You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அம்பயர் தர்மசேனா : "ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்தது தவறுதான்"
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார்.
இலங்கை சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறாக கூறி உள்ளார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் அந்த ஓவரின் 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்தில் பீல்டிங் செய்து விக்கெட் கீப்பருக்கு பந்தை எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவரின் பேட்டில் பந்து பட்டு ஓவர் த்ரோவாக பவுண்டரி சென்றதால், இங்கிலாந்துக்கு 6 ரன்கள் கிடைத்தன. இதனால் ஆட்டம் டை ஆனது.
திருப்புமுனை ஓவர் த்ரோ
இந்த ஓவர் த்ரோதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் ஓவர் த்ரோ செய்யும் போது ஸ்டோக்ஸ் 2-வது ரன்னை முழுமையாக ஓடி முடிக்காத காரணத்தால், 5 ரன்கள் மட்டுமே நடுவர் வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 6 ரன்கள் வழங்கி நடுவர் தர்மசேனா தீர்ப்பு வழங்கினார். இதனால்தான், கடைசியில் ஆட்டம் டிராவில் முடியும் நிலை ஏற்பட்டது என விமர்சிக்கப்பட்டது,
இப்படியான சூழலில், இலங்கை சண்டே டைம்ஸ் சஞ்சிகையிடம், " தொலைக்காட்சியில் ரீப்ளேவை பார்த்தபோது, என்னுடைய தீர்ப்பு தவறானது என்பதை அறிந்துகொண்டேன். ஆனால், மைதானத்தில் நான் நடுவர் பணி செய்யும்போது, என்னால் டிவி ரீப்ளையை பார்க்க முடியாது. களத்தில் நான் கொடுத்த முடிவுக்காக, வருத்தப்படப் போவதில்லை." என்று கூறி உள்ளார்.
மேலும் அவர், "நான் லெக் அம்பயருடன் வாக்கிடாக்கியில் பேசி கலந்தாலோசித்தேன். அதை மற்ற அம்பயர்களும், ரெஃப்ரியும் கேட்டனர். அப்போது அவர்கள் டிவி ரீப்ளேவை பாரக்க முடியவில்லை; அவர்கள் அனைவரும் பேட்ஸ்மேன்கள் 2 ரன்களை முழுமையாக ஓடிவிட்டார்கள் என்றுதான் முடிவுசெய்திருந்தனர். அந்த வகையில் நானும் என்னுடைய முடிவை வெளிப்படுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.
'தூக்கி அடித்திருப்பார்'
முன்பு பிபிசிக்கு நேர்காணல் அளித்திருந்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆஷ்லெ கேல்ஸ் இந்த விவாதம் தமக்கு திகைப்பூட்டுவதாக கூறி இருந்தார்.
ஒரு ரன் கூடுதலாக கிடைத்ததால்தான் வெற்றிபெற முடிந்ததா என்ற கேள்விக்கு பிபிசியிடம் அவர், "நிச்சயமாக இல்லை. அந்த கடைசி பந்தில் இரண்டு ரன்களுக்கும் அதிகமாக தேவைப்பட்டிருந்தால், ஃபுல்டாஸ் பந்தை தூக்கி அடித்திருப்பார். அது மைதானத்திற்கு வெளியே கூட சென்றிருக்கலாம்" என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்