You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அக்ஸர் பட்டேல்: இங்கிலாந்து அணியை வீழ்த்திய சுழல் - யார் இவர்?
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது இரண்டாவது பேட்டிங் இன்னிங்ஸை விளையாடாமலேயே 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்து தொடரை வென்றது. அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்த பந்துவீச்சாளர்களில் அக்ஸர் படேலும் ஒருவர்.
டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ் என மொத்தம் 5 விக்கெட்டுகளை தன் விரல் சுழலால் வீழ்த்தினார் அக்ஸர்.
இந்த தொடரில் வென்றதால், இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுவிட்டது.
இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் மொஹம்மத் சிராஜ், நடராஜன், ஷர்துல் தாக்கூர் போன்ற சர்வதேச அனுபவம் குறைந்த, புது முக இந்திய வீரர்கள் எப்படி கலக்கினார்களோ, அப்படி, இந்த இங்கிலாந்து தொடரில் கலக்கி இருக்கிறார் அக்ஸர் படேல். இவர் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் களம் கண்டது இந்த தொடரில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டியில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் `வாவ்` சொல்ல வைத்துள்ளார். சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸ் மற்றும் அஹமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மட்டுமே முறையே இரண்டு மற்றும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மீதமுள்ள அனைத்து இன்னிங்ஸிலும் ஐந்து விக்கெட்டுகள் மற்றும் அதற்கு அதிகமாகவே வீழ்த்தி எல்லோரையும் அசரடித்தார். அக்ஸர் படேலின் சுழல் அஹமதாபாத் மைதானத்தைச் சூழ்ந்து இங்கிலாந்தை வீழ்த்தி வீட்டுக்கு அனுப்பிவிட்டது என்றால் அது மிகை இல்லை.
கிட்டத்தட்ட ஒரே தொடரில் இந்தியா முழுக்க இணையத்தில் தேடப்படும் கிரிக்கெட் வீரராகிவிட்டார் 27 வயது அக்ஸர் படேல்.
இவர் எப்படி தொழில்முறை கிரிக்கெட்டுக்குள் வந்தார்?
குஜராத்தில், ஆனந்த் மாவட்டத்தில் பிறந்த அக்ஸர் படேல், இந்தியாவின் சராசரி குழந்தைகளைப் போல கிரிக்கெட் மீது ஒரு வித காதலுடனேயே வளர்ந்தார். கிரிக்கெட்டை தொழில்முறையாக விளையாடி, அந்த காதலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லலாம் என்கிற யோசனை, அக்ஸருக்கு அப்போது இல்லை.
15 வயதாக இருக்கும் போது வேகப்பந்து வீச்சாளராகவும், நல்ல பேட்ஸ்மேனாகவும் இருந்த அக்ஸர் பலராலும் கவனிக்கப்பட்டார். குறிப்பாக அக்ஸரின் தந்தை அவரை கவனித்தார். கிரிக்கெட்டை தீவிரமாக அணுக அவரது தந்தையே ஊக்குவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னுடைய இரண்டாவது முதல் தர (First Class) கிரிக்கெட் போட்டியிலேயே டெல்லி அணிக்கு எதிராக 55 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
2013-ம் ஆண்டு, ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தேர்வானார். ஆனால் பெரிதாக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அந்த அணியில் இருந்த போது ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் என பல மூத்த வீரர்களோடு பழகும் வாய்ப்பு அக்ஸருக்குக் கிடைத்தது.
இந்த வாய்ப்பு அவருக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஜுன்ஜுன்வாலா கூறுகிறார்.
கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணியில் அக்ஸர்
2014-ம் ஆண்டு கிங்ஸ் 11 பஞ்சாப் அணி, அக்ஸர் படேலை அடையாளம் கண்டது. அந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவரது செயல்பாட்டைக் கண்ட தேசிய தேர்வாளர்கள், அதே 2014-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறக்கினார்கள். முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
2015-ம் ஆண்டு ஜிம்பாபே அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் இந்தியா சார்பாக கேதர் ஜாதவ், மணிஷ் பாண்டே, சந்தீப் ஷர்மா, ஸ்டுவர்ட் பின்னி என பல புது முகங்களுடன் களமிறங்கினார் அக்ஸர் படேல். அப்போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தன் திறமையை நிரூபித்தார் அக்ஸர்.
இதுவரை 38 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 11 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அக்ஸருக்கு, இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இந்த இங்கிலாந்து தொடரில் தான் கிடைத்தது. கிடைத்த முதல் வாய்ப்பிலேயே 3 போட்டிகளில் 6 இன்னிங்ஸில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்தார்.
அஹமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அக்ஸருக்கு குவியும் பாராட்டுக்கள்
"ஸ்பின் பந்துவீச்சில் அக்ஸர் படேல் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் அருமையான திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்" என இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் மைக்கெல் வாகன் புகழ்ந்து இருக்கிறார்.
"அக்ஸர் படேலின் லைன் மற்றும் லெந்த் தான் அவருடைய மிகப் பெரிய ஆயுதம். அவருடைய கடுமையான லெந்த் பந்துகளில் பேட்ஸ்மென்கள் ரன் எடுப்பது சிரமமாக இருக்கிறது. அக்ஸர் அடிக்கடி 100 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். ஒரு பந்து ஸ்விங் ஆகிறது, ஒரு பந்து ஸ்விங் ஆவதில்லை என்பதால் அவருடைய பந்தை எதிர்கொள்வது சிரமமாகிறது," என ஜுன் ஜுன்வாலா கூறியுள்ளார்.
யார்க்கர் வீசும் பும்ராவின் இடத்தை நடராஜன் நிரப்புவது போல, தற்போது அஸ்வினின் இடத்தை அக்ஸர் படேல் நிரப்புவது போலத் தெரிகிறது.
பிற செய்திகள்:
- பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு: இளவரசர் ஹாரி, சீமாட்டி மேகன் மார்க்கல் அதிர்ச்சிப்பேட்டி
- உதயசூரியன் சின்னத்தில் போட்டி ஏன்? ஸ்டாலின் தலையீடும் வைகோ முடிவின் பின்னணியும்
- இந்தியாவின் முதல் பெண் தீயணைப்பு அதிகாரி மீனாட்சியின் தன்னம்பிக்கை பயணம்
- குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ. 1000: தி.மு.கவின் உறுதிமொழி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்