ஐ.பி.எல் 2020 தொடரில் புதிய கிரிக்கெட் நட்சத்திரங்களாக உருவாக வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார்?

2020 ஆம் ஆண்டுக்கான இந்திய பிரீமியல் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நேற்று (சனிக்கிழமை) கோலாகலமாக தொடங்கின.

இந்தியா மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த இந்தப் போட்டி உலகில் மிகுந்த பணக்கார விளையாட்டாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகளின்போது, இந்தியா முழுக்க ஸ்டேடியங்கள் ரசிகர்களால் நிரம்பி வழியும். பாலிவுட் நட்சத்திரங்களும், அரசியல்வாதிகளும் அதில் இடம் பெற்றிருப்பர்.

ஆனால், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, இந்த முறை எல்லாமே மாறுபட்டு இருக்கப் போகின்றன. காலி ஸ்டேடியங்களில் போட்டிகள் நடக்கப் போகின்றன. வழக்கமான உற்சாகக் கொண்டாட்டங்கள் இருக்காது.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கப் போகிறது - புதிய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களை உருவாக்குதல் என்ற இந்தப் போட்டியின் வரலாறு மாறாமல் இருக்கப் போகிறது.

எல்லா அணிகளுமே புதிய வீரர்களை வாங்கியுள்ளன. அவர்களில் சிலர் இந்தியாவில் 19 வயதுக்கு உள்பட்டோர் அணியைச் சேர்ந்தவர்கள்.

தங்கள் அணிகளுக்கு வெற்றியை தேடித் தரக்கூடிய திறமைவாய்ந்த சில வீரர்களை இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஸ்டைலான பேட்ஸ்மேன் என கருதப்படும் இவர் கிரிக்கெட் நாயகன் சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துபவராக இருக்கிறார். அவரை சந்தித்து அவரிடம் நுட்பங்களைக் கற்றுக் கொள்வது பற்றியே எப்போதும் கனவு கண்டு கொண்டிருப்பவர்.

கடந்த பிப்ரவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி முடிந்து இந்தியா திரும்பியதும் அந்தக் கனவு நனவானது. அவரை டெண்டுல்கர் சந்தித்து, போட்டியில் திறமையாக விளையாடியதற்காகப் பாராட்டு தெரிவித்தார்.

அதன் பிறகு அவர் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையே எழவில்லை. இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் ஐ.பி.எல். போட்டியில் அறிமுகம் ஆகிறார்.

அவருடைய அணிக்கு அவரிடம் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. 19 வயதுக்கு உள்பட்டோருக்கான 2020 உலகக் கோப்பை போட்டியில் அவர் எடுத்த ஸ்கோர்களை பார்த்தால், அதற்கான காரணம் நமக்குப் புரியும். 88, 105 நாட் அவுட், 62, 57 நாட் அவுட், 29 நாட் அவுட், 57 என்று அடுத்தடுத்த போட்டிகளில் ரன்கள் குவித்தார். இந்த ஆண்டு நடந்த போட்டியில் அதிகபட்ச ரன்களை எடுத்தவர் இவர்தான். இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் ஐந்து அரை சதங்களை அடித்த மூன்றாவது பேட்ஸ்மேன் ஆகவும் உள்ளார்.

அவருடைய பின்னணியும்கூட, அவரது கிரிக்கெட் சாதனைகளைப் போல உந்துதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறிய நகரில் இருந்து, கிரிக்கெட் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மும்பைக்கு வந்தவர் ஜெய்ஸ்வால். தெருக்களில் தூங்கி இருக்கிறார். வாழ்க்கைக்காக தெருக்களில் தின்பண்டம் விற்றிருக்கிறார்.

உள்ளூர் பயிற்சியாளர் ஒருவர் அவரை அடையாளம் கண்டு, அடைக்கலம் கொடுத்தார். அதன் பிறகு அவருடைய வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட்டது. ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் போன்ற சர்வதேச வீரர்கள் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நிறைந்த தனது அணியில் தடம் படிப்பது ஜெய்ஸ்வாலுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது.

ஆனால் சூழ்நிலை கடுமையாக இருக்கும்போது, எப்படி தடம் பதிக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்திருக்கிறார் ஜெய்ஸ்வால்.

ரவி பிஸ்னோய்

இந்தியாவின் அடுத்த ``சுழற்பந்து சூறாவளி'' என்று இவரை முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வர்ணித்திருக்கிறார்.

19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் இவருடைய அற்புதமான பந்துவீச்சைப் பார்த்தால், இந்தப் பாராட்டு ரொம்ப அதிகமானது என்று தோன்றாது. அவர் 17 விக்கெட்டுகளை எடுத்தார். எல்லாமே இந்தியாவின் வெற்றிக்கு தேவைப்பட்ட நேரங்களில் கிடைத்த விக்கெட்டுகள். இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்திடம் இவரின் அணி தோற்றது. ஆனால் இந்தப் போட்டியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக பிஸ்னோய் உருவானார்.

ஐ.பி.எல். போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இவர் விளையாடுகிறார். அந்த அணியில் இவர் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிங்க்ஸ் அணி பெரும்பாலும் நடுத்தரமான அணியாகக் கருதப்படுகிறது. உலகக்கோப்பை போட்டியில் வெளிப்படுத்திய அசத்தலான ஆட்டத்தை பிஸ்னோய் இந்தப் போட்டியில் தங்களுக்காக வெளிப்படுத்துவார் என்று கிங்க்ஸ் அணி நம்பிக்கை கொண்டுள்ளது.

பிரியம் கார்க்

19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து இறுதிப் போட்டி வரை தன் அணியை கொண்டு சென்றவர். அவருடைய ஸ்கோர்கள் சராசரி அளவில் இருந்தாலும், அவருடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதாக அவை இல்லை.

உறுதியான கட்டுப்பாட்டுடன் அணியை வழிநடத்தியவர், முக்கியமான நுட்பமான முடிவுகளை எடுக்கும் சமயங்களில் தன் திறன்களை வெளிப்படுத்தியவர்.

இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிக பிரபலமாக இருக்கக் கூடியவர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருப்பவர். 2018 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநில அணிக்காக விளையாடியதுதான் அவருடைய முதல் நிலை கிரிக்கெட் போட்டிகளுக்கான அறிமுகம். அப்போது அவர் இரட்டை சதம் அடித்து, பெரிய அரங்கிற்கு தாம் வந்திருப்பதைப் பதிவு செய்தார்.

மற்ற போட்டிகளிலும் அவர் அதிக ரன்கள் எடுத்தார். அவைதான் அவரை 19 வயதுக்கு உள்பட்டோருக்கான அணியின் கேப்டன் பொறுப்புக்கு அழைத்துச் சென்றன.

இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. முந்தைய வரலாற்றைப் பார்க்கும்போது, கார்க் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார் என்பதற்கான வாய்ப்பு நன்றாகவே இருக்கிறது.

19 வயதுக்கு உள்பட்டோர் அணிக்கு கேப்டன் பொறுப்பு வகித்துள்ள இந்திய அணியின் இப்போதைய கேப்டன் விராட் கோலி, பிரித்வி ஷா, முகமது கைஃப், பார்த்திவ் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடும் நிலை வரை உயர்ந்து, கிளப் கிரிக்கெட்டிலும் நல்ல முறையில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

புள்ளிகள் வரிசையில் அட்டவணையில் முதல் பாதிக்குள் சன்ரைசர்ஸ் அணி இடம் பெறுவதற்கு கார்க் உதவியாக இருந்தால், இந்திய அணியில் அவர் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

கார்த்திக் டியாகி

தன்னுடைய கூக்ளிகள் மூலம் பேட்ஸ்மேன்களை குழப்பம் அடையச் செய்பவர் பிஸ்னோய் என்றால், நல்ல வேகத்துடன் பந்தை இரு புறமும் திரும்பிச் செல்லும்படி ஸ்விங் செய்யும் திறமையால் பேட்ஸ்மேனுக்கு அதிர்ச்சி தருபவராக டியாகி இருக்கிறார்.

அவர் 11 விக்கெட்டுகளை சாய்த்து 13.90 என்ற சராசரியை வைத்துள்ளார். அதன் மூலம் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர்ந்த தேர்வுகளின் வரிசையில் இவர் இடம் பிடித்திருக்கிறார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் அரோன், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரும் இவருடைய அணியில் உள்ளனர். ராயல்ஸ் அணியின் வேகப்பந்து தாக்குதல் குழுவாக இந்த மூவரும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருடைய துல்லியமான பந்துவீச்சு, வேகத்தை மாற்றிக் கொள்ளும் திறன் காரணமாக, ஐக்கிய அமீரகத்தின் குறைந்த ரன்கள் கொடுக்கும் மைதானங்களில் இவர் மிகவும் பயனுள்ளவராக இருப்பார்.

போட்டியின் முதல்பாதி ஆட்டங்கள் வரை பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க முடியாமல் போனால் (அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது), தனது அணியின் முன்வரிசை பந்துவீச்சாளர்களில் டியாகி இடம் பெறுவார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: