Ind Vs Aus 4-வது டெஸ்ட் போட்டி: தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நடராஜன், வாஷிங்டன் சுந்தர்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பன் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. டேவிட் வார்னர், மார்கஸ் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் பெவிலியனுக்குத் திரும்பினர். வார்னரின் விக்கெட்டை மொஹம்மத் சிராஜும், மார்கஸின் விக்கெட்டை ஷர்துல் தாக்கூரும் வீழ்த்தினர்.
இதையடுத்து, மார்னஸ் பதற்றமின்றி ரன் குவிப்பில் இறங்கிய நிலையில்,. மறு பக்கம் ஸ்மித்தின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தரும், மேத்யூ வேடின் விக்கெட்டை நடராஜனும் வீழ்த்தினர்.
204 பந்துகளில் 108 ரன்களைக் குவித்த மார்னஸின் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்புக்கு ஒரு தடை போட்டார்.
முதல் நாள் போட்டியின் முடிவில் கேமரூன் க்ரீன் மற்றும் டிம் பெயின் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா 274 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
க்ரீன் - பெயின் இணை இரண்டாவது நாளான இன்று (ஜனவரி 16) தங்களின் ஆட்டத்தைத் தொடங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக ஆடி, 204 பந்துகளுக்கு 98 ரன்களை எடுத்தது இந்த இணை. 104 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்த பெயினை ஷர்துல் தாக்கூர் வீழ்த்தினார். அப்போது ஆஸ்திரேலியா 311-க்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதையடுத்து, 107 பந்துகளுக்கு 47 ரன்களை விளாசியிருந்த க்ரீனின் விக்கெட்டை வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்.
அடுத்தடுத்து களமிறங்கிய கம்மின்ஸின் விக்கெட்டை ஷர்துலும், லயோனின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தரும், ஹேசில்வுட்டின் விக்கெட்டை நடராஜனும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸின் முடிவில் 115.2 ஓவர்களில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா சார்பில் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றனர்.
குறைந்த அனுபவம் கொண்ட ஷர்துல் தாக்கூரும் 3 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். சுப்மன் கில் ஏழு ரன்களுக்கு தன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ரோகித் சர்மா 44 ரன்கள் எடுத்திருந்தபோது நாதன் லியோன் பந்தில் அவுட்டாகினார்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 26 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. புஜாராவும், ரகானேவும் களத்தில் உள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












