You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
4 மணி நேரத்தில் கட்டிய மூங்கில் வீடு: ரூ.46 லட்சம் பரிசு பெற்ற பிலிப்பைன்ஸ் இளைஞர்
23 வயது பிலிப்பைன்ஸ் இளைஞர் ஒருவர் நான்கு மணி நேரத்தில் கட்டிய மூங்கில் வீடு அவருக்கு 64,385 அமெரிக்க டாலர் மதிப்புள்ள (இந்திய ரூபாயில் சுமார் 46 லட்சம்) பரிசுத் தொகையைப் பெற்றுத் தந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் குடிசைகள் பெருகுவதை சமாளிக்கும் வகையில், குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியில் அவர் இந்த வீட்டை வடிவமைத்துள்ளார்.
அவரது பெயர் ஏர்ல் பேட்ரிக் ஃபார்லேல்ஸ். அவர் உருவாக்கியுள்ள இந்த மூங்கில் வீட்டை கட்டுவதற்கு 1 சதுர மீட்டருக்கு (10.76 சதுர அடி) சுமார் 3,500 ரூபாய்தான் (50 அமெரிக்க டாலர்) செலவாகிறது.
பிபிசி உலக சேவையிடம் பேசிய பேட்ரிக், தாம் உருவாக்கியது ஒரு நடைமுறைக்கு உகந்த வீடு என்று கூறினார். வழக்கமான வீட்டை விடவும் இதில் கூடுதலாக ஒரு வசதி உள்ளது என்று கூறிய அவர் "சமூகத்தில் உருவாகும் குப்பையை பயனுள்ள வளமாக மாற்றிக்கொள்ளும் வகையில் இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
மணிலாவைச் சேர்ந்தவரான ஃபோர்லேல்ஸ் கட்டிய இந்த மூங்கில் வீட்டுக்கு 'ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் சர்வேயர்ஸ்' அமைப்பு ரூ.46 லட்சம் மதிப்புள்ள பரிசை அளித்துள்ளது.
இந்த பரிசுத் தொகையைக் கொண்டு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள 'கியூபோ' சமுதாய வீடு கட்டும் திட்டத்துக்கான மாதிரியை உருவாக்கப் பாடுபடப் போவதாக அவர் கூறினார்.
மணிலாவின் மக்கள் தொகை 1.2 கோடி. இவர்களில் 40 லட்சம் பேர் மேம்படுத்தப்பட்ட குடிசைகளில் வாழ்கின்றனர். அடுத்த மூன்றாண்டுகளில் இந்த நகருக்கு சுமார் 25 லட்சம் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் வழங்குவது வளர்ந்துவரும் இந்த நகருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
10.73 சதுதர அடிக்கு ரூ.3,500தான் செலவாகிறது.
கிராமத்தில் உள்ள தமது பாட்டிவீடு மூங்கிலில் கட்டப்பட்டதாகவும், அந்த வீட்டில் இருந்தே தமக்கு இந்த மூங்கில் வீடு குறித்த யோசனை உதித்ததாகவும் கூறுகிறார் இவர். ஆனால், ஏர்ல் பேட்ரிக் உருவாக்கியுள்ள வீட்டில் மூங்கில் நன்கு பக்குவப்படுத்தப்பட்டு, லேமினேட் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மூங்கிலின் ஆயுள்காலம் பத்து மடங்கு அதிகரிக்கப்படுகிறது என்கிறார் இவர்.
மேலும் மூங்கில் மரங்களைவிட 35 சதவீதம் அதிகம் ஆக்சிஜனை வெளியிடுவதாகவும், மண்வளத்தை பாதிக்காமல் ஆண்டுதோறும் மூங்கில் அறுவடை செய்துகொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
கியூபோ வீடுகள் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், வெள்ள நீர் புகாத வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறார் இவர். மூங்கில் விளைகிற நாடுகளில் உள்ள நெரிசலான நகரங்களுக்கு தமது வீட்டின் மாதிரி பொருத்தமாக இருக்கும் என்கிறார் ஃபோர்லேல்ஸ். குறிப்பாக தென்கிழக்காசியா, சில ஆப்பிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றுக்கு இந்த வீடு பொருத்தமாக இருக்கும் என்று கருத்தளவில் கூற முடியும் என்கிறார் இவர்.
தமது கியூபோ வீடு திட்டத்துக்கு பழைய பிளாஸ்டிக்குகளை தொழிற்சாலைகளுக்கு விற்று நிதி திரட்டப்போவதாக கூறுகிறார் இந்த இளைஞர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :