You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆர்ச்சி ஷில்லர்: இதய அறுவை சிகிச்சைக்குள்ளான 7 வயது சிறுவன் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன்
கிறிஸ்துமஸும், அதைத்தொடர்ந்து வரும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியும் ஆஸ்திரேலியாவில் மிகப்பிரபலம். இம்முறை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மோதுகின்றன.
மெல்பர்னில் நடக்கவுள்ள இப்போட்டியில் ஏழு வயது சிறுவன் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுக்கு உதவும் விதமாக துணை கேப்டனாக செயல்படுவார் என்கிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம். கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அடிலெய்டைச் சேர்ந்த இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஆர்ச்சி ஷில்லர் ஆஃப் ஸ்பின்னர் நாதன் லயானுடன் இணைவார். கடந்த சனிக்கிழமைதான் ஆர்ச்சிக்கு ஏழு வயதானது.
இம்மாத துவக்கத்தில் ஆர்ச்சீ இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விரிவாக்கப்பட்ட டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பார் என அறிவிக்கப்பட்டது. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடமிருந்து ஆர்ச்சிக்கு அலைபேசி மூலமாக தகவல் சொல்லப்பட்டது.
ஆர்ச்சி அணியில் இடம்பெற்றது ஏன்?
ஆர்ச்சிக்கு ஒரு கனவு இருந்தது. அது ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்பது. ஆனால் ஆர்ச்சியின் உடல் நிலை இடம்கொடுக்கவில்லை. அவரது சூழ்நிலையையும் ஆசையையும் புரிந்துகொண்ட ஆஸ்திரேலிய அணி, மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் பதினான்கு பேர் கொண்ட அணியில் சேர்த்துக்கொண்டது.
ஆர்ச்சி மூன்று மாத குழந்தையாக இருக்கும்போது அவரது இதயத்தில் பிரச்சனை இருந்தது கண்டறியப்பட்டது. சுமார் ஏழு மணிநேரம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஆறு மாதங்கள் கழித்து, ஆர்ச்சிக்கு மீண்டும் இதயத்தில் பிரச்சனை. மன உறுதி கொண்ட ஆர்ச்சியின் இதயம் சீரற்ற துடிப்புக்கு உள்ளானது. பிரச்சனைக்குரிய இதய வால்வுகளை சரிசெய்ய நிபுணர்கள் போராடினர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் இச்சிறுவனுக்கு இதய பிரச்சனை வந்தது. சிறுவனின் குடும்பம் துணிந்து மூன்றாவது இதய அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டது. தனது மகனோடு வீட்டுக்கு திரும்ப முடியாமல் போகலாம் எனும் யதார்த்தத்தையும் அவர்கள் உணர்ந்திருந்தனர்.
'' அறுவை சிகிசிச்சை எப்படி வேண்டுமானாலும் முடியலாம் என்பது எங்களுக்கு சொல்லப்பட்டிருந்தது'' என்கிறார் ஆர்ச்சியின் தாய் சாரா.
''எதையும் நாம் தீர்மானிக்க முடியாது என்பதை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். மேலும் அவனுடன் நாங்கள் இருக்கும் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டுள்ளோம்''
''ஆர்ச்சி தனது பள்ளி வாழ்வைத் தொலைத்திருக்கிறார். இதனால் அவரது நட்பு வாழ்க்கையில் பெரும் தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் நீங்கள் உங்களுக்கான பேட்டிங் வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் இரண்டாவது வாய்ப்பு கிடைக்காதல்லவா! மற்றொருநாள் என்னிடம் என் மகன் வந்து பேசினான் 'எனக்கு நண்பர்கள் கிடைக்கவில்லை. மேலும் நண்பர்களைத் தேடிப்பெற என்னிடம் சக்தி இல்லை. ஆகவே நான் அமர்ந்து புத்தகம் படிக்கிறேன் அவ்வளவுதான்' என்றான். அதைக் கேட்டபோது என் மனம் நொறுங்கியது'' என்கிறார் ஆர்ச்சியின் தாய்.
''ஆர்ச்சி மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்துவந்திருக்கிறான். அவன் என்னவாக விரும்புகிறான் என அவனது தந்தை கேட்டபோது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக வேண்டும் எனச் சொல்லியிருக்கிறான். ஆர்ச்சி போன்ற ஒருவன் அணியில் இருக்கும்போது நிஜமாகவே உத்வேகம் கிடைக்கும். அவனது முதல் போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்'' என்கிறார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்