வரலாறு படைத்த ஓட்டப் பந்தய வீரர் ரோஜர் பேனிஸ்டர் மரணம்

Roger Bannister ரோஜர் பேனிஸ்டர்

பட மூலாதாரம், Corbis

படக்குறிப்பு, வரலாற்றில் முதல் முறையாக நான்கு நிமிடத்துக்குள் ஒரு மைலைக் கடந்து இலக்கை எட்டிய ரோஜர் பேனிஸ்டர்.

ஒரு மைல் தூரத்தை முதல் முதலாக நான்கு நிமிடத்துக்குள் ஓடிக் கடந்து சாதனை படைத்த பிரிட்டிஷ் ஓட்டப்பந்தய வீரர் சர். ரோஜர் பேனிஸ்டர் தமது 88 வது வயதில் உயிரிழந்தார்.

ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடத்துக்குள் ஓடுவது மனிதர்களுக்கு சாத்தியமே இல்லை என்று பலகாலமாக கருதப்பட்டுவந்தது.

இந்நிலையில் 1954ம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டில் நடந்த பந்தயம் ஒன்றில் ரோஜர் பேனிஸ்டர் நான்கு நிமிடங்களுக்குள்ளாகவே ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடந்து சாதனை படைத்தார்.

அப்போது ஒரு மைலைக் கடக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் மூன்று நிமிடம், 59.4 விநாடிகள்.

நான்கு நிமிடத்துக்குள் ஒரு மைலைக் கடப்பது மனித சாத்தியமற்றது என்ற மனத்தடை உடைக்கப்பட்டதை அடுத்து மிகக் குறுகிய காலத்திலேயே மேலும் பலர் இந்த சாதனையை செய்தனர்.

இதனால், பேனிஸ்டரின் உலக சாதனை 46 நாள்களிலேயே முறியடிக்கப்பட்டது. ஆனாலும், உலகத் தடகள வரலாற்றில் அவருக்கு நீங்கா இடம் கிடைத்தது.

வரலாற்றில் முதல் முறையாக நான்கு நிமிடத்துக்குள் ஒரு மைலைக் கடந்து இலக்கை எட்டிய ரோஜர் பேனிஸ்டர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரலாற்றில் முதல் முறையாக நான்கு நிமிடத்துக்குள் ஒரு மைலைக் கடந்து இலக்கை எட்டிய ரோஜர் பேனிஸ்டர்.

1954-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் அதே தூரத்துக்கு நடந்த போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். பிறகு முன்னணி நரம்பியல் வல்லுநர் ஆனார். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சனிக்கிழமை மரணமடைந்தார்.

புகழாரம்

பேனிஸ்டர் ஒரு மாமனிதர், சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியவர் என்று உலகத் தடகள சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும், ஒருமைல் தூரத்தை குறுகிய நேரத்தில் ஓடிக் கடப்பதில் மூன்று முறை சாதனை படைத்தவருமான செபாஸ்டியன் கோ கூறினார்.

பேனிஸ்டர் பலருக்கும் ஊக்கமாகத் திகழ்ந்தவர் என்று நான்குமுறை ஒலிம்பிக் சேம்பியனான மோ ஃபரா குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :