You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
IND Vs SA: சமனில் முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 தொடர் - இந்தியா தோற்றது எப்படி?
இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே ஞாயிறன்று பெங்களூருவில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதன் மூலம், 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் முடிவடைந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் - ரோகித் சர்மா இணை வந்த வேகத்தில் பிரிந்தது.
தென்னாப்பிரிக்க வீரர் ரீஜாவின் பந்துவீச்சில் பியூரனிடம் கேட்ச் கொடுத்து ஒன்பது ரன்களில் ரோகித் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் கோலி, ஷ்ரேயாஸ், குர்ணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை அதிகபட்சமாக, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 36 ரன்களும், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 19, 14 மற்றும் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தீபக் சாஹர், நவ்தீப் சைனி உள்ளிட்டோர் ரன் ஏதும் எடுக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர். எனவே, இருபது ஓவர்களில் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது.
அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரீஜா ஹென்ரிக்ஸ் மற்றும் குயிண்டன்இணை எவ்வித சிரமுமின்றி விளையாடினர்.
இந்த இணை பத்து ஓவர்களில் 76 ரன்களை அடித்திருந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ரீஜா (28 ரன்கள்) கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் இணை சேர்ந்த குவிண்டன் - பவுமா இந்திய அணியின் பந்துவீச்சை சீராக எதிர்கொண்டு 16.5 ஓவர்களிலேயே 140 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றியை பெற்று தந்தனர்.
அதிகபட்சமாக குவிண்டன் 79 ரன்களும், ரீஜா 28 ரன்களும் எடுத்தனர்.
7 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த இந்தியா, 180 ரன்களை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து பேட்ஸ்மேன்களின் தவறான ஷாட்களால் விரைவாக ஆட்டமிழந்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த்து.
இதனால் இந்தியாவால் 134 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சென்ற போட்டியில் வென்ற இந்தியா, அனுபவம் இல்லாத தென்னாப்ரிக்காவை எளிதில் வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்ஸ்மேன்களின் பங்களிப்பால் இந்தியா தோல்வியடைந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்