You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
India vs New Zealand: நியூசிலாந்து மண்ணில் தொடரை வென்றது கோலி படை
இந்தியா நியூசிலாந்து இடையே நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்றியுள்ளது.
ஆட்ட நாயகனாக மொஹமத் ஷமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ரோஹித் ஷர்மாவும், கேப்டன் விராட் கோலியும் அரை சதம் அடித்தனர்.
முன்னதாக முதல் விக்கெட்டுக்கு ஷிகர் தவன் மற்றும் ரோஹித் ஷர்மா இணைந்து 39 ரன்கள் சேர்த்தனர்.
விராட் கோலி - ரோஹித் ஷர்மா இணை ஆட்டத்தின் 29-வது ஓவரில் பிரிந்தது. இவ்விருவரும் அவுட் ஆனாலும் தினேஷ் கார்த்திக் மற்றும் அம்பதி ராயுடு இருவரும் பொறுப்பாக விளையாடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
இந்தியா 43-வது ஓவரிலேயே வெற்றிக்கான ரன்களை எடுத்தது. தினேஷ் கார்த்திக் 38 பந்தில் 38 ரன்களும் அம்பதி ராயுடு 42 பந்தில் 40 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணி சார்பில் டிரென்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா ஏற்கனவே வென்றுவிட்ட நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியை இந்தியா வெல்வதற்கு 244 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து.
பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்த்துக் கொள்ளப்பட்டார் . விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இணைந்தார்.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. கொலின் முன்றோவை ஏழே ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் முகமது ஷமி.
மற்றொரு தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் இந்திய பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் பந்தில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன் பிறகு கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் இணை சிறிது நேரம் பொறுமையாக விளையாடியது. இதனால் நியூசிலாந்து அணியின் ரன் ரேட் மந்தமாகவே இருந்தது. ஆட்டத்தின் 17 வது ஓவரில் நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் சாஹல் பந்தில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 59/3.
ராஸ் டெய்லர், டாம் லாதம் இணை பின்னர் பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. குறிப்பாக ராஸ் டெய்லர் பௌண்டரிகளை விளாசி வந்தார். இந்த இணையை சாஹல் பிரித்தார். 119 ரன்கள் சேர்த்தது இந்த இணை.
டாம் லாதம் 51 ரன்கள் அடித்து அவுட் ஆன நிலையில் அதன் பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை சீரான இடைவெளிகளில் கைப்பற்றிவந்தனர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராஸ் டெய்லர் 93 ரன்களில் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை ஷமி கைப்பற்றினார்.
ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். புவனேஷ்வர் குமார், சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 243 ரன்களை மட்டுமே சேர்த்து நியூசிலாந்து.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :