You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சந்திரயான் - 2 : இறுதி நேரத்தில் கவுன்டவுன் நிறுத்தப்பட்டது ஏன்?
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சந்திரயான் - 2 செயற்கைக்கோள் ஏவப்படுவது தொழில்நுட்பக் காரணங்களால் தள்ளிவைக்கப்படுவதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
ராக்கெட் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் இருந்த நிலையில், கவுன்ட் - டவுன் நிறுத்தப்பட்டது.
நிலவில் ஊர்ந்துசெல்லும் வாகனத்தை இறக்கி, ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான் - 2 விண்கலம் திங்கட்கிழமை அதிகாலை 2.51 மணியளவில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து ஏவப்படவிருந்தது.
இந்தியாவின் சந்திரயான் - 1 திட்டம் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயும் நோக்கில் சந்திரயான் - 2 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவிருந்தது. இந்த விண்கலம் புவிசார் ஏவுவாகனம் - மார்க் 3 மூலம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது.
இதற்கான கவுன்ட் - டவுன் ஜூலை 14ஆம் தேதி காலை 6.51 மணியளவில் துவங்கியது. இந்த ஏவுவாகனத்திற்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் ஏவுவதற்கு 18 மணி நேரத்திற்கு முன்பாகத் துவங்கின. இரவு பத்து மணியளவில் கிரையோஜெனிக் எஞ்சினில் திரவ ஆக்ஸிஜனை நிரப்பும் பணி துவங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து செய்தி தரும் பிபிசி தமிழின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன், தொழில்நுட்ப காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்.
"நள்ளிரவு 12 மணியளவில் ஆக்ஸிஜன் நிரப்பும் பணி முடிந்த பிறகு, திரவ ஹைட்ரஜனை நிரப்பும் பணி துவங்கியது. 15ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் இந்தப் பணியும் முடிவடைந்தது. ஆனால், அதிகாலை 1.50 மணியளவில் தொழில்நுட்பக் காரணங்களால் சந்திரயான் - 2 ஏவப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. என்ன தொழில்நுட்ப பிரச்சனை என்பதை இஸ்ரோ இதுவரை தெரிவிக்கவில்லை." என்கிறார்.
7000 பேர் ஏமாற்றம்
"சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவதை காண 7000 பேர் சதீஷ் தவான் ஏவுதளத்திருக்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். சந்திரயான் 2 மீண்டும் எப்போது விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவிக்கவில்லை" என்கிறார் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன்.
தென்துருவம்
சந்திரயான் - 2 விண்கலன் இதுவரை எந்தவொரு நாடும் சென்றிராத நிலவின் தென்துருவ பிரதேசத்திற்கு செல்ல இருந்தது.
இந்தப் பிரதேசத்தில் நிலவின் மேற்பரப்பில் காணப்படும் அதிக ஆபத்துகளின் காரணமாக எந்த விண்வெளி நிறுவனமும் இந்த பிரதேசத்திற்கு கலன்களை இதுவரை அனுப்பவில்லை.
இதற்கு முன்னால், நிலவுப் பயணத் திட்டங்கள் நிகழ்ந்துள்ள நிலவின் மத்தியரேகை பகுதி, ஓரளவு சமவெளி பகுதியாகும். ஆனால், நிலவின் இந்த தென் பகுதி முழுவதும் பள்ளங்களும், கடினமான நிலப்பரப்பும் காணப்படுகின்றன. எனவே, இவ்விடத்தில் ஏற்படும் ஆபத்துகளும் கணிசமாகவே இருக்கின்றன.
நிலவின் மேற்பரப்பு, கனிமவியல், மிகுதியாக கிடைக்கும் தனிமங்கள், நிலவின் வெளிப்புறப்பகுதியில் ஆய்வு மற்றும் ஏதாவதொரு வடிவத்தில் அங்கு நீர் உள்ளதா என அறிந்து கொள்ளுதல் போன்றவை இந்தத் திட்டத்தின் அறிவியல் ஆய்வு நோக்கங்களாக இருந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்