You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடக சட்டப்பேரவை: ‘குமாரசாமி V எடியூரப்பா’ இன்று என்னவெல்லாம் நடக்கலாம்?
- எழுதியவர், இம்ரான் குரேஷி,
- பதவி, பிபிசி-க்காக
மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசின் எதிர்காலம் இன்று தெரிந்துவிடும். கடந்த வாரம் நடந்த நீண்ட விவாதத்திற்கு பின்பு இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது.
கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றும் தொடரும். இன்னும் 20 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சபையில் பேச வேண்டி இருக்கிறது. அதுமட்டுமல்ல, மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த எத்தனை உறுப்பினர்கள் இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் பங்கேற்பார்கள் என்று தெரியாமல் இருக்கிறது.
பா.ஜ.க மாநில தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமாப எடியூரப்பா விரைவாக நமபிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு சாதகாமாக உத்தரவு வந்தால் மட்டுமே, நம்பிக்கை வாக்கெடுப்பு தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது.
அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜிநாமா மற்றும் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் எந்த நடவடிக்கையும் தற்போதைக்கு எடுக்கக் கூடாது. நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அவர்களை கலந்து கொள்ள வற்புறுத்தக்கூடாதென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை தெளிவுபடுத்த வேண்டுமென காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கோரியுள்ளன.
அவை நடவடிக்கைகளில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் தவிர்ப்பதற்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அளித்த அனுமதி மூலம் அரசியல் கட்சிகளின் உரிமை மீறப்பட்டுள்ளதாக காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கருதுகின்றன.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் அச்சாணியாக இருக்கிற கொறடா உத்தரவு நீதிமன்ற உத்தரவு மூலம் செல்லாக்காசாகிறது.
எனினும் தற்போதைக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்ற நடவடிக்கையில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளாதபட்சத்தில் 224 பேர் கொண்ட பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை, 204 ஆகக் குறையும்.
மேலும் 2 சுயேச்சைகள் பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒரு எம்.எல்.ஏ. கே.பி.ஜே.பி. கட்சியை சேர்ந்தவர். இந்தக் கட்சி காங்கிரசுடன் இணைந்துவிட்டது. இது தொடர்பாக சபாநாயகரிடம் காங்கிரஸ் அளித்துள்ள விண்ணப்பத்தின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.
சட்டப்பேரவை தலைவர் ரமேஷ் குமார் இன்று என்ன செய்யலாம்?
- இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை நடத்தலாம்.
- இன்று வாக்கெடுப்பு நடத்தலாமென காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் சித்தராமையா கூறி இருந்தார். சித்தராமையா கருத்து சம்மதமா என கர்நாடக முதல்வர் குமாரசாமியையும் கேட்டுள்ளார் அவைத்தலைவர்.
- நம்பிக்கை வாக்கெடுப்புக்கான விவாதம் முடிந்ததும், அவைத்தலைவர் முதல்வர் குமாரசாமியை விவாதத்தின் மீது பேச அழைப்பார்.
- முதல்வர் பதில் அளித்து முடித்ததும், பேரவை தலைவர் அவை அலுவலரை மணி அடிக்க கோருவார்.
- மணி அடித்து முடித்ததும், உறுப்பினர்கள் அவர் அவருக்கான இருக்கையில் அமர வேண்டும்.
- சட்டப்பேரவையின் கதவுகள் மூடப்படும். பின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்.
- இது குரல் வாக்கெடுப்பாக நடக்கும்.
- ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் உறுப்பினர்களை எழச் சொல்லி கணக்கிடலாம்.
- சட்டப்பேரவை செயலர் வரிசை வரிசையாக ஆமோதிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவார்.
- பின் இதனை உறுப்பினர்களிடம் சட்டப்பேரவை தலைவர் விவரிப்பார்.
முதல்வர் என்ன செய்யலாம்?
- நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்றால், முதல்வர் ஆளுநர் மாளிகை சென்று தனது ராஜிநாமா கடிதத்தை அளிக்கலாம்.
- அப்படி அளிக்கவில்லை என்றால், ஆட்சியை ஆளுநர் கலைக்கலாம்.
ஆளுநர் என செய்யலாம்?
- நேற்றிரவு வரை கிடைத்த தகவலின்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை ஆளுநர் வஜுபாய் வாலா ஒன்றும் செய்யமாட்டார் என்றே தெரிகிறது. வெள்ளிக்கிழமைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை முடிக்க கோரி இரண்டு முறை முதல்வரை கேட்டிருந்தார் ஆளுநர். ஆனால், முதல்வர் குமாரசாமி அதனை புறக்கணித்தார்.
- நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடையும்பட்சத்தில், ஒருவேளை குமாரசாமி தாமாக முன் வந்து ராஜிநாமா செய்யவில்லை என்றால், ஆளுநர் ஆட்சியை கலைத்துவிட்டு எதிர்க்கட்சித் தலைவரான எடிடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைக்கலாம். இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தலாம். எடியூரப்பாவுக்கு இதற்காக அவகாசமும் தரப்படலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்