ரசாயன தாக்குதல்: சிரியா, ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images
சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், சிரிய அதிபர் பஷார் அல் அசாத் மற்றும் அவரின் கூட்டாளியான ரஷ்யா மற்றும் இரான் ஆகிய நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கு "அதிக விலை கொடுக்க நேரிடும்" என அவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் டவுமா நகரில் டஜன் கணக்கான மக்கள் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் திங்களன்று விசாரிக்கும் என நம்பப்படுகிறது.
சிரியா மற்றும் ரஷ்யா ரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுக்கின்றன.
ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அடுத்து பல்வேறு கண்டனங்கள் எழுந்த நிலையில்,
"தற்காப்பு இல்லாத மக்கள் மீது இத்தகைய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்துவதை எதை கொண்டும் நியாயப்படுத்த முடியாது" என போப் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகள் இது குறித்து பேச வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்துஇதுவரை தெரிந்த தகவல்கள்
மீட்பு பணியாளர்கள் பதிவு செய்த வீடியோ ஒன்றில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என பலர் உயிரற்ற நிலையில் வாயில் நுரை தள்ளியவாறு கிடப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
மற்றொரு வீடியோவில் குழந்தைகள் சிகச்சை பெறுவது போன்றும் அழுவது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
ஆனால் இந்த வீடியோக்கள் குறித்து சோதிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. மேலும் பலியானவர்கள் எண்ணிக்கை குறித்தும் உறுதியாக கூற இயலாது.
கிழக்கு கூட்டாவில் இருக்கும் மருத்துவ பராமரிப்பு மற்றும் நிவாரண ஒன்றியம் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












