You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிலிப்பைன்ஸ் தேவாலய குண்டுவெடிப்பில் 20 பேர் பலி - முஸ்லீம் பகுதிகளுக்கு தன்னாட்சி காரணமா?
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இரு வெடிகுண்டுகள் வெடித்ததில் 20 பேர் இறந்துள்ளதாகவும், பல டஜன் மக்கள் காயமடைந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய போராளிகள் தீவிரமாக உள்ள ஜோலோ தீவில் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தின்போது முதல் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஒரு கருவி ரிமோட் மூலம் வெடித்தது.
இந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை முஸ்லீம் பகுதிக்கு அதிக சுயாட்சி தர கோரி நடந்த கருத்தறியும் வாக்களிப்புக்கு பிறகு இந்த தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. அபு சாயாஃப் குழு உள்ளிட்ட போராளி குழுக்களின் மையமாக ஜோலோ தீவு நீண்டகாலமாக இருந்து வருகிறது.
தேவாலயத்தில் நடந்த முதல் குண்டு வெடிப்பு உள்ளூர் நேரம் 08:45 மணிக்கு உள்ளூர் நேரம் (00:45 GMT) நிகழ்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கு அடுத்து தேவாலயத்தின் வாசலில் விரைவாக இரண்டாவது வெடிப்பு நடந்தது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் ஆவர்.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட படங்கள் தேவாலயத்திற்கு செல்லும் பிரதான சாலையை முழுவதும் முடக்கப்பட்டு, கவசம் அணிந்த ராணுவ வீரர்கள் அவ்விடத்தை சூழ்ந்திருப்பதை காண்பித்துள்ளன.
காயமடைந்தவர்களில் சிலர் அருகிலுள்ள நகரமான ஷாம்போங்கோவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலை ''ஒரு மிகவும் கோழைத்தனமான செயல்" என்று வர்ணித்துள்ள அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் டெல்ஃபின் லோரன்சானா, தீவிரவாதத்திற்கு எந்த வெற்றியும் கிட்டாத வகையில் உள்ளூர் மக்களை அதிகாரிகளுடன் இணங்கி பணியாற்ற வேண்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, கடந்த வாரம் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில், வாக்காளர்கள் தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பெரும்பான்மை முஸ்லீம் பகுதிகளில் இருந்து தன்னாட்சி பிராந்தியமாக பாங்கஸாமோரோ பகுதியை உருவாக்க ஆதரவு தெரிவித்து மக்கள் வாக்களித்தனர்.
ஆனால், ஜோலோ தீவு அமைந்துள்ள சுலு மாகாணத்தில் உள்ள வாக்காளர்கள், இதனை நிராகரித்து வாக்களித்தனர்.
அரசாங்கத்திற்கும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சமாதான உடன்படிக்கையின் விளைவாக இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு நடைபெற்றது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :