You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிறவெறி தாக்குதல்: பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுக்கு தடைவிதிப்பு
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான அன்டிலி பிக்குவாயோ குறித்து இன ரீதியான சொல்லை பயன்படுத்தி வசைபாடியதை ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமதுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா இடையே டர்பனில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தங்களின் இனவெறி எதிர்ப்பு விதியை சர்பராஸ் அகமது மீறிவிட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.
31 வயதாகும் சர்பராஸ் தனது செயலை குறித்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார். மேலும் குறிப்பாக யாரையும் குறிப்பிட்டு இந்த வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
ஐசிசி விதித்துள்ள தடையால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கவுள்ள இரு ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டி20 போட்டிகளில் சர்பராஸ் விளையாட முடியாது.
ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரியான டேவிட் ரிச்சர்ட்சன் இது குறித்து கூறுகையில், ''தனது குற்றத்தை சர்பராஸ் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பொது மன்னிப்பும் கோரியுள்ளார். அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு அவர் மீது இந்த தடை நடவடிக்கை விதிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
கிரிக்கெட் ஸ்டம்பில் பொருத்தப்பட்ட மைக்ரோபோனில் கருப்பு என்று பொருள்தரக்கூடிய ''காலா'' என்ற வார்த்தையை சர்பராஸ் அகமது பயன்படுத்தியது ஐசிசி நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
மொழி, வார்த்தை, செய்கை அல்லது வேறொரு வடிவம் மூலம் ஒருவரை அவரது மொழி, இனம், நிறம், தேசியம், மதம் போன்ற ஒரு அம்சத்தை குறைகூறுவது, ஏளனப்படுத்துவது, அவமானம் செய்தல் அல்லது அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோரை தண்டிக்கும் ஐசிசியின் சட்டப்பிரிவு மூலம் சர்பராஸ் அகமதுக்கு மேற்கூறிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள ஒருநாள் போட்டியில் சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படுவார்.
பிற செய்திகள்:
- பிலிப்பைன்ஸ் தேவாலய குண்டுவெடிப்பில் 20 பேர் பலி
- நீங்கள் என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாக இருக்க இதுதான் காரணம்
- இனப்பிரச்சினைக்கான தீர்வு இந்த அரசாங்கத்தில் கிடைக்காது: இலங்கை அமைச்சர்
- "மருத்துவ படிப்பு இடங்கள் 30% அதிகரிக்கப்பட்டுள்ளது" - பிரதமர் நரேந்திர மோதி
- “நான் என்றும் ஏழைகள் பக்கமே நிற்பேன்” – பிரதமர் நரேந்திர மோதி உரை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :