Ind Vs Aus நடராஜன் அதிரடி பௌலிங்: கடைசி ஓவரில் இந்தியா திரில்லிங் வெற்றி

நடராஜன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நடராஜன் (கோப்புப்படம்)

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் கடைசி ஓவரில் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில்லிங் வெற்றி பெற்றது.

முன்னதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌலர் நடராஜன் தனது பந்து வீச்சில் மிளிர்ந்தார். அவர் 4 ஓவர் வீசி, 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், 3 போட்டிகளைக் கொண்ட ஆஸ்திரேலியா உடனான இந்த டி20 தொடரை, இந்திய அணி வென்று இருக்கிறது.

சிட்னி மைதானத்தில் நடந்துவரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்யும்படி ஆஸ்திரேலியாவை பணித்தது.

ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 194 ரன்களை எடுத்திருந்தது.

195 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு இந்தியா களம் இறங்கியது.

சஹார், வாசிங்டன் சுந்தரம், ஷர்துல் தாகூர், நடராஜன், யுவேந்திர சாஹல் என இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் தலா 4 ஓவர்களை வீசினர்.

இந்தியாவின் பந்துவீச்சாளர்களிலேயே நடராஜன் தான் மிகக் குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்த அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா எடுத்த 194 ரன்களில், நடராஜன் விட்டுக்கொடுத்தது வெறும் 20 ரன்களே. ஆனால், ஷார்ட் மற்றும் ஹென்ரிக்ஸின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். நடராஜனின் எகானமி 5.00 ஆக இருக்கிறது.

அதோடு மற்ற நான்கு பந்துவீச்சாளர்களும் கூடுதல் ரன்களை வைட் மூலம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் நடஜான் ஒரு வைட் கூட வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் மேத்திவ் வேட் 32 பந்துகளில் 58 ரன்களை எடுத்து, ரன் அவுட் ஆனார். தன் 58 ரன்களில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என அதிரடி காட்டினார்.

வெற்றிக்கு உதவிய ஹர்திக் & ஸ்ரேயாஸ்

194 ரன்கள் கடினமான இலக்காகவே தோன்றிய நிலையில், இந்தியா பேட்ஸ்மேன்களை நம்பி களமிறங்கியது.

ஆண்ட்ரூ டை வீசிய 6-வது ஓவரில், 30 ரன்களுடன் கே எல் ராகுல் அட்டமிழந்தார். அப்போது இந்தியா 60 ரன்களை எடுத்திருந்தது.இந்திய அணியின் இரண்டாவது விக்கெட், ஆடம் சாம்பா விசிய 12-வது ஓவரில் பறிபோனது. ஷிகர் தவான் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 12 ஓவர் முடிவில் இந்தியா 105 ரன்கள் எடுத்து 2 விக்கெட்களை இழந்து இருந்தது.இவர்களைத் தொடர்ந்து ஸ்வெப்சன் வீசிய 14-வது ஓவரில் சஞ்சு சாம்சனும், டேனியல் சாம்ஸ் வீசிய 17-வது ஓவரின் முதல் பந்தில் விராட் கோலியும் தங்கள் விக்கெட்களை இழந்தார்கள். 17 ஓவர் முடிவில் 158 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது இந்தியா.கடைசி நான்கு ஓவர்களில் கை கோர்த்த ஹர்திக் பாண்டியா மற்றும் ஸ்ரேயாஸ் கூட்டணி அதிரடி காட்டியது.குறிப்பாக ஹர்திக் பாண்டியா 22 பந்துகளில் 42 ரன்களைக் குவித்தார். டேனியல் சாம்ஸ் வீசிய 20-வது ஓவரில் ஹர்திக் பாண்டியா அடித்த இரண்டு சிக்ஸர்கள் குறிப்பிடத்தக்கது.

5 பந்துகளை மட்டுமே எதிர் கொண்டு 12 ரன்களை எடுத்த ஸ்ரேயாஸ் 1 பவுண்டரியும், ஒரு சிக்ஸரையும் தன் பங்குக்கு விளாசி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: