You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செயலற்றுபோன அமெரிக்க அரசுத்துறைகள்: தற்போதைய நிலை என்ன?
நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக பகுதியளவு பாதிப்படைந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் செயல்பாடுகள் வரும் ஜனவரி 3ஆம் தேதிவரை சென்றடைவதற்கு வாய்ப்பில்லை என்று அதிபர் டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - மெக்ஸிகோ இடையே எல்லை சுவர் கட்டுவதற்கு 5 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு கோரும் அதிபர் டொனால்டு டிரம்பின் வேண்டுகோளுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவே அரசின் செலவினங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் அரசின் செயல்பாடுகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பகுதியளவு முடங்கியுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்தின் தற்காலிக தலைமை பணியாளரான மிக் முல்வனே, ஜனநாயக கட்சியினர் இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், எல்லை சுவர் கட்டுவதற்கு எந்த வகையிலும் ஜனநாயக கட்சி உதவமாது என்று அக்கட்சியின் செனட்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - மெக்ஸிகோ இடையில் எல்லை சுவர் அமைக்கும் திட்டத்திற்கு எந்த வகையிலும் உதவாதா என்று ஏபிசி தொலைக்காட்சி நேர்காணலில் பதிலளித்த செனட்டர் ஜெஃப் மெர்க்கிலி, "ஆம், அது சரிதான்" என்று கூறினார்.
இந்நிலையில், தனது திட்டத்தை ஆதரிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிரம்ப், போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல்கள் போன்ற பலவற்றை தடுப்பதற்கு நாட்டின் எல்லையில் சுவரை எழுப்புவதே ஒரே தீர்வு என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் பகுதியளவு முடக்கத்தின் காரணமாக, 9 அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று பணமின்றி வேலை செய்ய வேண்டும் அல்லது தற்காலிக விடுப்பு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அடுத்தது என்ன?
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர், அமெரிக்க பிரதிநிதிகள் சபை வரும் வியாழக்கிழமை மீண்டும் கூறுகிறது.
அன்றைய தினத்தில், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் பதவியேற்று கொள்கின்றனர். அதைத்தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையிலும் பெரும்பான்மையை பெறும் டிரம்ப் தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
எல்லை சுவர் திட்டம்
அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் எல்லை சுவர் கட்டுவது என்பது, அதிபர் டொனால்டு டிரம்பின் நீண்ட நாளைய உறுதிமொழிகளில் ஒன்று. தன்னுடைய தேர்தல் பிரசாரங்களில் தொடங்கி தற்போது வரை அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் பிரம்மாண்ட சுவர் கட்டும் திட்டம் பற்றி தொடர்ச்சியாக பேசி வருகிறார். முதலில் கட்டப்படும் சுவருக்கு மெக்ஸிகோவிடமிருந்தே நிதி பெறப்படும் என்று கூறி வந்தார்.
இந்நிலையில், இந்த திட்டத்திற்கான நிதியை பெறுவதில் டிரம்பின் அணுகுமுறை தலைகீழாக மாறியுள்ளது. தற்போது அமெரிக்க அரசாங்கத்தின் நிதியை முதலாக கொண்டு இந்த திட்டம் செயற்படுத்தப்படும் என்றும், பிறகு மெக்ஸிகோ மறைமுகமாக அதற்கான பணத்தை திரும்ப செலுத்தும் என்றும் கூறி வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்