இன்று முதல் தொடங்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம்: யாருக்கு, எங்கே, எப்போது கிடைக்கும்?

பட மூலாதாரம், Getty Images
கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (ஜனவரி 16) முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் துவங்குகிறது. தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி துவங்கிவைக்கவிருக்கிறார்.
மற்ற தடுப்பூசிகளைப் போல இந்தத் தடுப்பூசி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்படாது. யாருக்கு முதலில் தேவை என்ற அடிப்படையில் படிப்படியாக இந்தத் தடுப்பூசியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, மூன்று - நான்கு கட்டங்களாக இந்தத் தடுப்பூசி வழங்கப்படவிருக்கிறது.
யாருக்கு எப்போது தடுப்பூசி வழங்கப்படும்?
இன்று தொடங்கும் முதல் கட்டத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்குத்தான் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும்.
அடுத்த கட்டமாக, காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு இந்தத் தடுப்பூசி வழங்கப்படும்.
அதற்குப் பிறகு, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 50 வயதுக்குட்பட்டவர்களில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற கூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும்.
இதற்குப் பிறகு, தேவையின் அடிப்படையில் படிப்படியாக பொதுமக்கள் அனைவருக்கும் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், தடுப்பூசியைப் பெறப்போகும் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு, முதற்கட்டத்திலேயே தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது. தடுப்பூசியின் வருகையைப் பொறுத்து படிப்படியாக வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி கட்டாயமா?
கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது கட்டாயமல்ல. ஆனால், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நல்லது என தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது. ஏற்கனவே கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களாக இருந்தாலும் இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், நோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் 14 நாட்களுக்குப் பிறகே தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.


சந்தையில் பல்வேறு தடுப்பூசிகள் கிடைக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதில் பெரும் எண்ணிக்கையில் கோவிஷீல்ட் தடுப்பூசியே வழங்கப்படுகிறது. எந்தத் தடுப்பூசியாக இருந்தாலும் 28 நாட்கள் கால இடைவெளியில் இரண்டு தடவை போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், இரண்டுமே ஒரே வகை தடுப்பூசியாக இருக்க வேண்டும்.
கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இரண்டுமே 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்லப்படும்.
தடுப்பூசியை பெறுவது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
கோவிட்-19 தடுப்பூசியை விரும்பிய யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்றாலும், தடுப்பூசி முகாமிற்கு நேரடியாகச் சென்று தடுப்பூசியை போட்டுக்கொள்ள முடியாது. இதற்கென பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பதிவுசெய்துகொள்ள ஆதார் அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்ற அரசால் வழங்கப்பட்ட ஏதாவது ஒரு ஆவணம் கட்டாயமாகும். பதிவுசெய்து கொண்ட பிறகு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்களது மொபைல் எண்ணிற்கு தடுப்பூசி போடும் இடம், நேரம் குறித்த தகவல்கள் பகிரப்படும். அப்போது அவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டுசெல்ல வேண்டியது கட்டாயமாகும்.
தற்போதைய சூழலில் பொதுமக்கள் இந்த ஊசிக்காக பதிவுசெய்ய முடியாது. முன்னுரிமைப் பிரிவினருக்கு ஊசிகள் போடப்பட்ட பிறகு, பொது மக்களுக்கான இணைய பதிவு துவக்கப்படும். இந்தத் தடுப்பூசியை இரண்டு முறை போட வேண்டும். முதல் முறை அந்த ஊசியைப் போட்ட பிறகு, அடுத்த தடுப்பூசி தவணைக்கான தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களின் அலைபேசி எண்ணில் தெரிவிக்கப்படும்.
தற்போது தடுப்பூசியைப் பெறவிருக்கும் சுகாதாரப் பணியாளர்களின் பெயர்கள் உள்ளிட்ட தகவல்கள் கோவின் என்ற செயலியில் பதிவுசெய்யப்படுகின்றன. இந்தத் தகவல்கள் சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றும் மருத்துவமனைகள், நிறுவனங்கள் மூலம் இந்தச் செயலியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தடுப்பூசி மையத்தில் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகு, அரை மணி நேரம் வரை அங்கேயே இருக்க வேண்டும். ஏதாவது அசௌகர்யமாக உணர்ந்தால் அங்கிருக்கும் செவிலியர்கள், மருத்துவத் தன்னார்வலர்களிடம் தெரிவிக்க வேண்டும். சில தடுப்பூசிகளுக்கு ஏற்படுவதைப் போல காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்படலாம். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பவர்களும் இந்தத் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் ஜனவரி 16ஆம் தேதியன்று 166 மையங்களில் இந்த தடுப்பூசி போடப்படும். இதில் 160 மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும் 6 மையங்களில் கோவாக்ஸின் தடுப்பூசியும் போடப்படும்.
சென்னையில் 12 இடங்களில் இந்தத் தடுப்பூசி போடப்படும். இந்த மையங்களின் எண்ணிக்கை, இடம் ஆகியவை தேவைக்கேற்ப மாறிக்கொண்டிருக்கும். முதற்கட்டமாக ஆறு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசிகளின் திறன் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டும் வரும் நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் "தடுப்பூசி குறித்து எழுப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். அவை பாதுகாப்பானவை" என்று தெரிவித்திருக்கிறார்.
தற்போது தமிழ்நாட்டிற்கென 5,36,500 டோஸ் தடுப்பு மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5,12,200 டோஸ் மருந்து முதற்கட்டத்தில் வழங்கப்படவுள்ளது. மீதமுள்ள 24,300 டோஸ் மருந்து, திடீர் தேவைகளுக்காக வைத்துக்கொள்ளப்படும். தமிழ்நாடு முழுவதும் 9 பிராந்திய தடுப்பூசி மையங்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.
இந்தத் தடுப்பூசி, தற்போதைய சூழலில் அரசின் தடுப்பூசி மையங்களிலும் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாகவே போடப்படுகிறது. 21 ஆயிரம் பணியாளர்கள் இந்தப் பணிக்கென பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது பதிவுசெய்துள்ளவர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதிக்குள் தடுப்பூசிகளைப் போட்டு முடிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












