ஆரோன் ஃபிஞ்ச், பெர்ண்டோர்ப் அபாரம்: அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்?

மீண்டும் இங்கிலாந்து தோல்வி - அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்?

பட மூலாதாரம், Andy Kearns

லண்டனில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய பணித்தது.

இதன்படி பேட் செய்த ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது. அணித்தலைவர் ஆரோன் ஃபிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர் வீசிய பந்துகளை நன்கு அடித்து விளையாடினர்.

இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தனர். டேவிட் வார்னர் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஆரோன் ஃபிஞ்ச் 2 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளின் உதவியோடு 116 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இதனால் 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர் இணை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர் இணை

286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது ரன் குவிப்பை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாறியது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் வின்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, நட்சத்திர பேட்ஸ்மேன் ரூட் மற்றும் அணித்தலைவர் மார்கன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின் வரிசை வீரர்கள் சரியாக விளையாடாத காரணத்தால், இங்கிலாந்து அணி 44.4 ஓவரில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஒருவர் மட்டுமே ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து 89 ரன்கள் எடுத்தார்.

குறிப்பாக இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிக நன்றாக பந்துவீசினர். 44 ரன்கள் மட்டும் கொடுத்து பெர்ண்டோர்ப் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

மீண்டும் இங்கிலாந்து தோல்வி - அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்?

பட மூலாதாரம், Getty Images

இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

தான் விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று 12 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.

அதேபோல் 6 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள நியூசிலாந்து மற்றும் 5 போட்டிகளில் விளையாடி 9 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியா ஆகிய அணிகளும் அரையிறுதி விளையாட ஏறக்குறைய தகுதிபெற்றுள்ளன.

இந்நிலையில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அரையிறுதி போட்டியில் விளையாட தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் அண்மையில் பெற்ற வெற்றிகளால் அரையிறுதி போட்டியில் விளையாட தகுதி பெறும் அணிகள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இதனால் வரும் 30-ஆம் தேதியன்று இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதவுள்ள போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :