபூலுக்குள் நுழைந்ததில் இருந்து அசெல் அவரது வீட்டுக்கு வெளியே ஒருபோதும் செல்லவில்லை. கிரிக்கெட் உபகரணங்களைப் பரணில் போட்டுப் பூட்டி விட்டார். காபூலில் தன்னுடைய அணியைச் சேர்ந்த சக வீராங்கனைகள் எப்படிக் குறி வைக்கப்படுகிறார்கள் என்பதை அவரே விளக்குகிறார்.
"அவர்கள் கிரிக்கெட் விளையாடும் கிராமத்தில், அவர்களை அறிந்த சிலர் தாலிபன்களுக்காக வேலை செய்கிறார்கள். தலிபான்கள் காபூலைக் கைப்பற்றிய பிறகு, 'நீங்கள் மீண்டும் கிரிக்கெட் விளையாட முயன்றால் நாங்கள் வந்து உங்களைக் கொன்றுவிடுவோம்' என்று அவர்கள் மிரட்டினார்கள்" என்று அசெல் கூறுகிறார்.
இன்னொரு வீராங்கனையின் பெயர் தக்வா. இதுவும் மாற்றப்பட்ட பெயர்தான். கடந்த பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியுடன் இருப்பவர். காபூல் தாலிபன்களிடம் வீழ்ந்ததும் அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். அதற்கு அவர் நிறையவே சிரமப்பட வேண்டியிருந்தது. தப்பிச் செல்வததற்கு முன்னதாக ஒவ்வொரு வீடாக தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். தாலிபன்கள் விட்டுவிடவில்லை. அவரது தந்தையைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருக்கிறார்கள். தம்மிடம் அவர் பேசுவதில்லை என்று கூறியதால் தக்வாவை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
"என்ன நடந்தது என்று நான் நினைத்துப் பார்க்கவே விரும்பவில்லை" என்கிறார் தக்வா. "தாலிபன்கள் காபூலுக்கு வந்தபிறகு ஒரு வார காலமாக நான் எதுவும் சாப்பிடவேயில்லை, தூங்கவும் இல்லை"
"நான் என்னைப் பற்றி மட்டும் சிந்திக்கவில்லை, எங்களது அணியில் ஆடும் பெண்களைப் பற்றி பெரிதும் கவலைப்படுகிறேன். அவர்களில் பலர் வாழ்க்கையும், படிப்பையும் தியாகம் செய்கிறார்கள். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதற்காக சிலர் திருமணம்கூடச் செய்து கொள்ளவில்லை. அவர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது"
பிபிசியிடம் பேசிய மற்றொரு முன்னாள் வீராங்கனையின் பெயரை ஹரீர் என்று வைத்துக் கொள்வோம்.
பெண்களுக்கு கிரிக்கெட் என்பது விக்கெட், ரன்கள் மட்டுமல்ல..
"ஆப்கானிஸ்தான் பெண்ணாக கிரிக்கெட் விளையாடுவது என்பது விக்கெட்டுகளை எடுப்பது மற்றும் ரன்கள் அடிப்பது ஆகியவற்றையெல்லாம் கடந்தது" என்கிறார் ஹரீர்.
"நான் விளையாடும்போது நான் ஒரு வலிமையான பெண்ணாக உணர்கிறேன், அது நம்பிக்கையளிக்கிறது, என்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்"
"எதையும் செய்யக்கூடிய, தன் கனவுகளை நனவாக்கும் ஒரு பெண்ணாக என்னைப் பற்றிக் கற்பனை செய்து கொள்ள முடிந்தது"
ஆனால் ஹரீருக்கும் ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் அந்தக் கனவுகள் முடிவுக்கு வந்துவிட்டன.
ஓராண்டுக்கு முன்பு கூட அவர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். இப்போது அவர்கள் தங்களுடைய பாதுகாப்பை எண்ணி அஞ்சுகிறார்கள். தாங்கள் நம்பிய விளையாட்டு அதிகாரிகளும் தங்களைக் கைவிட்டுவிட்டதாகக் கருதுகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் எழுச்சியும் வளர்ச்சியும் ஒரு கற்பனைக் கதை போலத்தான் இருக்கும். விளையாட்டு மீதான தடையை தாலிபன்கள் நீக்கிய பிறகு 2001-ஆம் ஆண்டில்தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆப்கானிஸ்தான் அணியை அங்கீகரித்தது. தாலிபன்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு கால்பந்து போன்ற பிற விளையாட்டுகளுடன் கிரிக்கெட்டும் வளரத் தொடங்கியது.
மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரே சந்தர்ப்பம் விளையாட்டு
"கடந்த 20 வருடங்களில் போர், தற்கொலை தாக்குதல்கள் ஆகியவைதான் அதிகம். எங்களுக்கு பல பிரச்சனைகள் இருந்தன. ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியாக இருந்த ஒரே சந்தர்ப்பம்... அவர்கள் உணர்வுப்பூர்வமாக காணப்பட்டது... விளையாட்டின் போதுதான்" என்கிறார் பிபிசி பாஷ்தோ ஆசிரியர் எமல் பசார்லி.
"விளையாட்டு மட்டுமே மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு நேரத்தையும் இடத்தையும் கொடுத்தது. அந்த நேரத்தில் மட்டும் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் மறந்துவிட முடிந்தது"
கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் வேட்கை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. ஆண்கள் அணி உலக அரங்கில் ஒரு மாபெரும் எழுச்சியைக் காட்டியது. ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதி பெற்றபோது நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் அரங்கேறின. 2017 இல், டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. ரஷீத் கான் மற்றும் முகமது நபி போன்ற வீரர்கள் சர்வதேச நட்சத்திரங்களாகத் திகழ்கிறார்கள். நாடு முழுவதும் போற்றப்படுகிறார்கள்.
ஆண்கள் அணியைப் போல பெண்கள் அணிக்கு எளிதான பாதை இருக்கவில்லை. ஆப்கானிஸ்தானின் முதல் தேசிய மகளிர் கிரிக்கெட் அணி 2010 இல் உருவாக்கப்பட்டது. அப்போதே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.
தொடக்க ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) பெண்கள் அணி பல சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை அனுமதிக்கவில்லை. "தாலிபன்களிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வருவதாக" அதற்கு காரணம் கூறப்பட்டது.
2012 ஆம் ஆண்டில் தஜிகிஸ்தானில் நடந்த ஆறு அணிகள் பிராந்திய போட்டிக்காக அந்த அணி பயணம் செய்தது. அங்கு வெற்றியும் பெற்றார்கள். ஆனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணி முடங்கியது. தலிபன்கள் அச்சுறுத்துவதாக ஏசிபி மீண்டும் கூறியது.
அணி கலைக்கப்பட்ட போதிலும், சிறுமிகளும் இளம் பெண்களும் ஆப்கானிஸ்தான் முழுவதும் தற்காலிக மைதானங்களில் விளையாடிக் கொண்டிருந்தனர். பெண்களுக்கான போட்டிகளை நடத்துவதற்கு ஒரு சிறிய குழு ஏசிபியில் இருந்தபோதும் போட்டிகள் ஏதும் நடக்கவில்லை.
பெண்கள் கொண்டாடக்கூடாது
ஏசிபி அமைப்பிலேயே பலர் ஆதரவளிக்கவில்லை என்றும், பெண்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டால் மட்டுமே அவர்களுக்கு போட்டிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள் என்றும் கூறுகிறார் ஹரீர். ஆடுகளத்துக்கு வெளியே இருக்கும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பெண்களுக்குப் பாடம் எடுப்பதையே ஏசிபி அதிகாரிகள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
"நான் ஒரு பந்து வீச்சாளர், நான் ஒரு விக்கெட் எடுக்கும்போது என்னால் கத்த முடியாது, நான் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டவும் முடியாது ஏனென்றால் ஆண்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்" என்று அவர் கூறுகிறார்.
"நான் என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். என் அணி வீராங்கனைகள் சிறப்பாகச் செயல்படும்போது அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப முடியாது. ஏனென்றால் எதற்காகவும் கொண்டாடக் கூடாது, கத்தவோ, போஸ் கொடுக்கவோ கூடாது என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது"
ஒரு கட்டத்தில் ஆண்கள் அணி பிரகாசிக்கத் தொடங்கியதால், பெண்கள் விளையாட்டுக்கும் ஏசிபி முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. 2017-ஆம் ஆண்டில் ஐசிசியின் அங்கீகரிக்கப்பட்ட பெண்கள் கிரிக்கெட் அணிகளுள் ஒன்றாக ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. நவம்பர் 2020 இல் 25 பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இது நடந்தது என்னவோ 10 மாதங்களுக்கு முன்புதான். ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய விடியல் பிறந்ததாக அனைவரும் கொண்டாடினார்கள். ஆனால் அந்த நம்பிக்கை குறுகிய காலமே நீடித்திருக்கிறது.
1996 முதல் 2001 வரையிலான ஆட்சியின்போது சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கல்வியைத் தடை செய்தார்கள். பெண்கள் வேலை செய்ய முடியாது. ஆண் குடும்ப உறுப்பினரின் துணை இல்லாமல் வெளியே செல்லவும் முடியாது.
இப்போது தாங்கள் மிதவாதிகள் என்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்க தாலிபன்கள் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனாலும் பெண்கள் விளையாட்டுக்கு அவர்கள் அங்கீகாரம் அளிப்பதற்கு வாய்ப்புக் குறைவு.
ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தாலிபன்கள் அனுதியளித்துவிட்டனர். வரும் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவுடன் ஹோபர்ட் நகரில் நடக்க இருக்கும் போட்டிகளில் ஆண்கள் கிரிக்கெட் அணி பங்கேற்க இருக்கிறது. ஆனால் பெண்கள் அணிக்கு வாய்ப்பு வழங்குவதற்கான சாத்தியம் இல்லை என்கிறார் ஏசிபியின் தலைமைச் செயல் அதிகாரி ஹமீத் ஷின்வாரி. இது ஐசிசி உறுப்பினர்களுக்கான விதிமுறைகளை மீறுவதாக இருக்கும்.
அண்மையில் ஆப்கானிஸ்தானில் இருந்து 50 விளையாட்டு வீராங்கனைகளை ஆஸ்திரேலிய அரசு விமானம் மூலமாக மீட்டது. அதைப் போல தங்களையும் தாலிபன்களிடம் இருந்து யாராவது காப்பாற்றுவார்கள் என்று ஆப்கானிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியினர் நம்புகின்றனர்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கால்பந்து வீரர்கள் மற்றும் பிற விளையாட்டு வீரர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக கால்பந்து நிர்வாக அமைப்பான ஃபிபா கூறியுள்ளது.
"நாங்கள் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம், நிலைமையை கண்காணித்து எங்கள் ஆதரவை வழங்கியிருக்கிறோம்" என்று ஐசிசியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
ஆனால் ஐசிசி ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் வீராங்கனைகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஏசிபி அவர்களின் நலனில் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்றும் கூறுகிறார் தக்வா.
"ஐசிசி எங்களுக்கு ஒருபோதும் உதவாது, அவர்கள் எப்போதும் ஏமாற்றமடைய வைக்கிறார்கள். ஏசிபியின் புதிய தலைவர் போன்ற மகளிர் கிரிக்கெட்டுக்கு எதிரானவர்களுடன்தான் ஐசிசி பேசிக் கொண்டிருக்கிறது" என்கிறார் அவர். தாலிபன்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு ஏசிபியின் தலைவராக நியமிக்கப்பட்ட அஸிஸுல்லா ஃபஸ்லி பற்றி அவர் குறிப்பிட்டார்.
ஏசிபி இன்னும் பெண்கள் கிரிக்கெட்டை ஆதரிக்கிறதா என்று கேட்டதற்கு,"அதை வருங்கால அரசுதான் முடிவு செய்யும்." என்று கூறினார் ஷின்வாரி.
நாட்டில் பெண்களுக்கு அபாயகரமான சூழல் நிலவிய போதும், தங்கள் அணியினருடன் மீண்டும் இணயை முடியும் என்று நம்புகிறார் அசெல். எதிர்காலத்திற்கான தனது கனவுகளைப் பற்றி பேசும் போது ஹரீருக்கு உற்சாகம் பிறக்கிறது.
"நான் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக இருக்க விரும்புகிறேன்," என்று அவர் கூறுகிறார்.
"நான் மற்றவர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வலுவான ஆப்கானிய பெண்ணாக இருக்க விரும்புகிறேன், அவ்வளவுதான்."
"ஆப்கானிய பண்பாட்டில், பெண்களுக்கான விளையாட்டை பாதிக்கும் தடைகள் உள்ளன. பெண்கள் பலவீனமானவர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாடும் வகையில் கட்டமைக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள். பெண்கள் என்றால் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்றெடுத்து, வீட்டு வேலைகளைச் செய்து, குழந்தைகளை வளர்க்க வேண்டும். தங்கள் கணவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்." என்கிறார் அசெல்.
"எனது குடும்பத்திலும், சில உறவினர்கள் நான் விளையாடக் கூடாது என்று கூறுகிறார்கள், இஸ்லாமிய கலாசாரம் பெண்ணை கிரிக்கெட் விளையாட அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் நான் விளையாட விரும்புகிறேன்"
"எங்களின் நிலைமை மோசமாக உள்ளது. சுவாசித்துக் கொண்டிருப்பதால் நம்பிக்கை இன்னும் இருக்கிறது. நாட்டை விட்டு வேறு எங்காவது அழைத்துச் செல்லப்பட்டால் நாங்கள் மீண்டும் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்குவோம்."
"எங்கள் கனவுகளை நாங்கள் விட்டுவிட மாட்டோம், இன்ஷா அல்லாஹ்! (அல்லாஹ் விரும்பினால்)"
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்