You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
MI vs RCB: 9ஆவது ஆண்டாக முதல் போட்டியில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு, இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் 14-ஆவது தொடர் சென்னையிலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதல் ஆட்டத்திலேயே பெங்களூரு அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில், ஐபிஎல் 13-ஆவது தொடரின் சாம்பியனான மும்பை அணியை தோற்கடித்து தன் வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது.
வெள்ளிக்கிழமை நடந்த இந்த விறுவிறுப்பான போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச தீர்மானித்தது. மும்பை இந்தியன்ஸ் ஒன்பது விக்கெட்டுகளுக்கு 159 ரன்கள் எடுத்த நிலையில், அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எட்டி வெற்றியை சொந்தமாக்கிக் கொண்டு, புள்ளிகள் பட்டியலில் இரு புள்ளிகளைப் பெற்றிருக்கிறது.
இதன் மூலம், ஐபிஎல் தொடர்களின் முதல் போட்டியில் தனது ஒன்பதாவது தோல்வியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்துள்ளது. அதாவது, 2013-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியுற்று வருகிறது.
ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூர் அணியின் ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகனானார்.
முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ரோஹித் சர்மா ரன்கள் 19 ரன்களில் ரன் அவுட் ஆனார். க்ரிஸ் லின், சூர்யகுமார் யாதவ் நிதானமாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்களைக் குவித்தனர்.
சூர்யகுமாரின் விக்கெட் வீழ்ச்சிக்குப் பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் 28 ரன்களைக் குவித்தார். மறு பக்கம் மும்பை இந்தியன்ஸின் விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டிருந்தது பெங்களூரு. 20-வது ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பையின் ரன் குவிப்பை தடுத்தார் ஹர்ஷல் படேல். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது மும்பை.
அடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன் வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களுக்கும், ரஜத் படிடர் 8 ரன்களுக்கும் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். விராட் கோலி - மேக்ஸ்வெல் இணை பொறுப்பாக ஆடி 52 ரன்களைக் குவித்தது.
விராட் கோலியின் விக்கெட் பறிபோன பின் சூழல் பெங்களூரு அணிக்கு அத்தனை சாதகமாக இல்லாமல் இருந்தது. ஆனால் டிவில்லியர்ஸ் களமிறங்கி 27 பந்துகளில் 48 ரன்களைக் குவித்து ஆட்டத்தை பெங்களூருக்குச் சாதகமாக்கினார். இதில் அவர் அடித்த நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம்.
ஹர்ஷல் படேல் எப்படி பெங்களூரின் பந்துவீச்சை பார்த்துக் கொண்டாரோ, அப்படி டிவில்லியர்ஸ் பெங்களூரின் பேட்டிங்கை திறமையாக சமாளித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
அடுத்த ஐபிஎல் போட்டி இன்று மாலை 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன.
பிற செய்திகள்:
- சர்ச்சையாகும் தமிழக ஆளுநரின் நியமனங்கள்: கொந்தளிக்கும் கட்சிகள்
- தீவிரமாகும் கொரோனா பரவல்: தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?
- கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திய உத்தர பிரதேச அரசு மருத்துவமனை ஊழியர்
- இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு
- இரங்கல்: மாட்சிமை பொருந்திய எடின்பரோ கோமகன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: