INDIA vs AUSTRALIA : தோனியின் கடைசி ஓவர் சிக்ஸர், கோலியின் சதம் - இந்தியா வெற்றி

விராட் கோலி

பட மூலாதாரம், Daniel Kalisz

அடிலெய்டில் இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது இந்தியா. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலைக்கு வந்துள்ளது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய பௌலர் பெஹண்டிராஃப் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. அந்த சிக்ஸர் மூலமாக இத்தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் அரை சதத்தை நிறைவு செய்தார் தோனி.

இன்றைய போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர் அணித்தலைவர் விராட் கோலி. 112 பந்துகளை சந்தித்து அவர் 104 ரன்களை குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது 39-வது சதம்.

அடிலெய்டில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இது.

அடிலெய்டு மைதானத்தில் இதுவரை கோலி சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவர் இம்மைதானத்தில் மூன்று முறை சதமடித்துள்ளார்.

விராட் கோலி

பட மூலாதாரம், BRENTON EDWARDS

தனது அணி இலக்கை துரத்தும் சமயங்களில் அதிக சதம் விளாசியவராக கோலி திகழ்கிறார். அவர் இதுவரை 24 சேசிங் சதங்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 17 சதங்கள் எடுத்திருக்கிறார்.

299 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில் ஆட்டத்தை துவக்கிய இந்தியா, முதல் பவர்பிளேவில் சிறப்பாக விளையாடியது. குறிப்பாக ஷிகர் தவன் தாக்குதல் பாணி ஆட்டத்தை கையிலெடுத்தார். இதனால் ஓவருக்கு ஒரு பௌண்டரி சராசரியாக அடிக்கப்பட்டது. ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். 28 பந்துகளில் அவர் 5 பௌண்டரியோடு 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

பொறுப்பாக ஆடிய ரோஹித் ஷர்மா 52 பந்துகளில் 2 பௌண்டரி, 2 சிக்ஸர்கள் விளாசி 43 ரன்கள் எடுத்தார். நான்காம் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அம்பதி ராயுடு பெரிதாக சோபிக்கவில்லை. மேக்ஸ்வெல் பந்தில் அவர் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டு பெவிலியன் சென்றார்.

ஆட்டத்தின் 44-வது ஓவரில் இந்திய 242 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலி ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி இலக்கை கடந்துவிடுமா என சந்தேகம் இருந்தது. ஆனால் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனியும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர்.

அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் இரண்டு பௌண்டரிகளோடு 25 ரன்கள் எடுத்தார். மகேந்திர சிங் தோனி 54 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒருநாள் போட்டிகளில் அவரது 68-வது அரை சதம் இது.

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 26 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் ஷான் மார்ஷ் சிறப்பாக விளையாடி 123 பந்துகளில் 131 ரன்கள் குவித்தார். ஷான் மார்ஷ் கடைசியாக சதமடித்த நான்கு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியுள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

ஆஸ்திரேலிய வீரர்கள்

பட மூலாதாரம், Matt King

கடைசி பத்து ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 37 பந்துகளில் 5 பௌண்டரி ஒரு சிக்சருடன் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இந்திய அணியின் முகமது சிராஜ் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார் 10 ஓவர்களில் 76 ரன்கள் கொடுத்திருந்தார். புவனேஷ்வர் குமார் இன்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். குல்தீப் யாதவுக்கு விக்கெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. முகமது ஷமி 10 ஓவர்களில் 58 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

''தோனி இன்று அருமையாக விளையாடினார். அவர் என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். நானும் தோனியும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறோம், இன்றைய போட்டி எங்களுக்கு மிகவும் சிறப்பானது'' என ஆட்டம் முடிந்த பிறகு அணித்தலைவர் கோலி பேசியுள்ளார்.

ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இப்போட்டியை இந்திய அணி வென்றுள்ளதால் தொடர் சமனுக்கு வந்துள்ளது. தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி மெல்பர்ன் மைதானத்தில் நடக்கவுள்ளது.

இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :