You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீரஜ் சோப்ரா டோக்யோவில் சாதனை: ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா.
ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதக்கங்களைப் பெற்றதில்லை. மில்கா சிங், பி.டி. உஷா ஆகியோர் தடகளத்தில் மிகக் குறைந்த வேறுபாட்டில் பதக்கங்களைத் தவற விட்டனர்.
அந்த நூற்றாண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. டோக்யோ ஒலிம்பிக்கில் அவர் ஈட்டி எறிந்த அதிகபட்சத் தொலைவு 87.58 மீட்டர்.
ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா முதல் மூன்று முயற்சிகளிலுமே தங்கப் பதக்கத்துக்கான நிலையைத் தக்க வைத்துக் கொண்டார்.
சிறிய வேறுபாட்டால் ஒலிம்பிக் பதக்கத்தை இழந்த மில்கா சிங் உள்ளிட்ட அனைத்து தடகள வீரர்களுக்கும் தமது தங்கப் பதக்கத்தை அர்ப்பணம் செய்வதாக ஒலிம்பிக் தங்கம் வென்ற பின் நீரஜ் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு 'ட்ரேக்' தமக்கு கடவுள் போன்றது என்றும் போட்டிக்கு பிறகு அதன் முன் தலை வணங்கியதாகவும் அவர் கூறினார்.
தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் மாநில அரசு சன்மானம் அறிவித்துள்ளது.
நீரஜ் சோப்ரா சாதனையைப் பாராட்டி 6 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் மனோகர்லால் கத்தார் அறிவித்துள்ளார்.
இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர்
வழக்கமாக 90 மீட்டர் தொலைவைத் தாண்டி எறியும் ஜெர்மனி ஜோகன்னஸ் வெட்டர் தனது முதல் முயற்சியில் 82 மீட்டர் தொலைவு மட்டும் எட்டினார். அடுத்த முயற்சி ஃபவுலாக அமைந்ததால் தொடர்ந்து பின்தங்கினார். மூன்று முயற்சிகளின் முடிவில் முதல் 8 இடங்களைப் பிடிக்க முடியாததால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.
அதே நேரத்தில் தனது இரண்டாவது முயற்சியில் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தனது நிலையை மேம்படுத்திக் கொண்டார் நீரஜ் சோப்ரா. முதல் மூன்று முயற்சிகளிலும் நீரஜ் சோப்ராவின் ஈட்டி எறியும் உத்தியில் எந்தத் தவறும் ஏற்படவில்லை.
முதல் மூன்று முயற்சிகளில் நீரஜ் சோப்ராவின் தொலைவை வேறு எந்த வீரராலும் எட்ட முடியவில்லை. போட்டியாகக் கருதப்பட்ட வெட்டல் வெளியேறிய நிலையில், ஜெர்மனியின் மற்றொரு வீரரான ஜூலியன் வெபர் மற்றும் செக் குடியரசின் விட்டேஸ்லேவ் வெஸ்லி ஆகியோர் மட்டுமே 85 மீட்டர் தொலைவுக்கு அதிகமாக வீசியிருந்தனர்.
ஒலிம்பிக் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் மொத்தம் 12 பேர் பங்கேற்பார்கள். அவர்களுக்கு முதலில் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் அதிகபட்சத் தொலைவு கணக்கில் கொள்ளப்படும்.
மூன்று முயற்சிகள் முடிந்த பிறகு முதல் எட்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு மேலும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டு மொத்தமாக சிறந்த தொலைவு கணக்கில் கொள்ளப்படும்.
முதல் மூன்று முயற்சிகளில் நீரஜ் சோப்ராவைத் தவிர வேறு யாரும் 86 மீட்டர் தொலைவைக்கூட எட்டவில்லை. ஆனால் அதற்கடுத்த மூன்று முயற்சிகளில் செக் குடியரசின் மற்றொரு வீரரான ஜேக்கப் 86.67 மீட்டர் தொலைவுக்கு வீசி நீரஜ் சோப்ராவை நெருங்கினார்.
அதே நேரத்தில் நீரஜ் சோப்ராவின் அடுத்தடுத்த இரண்டு முயற்சிகளும் ஃபவுலாக முடிந்தன. அதனால் அவரால் தனது நிலைமை மேம்படுத்திக் கொள்ள முயவில்லை. எனினும் தங்கப் பதக்கத்துக்கான தனது நிலையை அவர் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தார்.
கடைசி வாய்ப்பில் எந்த அதிர்ச்சியான முடிவுகளும் வரவில்லை. நிலைகளும் மாறவில்லை. ஜெர்மனியின் வெபரால் எவ்வளவோ முயன்றும் பதக்கத்துக்கான போட்டிக்குள் வர இயலவில்லை.
தொடக்கத்தில் இருந்து இறுதிவரை முதல் இடத்தில் இருந்த நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தார். செக் குடியரசு நாட்டின் ஜேக்கப் மற்றும் வெஸ்லி ஆகியோர் முறைய வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.
போட்டி தொடங்கும்போது 97 மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு எறிந்து சாதனை படைத்திருந்த ஜெர்மனியின் ஜோகன்னஸ் வெட்டலுக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று பலரும் கணித்திருந்தனர். ஆனால் அவர் தொடக்கத்தில் இருந்தே தடுமாறினார்.
அதிர்ச்சியளிக்கும் வகையில் முதல் எட்டு இடங்களுக்குள்கூட அவரால் வரமுடியவில்லை. ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வெல்லும் அவரது கனவு நிறைவேறாமல் போனது.
நீரஜ் சோப்ராவுக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் போட்டி. கடந்த ஒலிம்பிக் போட்டியில் ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர் 90.30 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப்போது வெள்ளிப் பதக்கத்துக்கான தொலைவு 88.24 மீட்டர். கென்யாவின் ஜூலியஸ் யெகோ அந்தத் தொலைவை எட்டியிருந்தார்.
ஆனால் டோக்யோ ஒலிம்பிக்கில் இந்தத் தொலைவை எந்த வீரரும் எட்டவில்லை.
பிற செய்திகள்:
- தலித் கிராம உதவியாளரை காலில் விழ வைத்தாரா ஆதிக்க சாதிக்காரர்? விசாரணைக்கு ஆணை
- பஜ்ரங் புனியா: பள்ளியை தவிர்க்க மல்யுத்தம் பயின்றது முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றது வரை
- பல கோடி ரூபாய் மோசடி செய்து சிக்கிய ஹெலிகாப்டர் பிரதர்ஸ் யார்? அரசியல் பின்னணி என்ன?
- ரவிக்குமார் தஹியா: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2-வது வெள்ளி வென்ற மல்யுத்த வீரன் யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்