You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விராட் கோலி - காலிறுதி, அரை இறுதி, இறுதி போட்டிகளில் தடுமாறுகிறாரா? | Data Check
ஐசிசி டெஸ்ட் தரவரிசை மற்றும் ஒருநாள் போட்டித் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார் இந்திய அணித் தலைவர் விராட் கோலி.
ஒருநாள் போட்டிகளில் இதுவரை 41 சதங்கள் விளாசியிருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை எளிதில் முறியடிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கும் நபர்களில் ஒருவராக கோலி பார்க்கப்படுகிறார்.
ஒருநாள் போட்டிகளில் மூன்றாம் நிலையில் களமிறங்கும் கோலி ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 59.40 ரன்கள் குவித்திருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் மட்டுமே 11 ஆயிரம் ரன்களை கடந்துவிட்ட கோலி, ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் பெரும்பாலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை.
கடந்த 11 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் காலிறுதி போட்டிகள், அரை இறுதி போட்டிகள், இறுதி போட்டிகள் போன்றவற்றில் 15 முறை களம் கண்டிருக்கிறார். ஆனால் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை என்பதே வரலாறு.
2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கூட விராட் கோலி ஒரு சதம் கூட விளாசவில்லை.
நாக் அவுட் போட்டிகளில் உண்மையில் கோலி சதமடிப்பதில் திணறுகிறாரா அல்லது ரன்கள் சேர்க்கவே தடுமாறுகிறாரா?
இதுவரை ஐசிசியின் மூன்று உலகக்கோப்பைத் தொடரில் விராட் கோலி விளையாடியிருக்கிறார். இதில் 26 போட்டிகளில் அவர் 1030 ரன்கள் எடுத்திருக்கிறார். இரண்டு சதம் அடித்திருக்கிறார்.
ஆசிய கோப்பையில் 11 போட்டிகளில் பங்கேற்று மூன்று முறை சதமடித்துள்ளார்.
ஆனால் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் 12 இன்னிங்ஸ்களில் 5 அரை சதங்கள் விளாசியிருக்கிறார். ஒரு முறை கூட சதமடித்ததில்லை.
உலகக் கோப்பைத் தொடர்களில் கோலியின் சராசரி 46.81 மட்டுமே.
மற்ற தொடர்களை ஒப்பிடும் போது கோலி உலகக்கோப்பை போட்டிகளில் சற்று குறைவான பங்களிப்பையே வழங்கியிருக்கிறார் என்பது தெளிவு.
ஆனால் உலகக் கோப்பை போன்ற தொடர்களிலும் காலிறுதி, அரை இறுதி போன்ற நாக் அவுட் போட்டிகளில் அவரது நிலை என்ன?
காலிறுதி போட்டிகள்
2011 உலகக்கோப்பையின் காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதியது. அப்போட்டியில் 260 ரன்கள் எனும் இலக்கை துரத்தியது. நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய கோலி, 33 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அப்போட்டியில் மிடில் ஆர்டரில் சிறு சறுக்கல் ஏற்பட்டதால் ஆறாவது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங் - ரெய்னா இணை 74 ரன்கள் சேர்த்து இந்தியாவை வெற்றி பெற வைத்தது.
2015 உலகக்கோப்பையின் காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 75 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. இதன் பின் களமிறங்கிய கோலி 8 பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பின்னர் ரோகித் ஷர்மாவின் அபார சதத்தின் உதவியோடு இந்தியா 302 ரன்கள் குவித்தது. இந்தியா 109 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அரை இறுதி போட்டிகள்
2011 உலகக்கோப்பை - பாகிஸ்தானை அரை இறுதியில் எதிர்கொண்டது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த தோனி அணி 2 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தபோது கோலி களத்தில் வந்தார். அப்போட்டியில் அவர் எடுத்த ரன்கள் 9. இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
2013 சாம்பியன்ஸ் டிராஃபி - அரை இறுதியில் இலங்கைக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 182 ரன்களை துரத்தியது. கோலி 64 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து இந்தியா வெல்ல உதவினார்.
2015 உலகக்கோப்பை - அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்தியா. 329 ரன்கள் எடுத்தால்தான் இறுதிப்போட்டிக்குச் செல்ல முடியும் என்ற நிலை . முதல் விக்கெட்டை 76 ரன்களுக்கு இந்தியா இழந்தது. கோலி 13 பந்துகளைச் சந்தித்து 1 ரன் மட்டும் எடுத்து மிச்செல் ஜான்சன் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
2017 சாம்பியன்ஸ் டிராஃபி - வங்கதேசம் அணி நிர்ணயித்த 265 ரன்கள் எனும் இலக்கை இந்தியா துரத்தியது. கோலி சேஸிங்கில் 78 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.
2019 உலகக்கோப்பை - நியூசிலாந்து அணி அரை இறுதியில் அபாரமாக பந்து வீசியது. ரோகித் ஷர்மா விக்கெட் வீழ்ந்ததும் களமிறங்கிய கோலி ஒரு ரன்னில் டிரென்ட் போல்ட் பந்தில் வீழ்ந்தார். அப்போது இந்தியா ஐந்து ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. அப்போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.
உலகக் கோப்பை அரை இறுதி போட்டிகளில் இதுவரை கோலி எடுத்த ரன்கள் - 9, 1,1
இறுதிப் போட்டிகள்
2010-ல் வங்கதேச மண்ணில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் முத்தரப்புத் தொடரில் மோதின. இதன் இறுதிப்போட்டியில் கோலி 2 ரன்கள் எடுத்தார். ரெய்னாவின் சதத்தால் இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. எனினும் இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
2010 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் கோலி 34 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இந்தியா 81 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது.
2010-ல் இலங்கை, இந்தியா, நியூசிலாந்து மோதிய முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையும் இந்தியாவும் மோதின. 300 ரன்களை துரத்திய இந்தியா 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கோலி அப்போட்டியில் 57 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதின. இந்தியா 275 ரன்களை சேஸிங் செய்யத் துவங்கியது. 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அப்போது கம்பீருடன் ஜோடி சேர்ந்த கோலி அணியை விக்கெட் சரிவிலிருந்து மீட்டார். ஆனால் 49 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
கம்பீர் - தோனியின் துடிப்பான ஆட்டத்தில் இந்தியா அப்போது கோப்பையை வென்றது.
2013 சாம்பியன்ஸ் டிராஃபியின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. 20 ஓவர்கள் கொண்ட அப்போட்டியில் 34 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார் கோலி. இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.
2013-ல் இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முத்தரப்புத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதின. 202 ரன்களை இந்தியா துரத்தியது. இரண்டு ரன்களில் கோலி அவுட் ஆனார். இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
2017 சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா. ஓவல் மைதானத்தில் நடந்த அப்போட்டியில் இந்தியாவுக்கு இலக்கு 339 ரன்கள். கோலி 5 ரன்கள் மட்டும் எடுத்தார்.
158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி.
தொடரின் காலிறுதி, அரை இறுதி, இறுதிப்போட்டிகள் போன்றவற்றில் விராட் கோலி 11 முறை பங்கேற்று இரண்டில் மட்டுமே அரை சதம் விளாசியுள்ளார். அதில் ஒன்று வங்கதேசத்துக்கு எதிராக வந்தது. மற்றொன்று இலங்கை அணிக்கு எதிராக வந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்