காமன்வெல்த்: வெல்லும் வரை சிரிக்காத மனு, தங்கத்தை நோக்கிச் செல்லும் மேரி கோம்
- எழுதியவர், ரெஹான் ஃபஜல்
- பதவி, பிபிசி, கோல்டு கோஸ்ட், ஆஸ்திரேலியா
காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அனைவருக்கும் பிஸ்டல் வழங்கப்பட்டபோது, அனைவரும் ஒருவிதமான பதற்றத்துடன் பார்வையாளர்களை நோக்கி வணங்கினர். ஆனால், ஒருவர் மட்டும் மிக தீர்க்கமாக இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அவரது பார்வை ஏதோ ஒன்றில் குவிந்து இருந்தது. அவர் வேறு யாருமில்லை இந்தியாவை சேர்ந்த மனு பாகர்தான்.
அரங்கம் நிறைந்த கைத்தட்டல்கள் அவரது கவனத்தை சிதைக்கவில்லை. தன்னையே மறந்து தன் கவனம் முழுவதையும் ஆட்டத்தில் குவித்திருந்தார்.
அவர் இந்த போட்டியின்போது சிறிதும் சிரிக்கவில்லை. அவர் முதல்முதலாக சிரித்தது, அவருக்குத் தங்கப் பதக்கம் கிடைத்துவிட்டது என்பது உறுதியான பின்புதான்.
தங்கப் பதக்கம் வென்றது உறுதியான பின்பும் எதுவும் பேசாமல் ரோபோ போல ஹீனா சித்துவை அணைத்தார்.
ஹரியானா மாநிலத்திலுள்ள கொரியா கிராமத்தை சேர்ந்தவர் மனு. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.
இந்த காமன்வெல்த்தின் இறுதி போட்டியில், 24 இலக்குகளையும் தனது கால் சட்டையின் பாக்கெட்டுக்குள் ஒரு கையை வைத்துக்கொண்டே சுட்டார்.
எட்டு முறை சுட்டபின்னர் தனக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பாட்டிலில் இருந்து ஒரு முடக்கு நீரைக் குடித்தார். அந்தப் போட்டியில் அவர் தங்கம் வென்றதும் அவர் எளிதாக வெற்றி பெற்றது குறித்துக் கேட்டேன். ஆனால், தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறியாத வகையில் தான் சுடுவதில் மட்டுமே கவனம் செலுத்தியதாக அவர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
இன்னொரு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான ஹீனா சித்து ஒரு கட்டத்தில் ஏழாம் இடத்தில் இருந்தார். அப்போது அவர் போட்டியில் இருந்தே வெளியேற்றப்படும் அளவுக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டார். எனினும், தொடர்ச்சியாக சிறப்பாக சுட்டு பத்துப் புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் நிறைவு செய்தார்.
போட்டி முடிந்தபின் என்னிடம் பேசிய அவர், துப்பாக்கி விசையை இயக்கும் விரலில் தமக்குக் காயம் ஏற்பட்டிருந்தததால், சுடுவதில் சிரமம் இருந்ததாக என்னிடம் கூறினார். அவரது கடைசிநேர முயற்சிகளால் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை இரண்டானது.
மேரி கோம் தங்கம் வெல்ல வாய்ப்பு
ஸ்காட்லாந்தின் மேகன் கார்டன்ஸை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று, 48 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளதால் இந்தியாவின் மேரி கோம் குறைந்தது வெண்கலம் வெல்வது உறுதியாகியுள்ளது. ஆனால், நிச்சயமாக அவர் தங்கம் வெல்லவே முற்படுவார். மேரி இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றதில்லை.
இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மூன்று குழந்தைகளுக்கு தாயாகவும் உள்ள மேரி கோம் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டபின் மிகவும் பிரபலமாக இருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
விளையாட்டு கிராமத்தில் இருந்து மேரி கோம் வெளியே வந்தபோது, ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டதுடன் அவரது கையெழுத்தையும் பெற்றுக்கொண்டனர். 'தி ஆஸ்திரேலியன்' எனும் பிரபல நாளிதழ் அவரது படத்துடன் மேரி பற்றிய சிறப்புக் கட்டுரை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
டேக்சி ஓட்டுனர்கள் பாதிபேர் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள்
காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் கோல்டு கோஸ்டில் டேக்சி ஓட்டும் பெரும்பாலானவர்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். சிட்னி மற்றும் மெல்பர்ன் ஆகிய நகரங்களில் இருக்கும் டேக்சி ஓட்டுநர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்களே. நீங்கள் காருக்குள் ஏறி அமர்ந்ததும் அவர்கள் இந்தி அல்லது பஞ்சாபியில் பேசத் தொடங்கிவிடுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் இந்தியர்கள், டேக்சி ஓட்டுநராக தங்கள் பணியைத் தொடங்கினாலும், பின்னர் வேறு பணிக்கு மாறி விடுகிறார்கள். பஞ்சாபின் கிராமங்களில் இருந்து வரும் அவர்கள் விரைவில் ஆங்கிலமும் கற்றுக்கொள்கிறார்கள். இங்கு படிக்கும் சில இந்திய மாணவர்களும் பகுதி நேரமாக டேக்சி ஓட்டுகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது ஒரு ஆஸ்திரேலிய நாளிதழ் 'டேக்சி ஓட்டுநர்களை எதிர்கொள்ளும் டிராம் ஓட்டுநர்கள்' என்று தலைப்பிட்டிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












