You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
INDvsNZ : ரோகித் சர்மா முதல் ஹர்திக் பாண்ட்யா வரை - ஏமாற்றமளித்த பேட்டிங், பெளலிங்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே வெலிங்டனில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 முக்கிய காரணங்கள் இவைதான்.
இந்தியாவை மிரட்டிய இளம் நியூசிலாந்து வீரர்
நியூசிலாந்து அணியின் மூத்த வீரர் மார்ட்டின் கப்டிலுக்கு பதிலாக இந்த போட்டியில் களமிறங்கிய இளம் வீரரான டிம் சீஃபர்ட், அந்த அணி 219 என்ற வலுவான ஸ்கோரை குவிக்க பெரிதும் உதவினார்.
தொடக்க வீரராக களமிறங்கிய டிம் சீஃபர்ட், 43 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் உள்ளடங்கும்.
துல்லியம் தவறிய இந்திய பந்துவீச்சாளர்கள்
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அதிக அளவில் ரன்கள் குவிக்க இந்திய பந்துவீச்சாளர்களின் இலக்கு தவறிய பந்துவீச்சே பெரும் காரணமாக அமைந்தது.
பொதுவாக சிறப்பாக பந்துவீசம் புவேனஸ்வர் குமார், கலீல் அகமது ஆகிய இருவரும் தாங்கள் வீசிய 8 ஓவர்களில் 95 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தனர்.
அதேபோல் ஹர்திக் பாண்ட்யாவும் தான் வீசிய 4 ஓவர்களில் 51 ரன்களை கொடுத்தார்.
ஏமாற்றமளித்த இந்திய பேட்ஸ்மேன்கள்
இந்திய வீரர்களில் ஷிகர் தவான் மற்றும் விஜயசங்கர் ஆகிய இருவரும் முறையே 29, 27 ரன்களை எடுத்தனர்.
முன்னாள் அணித்தலைவர் எம். எஸ். தோனி 39 ரன்கள் எடுத்தார். இவர்களை தவிர மற்ற வீரர்கள் பெரிதும் ஏமாற்றமளித்தனர்.
ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட பல இந்திய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தது அணியின் தோல்விக்கு வழிவகுத்தது.
நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அபாரம்
தனது பேட்டிங்கை துவக்கிய இந்தியா தொடக்கம் முதலே தடுமாறியதற்கு முக்கிய காரணம் நியூசிலாந்து வீரர்களின் அபார பந்துவீச்சு தான்.
குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தி மிக சிறப்பாக பந்துவீசினார். தான் வீசிய 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் தந்து 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.
அவரது பந்துவீச்சில் ரன்கள் குவிக்க இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிதும் தடுமாறினர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த இந்தியா
மேலும் தனது பேட்டிங்கில் ரன்கள் குவிக்க இந்தியா பெரிதும் தடுமாறியதற்கு காரணம் அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததுதான்.
பேட்ஸ்மேன்களால் நல்ல பார்ட்னர்ஷிப் எதுவும் தர முடியாத காரணத்தால் அது நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்தது.
முன்னதாக, இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :