நீரஜ் சோப்ரா: டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் தடகள வீரர் - 87.58 மீட்டர் வீசி ஈட்டி எறிதலில் முதலிடம்

    • எழுதியவர், வந்தனா
    • பதவி, பிபிசி இந்திய மொழிகள் டிவி ஆசிரியர்

டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவின் தங்க தாகத்தைத் தணித்துள்ளார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா.

பல ஆண்டுகளாக, ஈட்டி எறிதலில் தனது சிறப்பான திறன் வெளிப்பாட்டால் நீரஜ் அனைவரையும் கவர்ந்தார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், இந்திய கிராண்ட் ப்ரீ -3 இல், அவர் 88.07 மீ தூரத்துக்கு ஈட்டி எறிந்து தனது தேசிய சாதனையைத் தானே முறியடித்தார்.

அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு உலகின் பெரிய தடகள சாம்பியன்ஷிப் ஒன்றில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் மட்டுமே.

நீரஜின் வெற்றிப்பயணம் பானிபட்டில் உள்ள ஒரு சிறிய கிராமத்திலிருந்து தொடங்குகிறது. சிறு வயதிலேயே 80 கிலோ எடையுடன் நீரஜ் மிகவும் உறுதியாக இருந்தார். குர்தா பைஜாமா அணிந்த, நீரஜ் அனைவராலும் சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) என்று அழைக்கப்பட்டார்.

தனது உடலைக் கட்டுக்கோப்பாக ஆக்க, அவர் பானிபட்டில் உள்ள ஒரு மைதானத்திற்குச் சென்று உடற்பயிற்சி செய்யத் தொடங்கினார். மற்றவர்களின் ஆலோசனையின் பேரில், ஈட்டி எறிதலிலும் சிறந்த தேர்ச்சி பெற்றார். அங்கிருந்து அவரது பயணம் தொடங்கியது.

மேலும் சிறந்த வசதிகள் வேண்டி, நீரஜ் பஞ்ச்குலாவுக்குச் சென்றார், முதல் முறையாக அவர் தேசிய அளவிலான வீரர்களை எதிர்கொண்டார், அங்கு சிறந்த வசதிகள் கிடைக்கத் தொடங்கின. அவர் தேசிய அளவில் விளையாடத் தொடங்கியபோது, ​​மோசமான தரத்திலான ஈட்டிக்கு பதிலாக, அவர் கையில் ஒரு நல்ல ஈட்டி கிடைத்தது. மெல்ல மெல்ல, நீரஜின் விளையாட்டில் மாற்றம் ஏற்பட்டது.

2016ஆம் ஆண்டில் பிவி சிந்து மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோரின் பதக்கங்களை இந்தியா கொண்டாடிக் கொண்டிருந்த போது, ​​தடகள உலகில் வேறு ஒரு புதிய நட்சத்திரம் உதயமாகிக் கொண்டிருந்தது.

அதே ஆண்டில், போலந்தில் நடந்த U-20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நீரஜ் தங்கப் பதக்கம் வென்றார்.

விரைவில் இந்த இளம் வீரர் சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். அவர் 86.47 மீட்டர் ஈட்டி எறிந்து கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார், மேலும் 2018ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 88.07 மீட்டர் ஈட்டி எறிந்து தேசிய சாதனை படைத்துத் தங்கப் பதக்கமும் பெற்றார்.

ஆனால் 2019 நீரஜ் சோப்ராவுக்கு மிகவும் சோதனையான ஆண்டாக இருந்தது. தோள்பட்டை காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. பின்னர் 2020-ல்,​​கொரோனா காரணமாக சர்வதேச போட்டிகளை நடத்த முடியவில்லை. காயம் காரணமாக நீரஜ் கஷ்டப்படுவது இது முதல் முறை அல்ல.

2012 ஆம் ஆண்டில், அவர் கூடைப்பந்து விளையாடும்போது, ​​அவருக்கு மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்தக் கையால்தான் அவர் ஈட்டி எறிய வேண்டும். தன்னால் இனி விளையாட முடியாது என்று நினைத்ததாக நீரஜ் கூறினார்.

ஆனால் நீரஜின் கடின உழைப்பு மற்றும் அவரது குழுவினரின் முயற்சியால், அவர் அந்த நிலையிலிருந்து மீண்டார்.

இன்று, அவருக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும் நவீன வசதிகளும் இருக்கின்றன. ஆனால் 2015 வரை, நீரஜ் சொந்தமாகவே பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். அதனால் அவருக்குக் காயம் ஏற்படும் அபாயம் இருந்தது. அதன் பிறகுதான் அவர் நல்ல பயிற்சியாளர்கள் மற்றும் பிற வசதிகளைப் பெறத் தொடங்கினார்.

ரியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற நீரஜ் தவறியதற்குக் காரணம். தகுதி பெறும் கடைசி தேதி கடந்துவிட்ட பிறகே அவர் குறிப்பிட்ட தூரத்திற்கு எறிந்தார். இதனால் அவர் மிகவும் ஏமாற்றமும் மன உளைச்சலும் அடைந்தார். டோக்யோ ஒலிம்பிக்கில் அப்படி நடக்க அவர் விடவில்லை.

ஈட்டி எறிதலில் அவருக்கு ஆர்வம் அதிகம், என்றாலும், பைக் ஓட்டுவதிலும் ஹரியான்வி மொழி பாடல்களிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. பஞ்சாபி பாடல்கள் மற்றும் பப்பு மான் அவரது பிளேலிஸ்ட்டில் உள்ளன.

ஒரு காலத்தில் சைவ உணவு உண்பவராக இருந்த நீரஜ், இப்போது தனது விளையாட்டு காரணமாக அசைவம் சாப்பிட ஆரம்பித்துள்ளார்.

விளையாட்டு வீரர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடித்தே ஆக வேண்டும் என்றாலும் தனக்குப்பிடித்த ஜங்க் ஃபுட் பானி பூரி என்று இவர் கூறுகிறார்.

அவரது நீண்ட முடி காரணமாக, மக்கள் அவரைச் சமூக ஊடகங்களில் 'மௌக்லி' என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். அது அவரது துருதுருப்பின் காரணமாகவும் இருக்கலாம்.

இந்த சுறுசுறுப்பு நீரஜை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வரை கொண்டு வந்துள்ளது. நீரஜூக்கு இப்போது 23 வயது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :