உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன் இந்திய அணி செய்ய வேண்டியது என்ன?

கோலி

பட மூலாதாரம், Nathan Stirk

    • எழுதியவர், நிதின் ஸ்ரீவத்ஸவா
    • பதவி, பிபிசி செய்தியாளர், லீட்ஸில் இருந்து.

இந்திய அணி, ஹெடிங்லி, லீட்ஸ்-இல் நடைபெறும் இறுதி லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டதால், வெற்றி தோல்வியைப் பற்றி அதிக கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால், இந்தப் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் அறிவிப்பை ரவீந்தர் ஜடேஜாவும், மயங்க் அகர்வாலும் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.

தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் இந்த இரு வீரர்களுக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ரவீந்தர் ஜடேஜா போட்டித் தொடரின் தொடக்கத்தில் இருந்தே அணியில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால், மயங்க் அகர்வால் கடந்த வாரம்தான் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டார்.

அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் விராட் கோலியும் தற்போது அரையிறுதிப் போட்டிக்கான உத்திகளை வகுப்பதில்தான் ஆர்வமாக இருப்பார்கள்.

ரவி சாஸ்திரிக்கும் இந்த போட்டி முக்கியமானது. ஏனெனில், 2019ஐ போலவே, 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை லீக் போட்டிகளில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடினாலும் அரையிறுதியில், ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றுப்போனது.

சிட்னியில் இந்திய அணி பெற்ற அந்தத் தோல்வியை, ரவி சாஸ்திரி மறக்கவும் இல்லை, எளிதாக எடுத்துக் கொள்ளவும் இல்லை.

உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

எனவே, ரவீந்தர் ஜடேஜா, மயங்க் அகர்வால் ஆகிய இருவருக்கும் சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும். ஏனெனில், அவசியம் ஏற்பட்டால், நாக் அவுட் போட்டியில் விளையாட அவர்களை களம் இறக்கலாம் என்று இந்திய அணி விரும்பும்.

தன்னை நிரூபிக்க தினேஷ் கார்த்திக்குக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கலாம். இதைத்தவிர, பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் இந்திய அணி சில சிக்கல்களை எதிர்கொள்ளலாம்.

ஹிட்மேன் ரோஹித் ஷர்மா நல்ல ஃபார்மில் இருப்பது அரையிறுதி வரை பயணித்துவிட அணிக்கு நல்ல செய்தி.

அதே நேரம் ஷிகர் தவனுக்கு காயம் ஏற்பட்டு அணியில் இருந்து வெளியேறிய பிறகு, ரோஹித்தின் பொறுப்பு கூடிவிட்டது.

இருந்தாலும் கூட, ரோஹித்துக்கு புதிய ஓபனிங் சகாவான ராகுலுடன் இணக்கம் இருப்பதால், அவரால் அழுத்தமில்லாமல் ரன்களை குவிக்க முடியும்.

ரோகித்

பட மூலாதாரம், Getty Images

கேப்டன் கோலி, ஃபார்மில் இல்லை என்ற நிலையிலும், எல்லா போட்டிகளிலும் ஏறக்குறைய ஐம்பது ரன்கள் எடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பந்த்துக்கு அணியில் இடம் கொடுத்தது உரிய நேரத்தில் எடுத்த சரியான முடிவு. சிறப்பான ஓபனிங் பேட்ஸ்மேன் ராகுல் ரன்களை பெரிய அளவில் குவிக்கவில்லை என்றாலும், அணியின் வெற்றிக்கு கணிசமான பங்களித்துள்ளார்.

எம்.எஸ் தோனியைப் பற்றி பேசினால், அவர் இன்றைய சிறப்பான கிரிக்கெட்டர்களில் ஒருவர் என்ற பட்டியலில் இடம் பிடிக்கிறார்.

உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடும்போது அவரது பேட்டிங் பல சமயங்களில் அணிக்கு உதவியாக இருந்திருக்கிறது. ஆனால் 'த ஃபினிஷர்' என்று அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த அதிரடி ஷாட்கள் இடம் பெறாதது ஏமாற்றமே.

அவரது பங்களிப்பு அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் அவரின் ரன்கள் மெத்தனமாகவே இருந்திருக்கிறது.

தோனியின் பிரபலமான ஹெலிகாப்டர் ஷாட்கள் மட்டுமல்ல, சில போட்டிகளில் ஒற்றை ரன்கள் எடுப்பதில் கூட மெத்தனம் காணப்பட்டதை பார்க்க முடிந்தது.

ஆனால், இந்த விமர்சன்ங்கள் அனைத்தையும் தாண்டி, தோனியின் முழுமையான பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் அவசியமானது.

தோனி

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR

ஏனென்றால், தோனி சிறந்த ஆட்டக்காரர். உலகக்கோப்பை அரையிறுதி போன்ற உயர் அழுத்தம் இருக்கும் போட்டிகளில், தோனியைப் போன்ற அனுபவம் வாய்ந்த, பொருத்தமான வீரரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

பந்து வீச்சாளர்களில் யாரெல்லாம் அணியின் வெற்றிக்கு உதவுவார்கள் என்று பார்த்தால், ஹார்திக் பாண்ட்யா சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தாலும், சிலவற்றில் நிராசை ஏற்படுத்தியிருக்கிறார்.

கேதர் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்றவர்களுக்கு பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பதும் கிடைத்தவற்றில் அவர்கள் தங்களை சிறந்த பந்து வீச்சாளர்களாக நிரூபித்தார்களா என்பதும் மிகப்பெரிய கேள்வியே.

இதுபோன்ற பல்வேறு கோணங்களையும் அலசி ஆராய்ந்தால், இந்திய அணி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மயங்க் அகர்வாலை, இலங்கை அணிக்கு எதிராக களமிறக்க முடிவெடுக்கலாம்.

இந்த உலகக் கோப்பையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்கள் முத்திரையை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

Presentational grey line
Presentational grey line

பும்ரா, முகமது ஷமி இருவருமே பல போட்டிகளில் வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். அதேபோல், காயம் காரணமாக ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமாரின் அணிக்கு திரும்பி வந்திருப்பதும் சாதகமான அம்சம் என்றே கூறலாம்.

இங்கிலாந்தின் வானிலையும், பந்து காற்றில் சுழலும் வேகத்தையும் கவனத்தில் கொண்டால், அடுத்து வரும் போட்டிகளை எதிர்கொள்ள இந்த மூன்று பந்து வீச்சாளர்களும் இந்திய அணிக்கு தேவை.

அதேபோல், சுழல்பந்து வீச்சாளர்களில் சாஹலைத் தவிர வேறு யாரும் பெரிதாக தென்படவில்லை என்பதோடு, விக்கெட் எடுப்பதிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இலங்கைக்கு எதிரான போட்டியில் சாஹலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, குல்தீப் யாதவ் களம் இறக்கப்படலாம்.

உலக்கோப்பை போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி உட்பட பல அணிகளும் சுழற்பந்து வீச்சின் முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளன.

இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து அணி போன்ற ஒரு வலுவான அணியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே, லீட்ஸில் சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும் போட்டியில் இந்திய அணி மேற்கூறிய அனைத்து சாத்தியக் கூறுகளையும் கருத்தில் கொண்டுதான் தனது உத்தியை திட்டமிட வேண்டும்.

மறுபுறத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியைத் தவிர பிற போட்டிகளில் தனது திறமையை இலங்கை அணி வெளிப்படுத்தவில்லை.

உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இலங்கையின் பிரதான பயிற்சியாளரான சண்டிகா ஹதுருசிங்கா, பிபிசிக்கு அளித்த பேட்டியில் "உலகக்கோப்பை போட்டிக்கு வருவதற்கு முன்னதாக எங்கள் அணியில் பலமுறை மாறுதல்கள் செய்யப்பட்டது. அதனால் ஒரு நிலைத்தன்மை இல்லாமல் போனது. இருந்தாலும், நாங்கள் சில போட்டிகளிலாவது வெற்றியை பதிவு செய்துவிட்டு நாடு திரும்புகிறோம். நாட்டுக்காக விளையாடுவது என்பது எப்போதுமே பெருமைக்குரிய விஷயம்தான். அதை இறுதி வரை தக்க வைக்க பாடுபடுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் கொழும்புவுக்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக தங்கள் ரசிகர்களுக்கு ஓரளவுக்காவது ஆறுதல் தரவேண்டும் என்ற விருப்பம் அந்த அணியினருக்கு இருப்பது இயல்பானதே.

காயத்திற்கு மருந்து போட கிடைக்கும் இறுதி வாய்ப்பை இலங்கை அணி தவறவிடாது என்பது உறுதி.

2017 சேம்பியன்ஸ் ட்ரோப்பியில் இங்கிலாந்து மண்ணில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடியபோது, 321 ரன் என்ற இலக்கை, இலங்கை அணி மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது.

ஆனால் தற்போது, அது போன்ற லட்சியத்தை எட்டும் மனோபலம் இலங்கைக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

இதனால்தான் வெள்ளிக்கிழமையன்று, ஹெடிக்லி மைதானத்தில் இலங்கை அணியின் பாதிக்கு மேற்பட்ட வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்கள் போலும்.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்க்கும்போது, இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் முனைந்து போராடும். ஆஸ்திரேலியா உடனான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெல்லும் என்று இந்தியா நம்புகிறது.

இந்த நம்பிக்கை வெற்றி பெற்றால், இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெறும். அதோடு, பட்டியலில் நான்காவது இடத்தில் இடம் பெறும் அணியை, இந்திய இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :