திரிபுரா: 578 வாக்குகள் பெற்ற பாஜக ஆட்சியை பிடித்தது எப்படி?

- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
திரிபுராவில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லியிருந்தால் எல்லோரும் சிரித்திருப்பார்கள். ஏனெனில் 2013ல் நடந்த தேர்தலில் அவர்கள் ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் டெபாசிட் வாங்கினார்கள்.
இப்போது என்ன நடந்தது? 25 ஆண்டுகள் தாங்கள் ஆண்ட மாநிலத்தை கம்யூனிஸ்டுகள் பாஜக-விடம் இழந்திருக்கிறார்கள். இது மேற்கு வங்கத்தை தொடர்ந்து அவர்கள் இழக்கும் இரண்டாவது கோட்டையும்கூட.

1983ல் பாஜக பெற்ற வாக்குகள் எவ்வளவு?
1980ல் தொடங்கப்பட்ட பாஜக, 1983-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திரிபுரா மாநிலத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தம் பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? 578. அடுத்த தேர்தலில் 10 இடத்தில் போட்டியிட்ட பாஜக பெற்ற மொத்த வாக்குகள் 1,757. கடந்த 2013 தேர்தலில் அவர்கள் 50 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டுமே டெபாசிட் வாங்கினர். 2013வரை அவர்கள் 7 தேர்தல்களில் 232 இடங்களில் போட்டியிட்டு ஐந்து முறை மட்டுமே டெபாசிட் வாங்கியிருந்தனர்.
இவ்வளவு பலவீனமாக இருந்த பாஜக, ஐந்தே ஆண்டுகளில் இப்போது ஆளுங்கட்சியாகியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் 35 ஆண்டுகள் அங்கு ஆளுங்கட்சியாக இருந்த கம்யூனிஸ்டுகள் இப்போது தங்கள் சித்தாந்த எதிரிகளிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளனர்.
இதற்கான காரணம் என்ன? இது பற்றி இடதுசாரி முகாம் என்ன நினைக்கிறது?
பாஜக கொள்கைக்கு வெற்றியல்ல
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன், பாஜக இடதுசாரிகளுக்கு எதிரான சக்திகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தும், பண பலத்தை பயன்படுத்தியும்கூட கடந்த தேர்தலைவிட 5க்கும் குறைவான சதவீத வாக்குகளையே சிபிஎம் இழந்துள்ளது.

பட மூலாதாரம், Facebook/AK Padmanabhan
தற்போது பாஜக வெற்றிக்காக கூட்டணி அமைத்த பூர்வகுடி மக்கள் முன்னணி என்ற கட்சி, முன்பு ஆயுதம் தாங்கி தனி நாடு கேட்ட அமைப்பு. பிறகு தனி மாநிலம் கேட்டவர்கள். தேசிய ஒற்றுமை பேசும் பாஜக இவர்களோடுதான் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவின் இந்துத்துவா கொள்கைக்கு கிடைத்த வெற்றியல்ல என்றார்.
97 சதவீத எழுத்தறிவு
அதே நேரம், திரிபுராவில் நிலவிய சமூக மோதல்களைத் தடுத்து, அமைதியை ஏற்படுத்தி, சுகாதாரம், கல்வி, சராசரி ஆயுள் போன்றவற்றை மேம்படுத்தியது சிபிஎம்-மின் நீண்ட ஆட்சி. 97 சதவீத மக்கள் எழுத்தறிவு பெற்ற மாநிலமாக திரிபுராவை சிபிஎம் மாற்றியது. அதிகம் தொழிற்சாலைகள் தொடங்க முடியாத சூழ்நிலையில், படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமானதால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. தேவைக்கும் அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யும் திரிபுரா தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் அதனை மேற்கு வங்கத்துக்கு விற்றுவருகிறது.
இத்தனை ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தாலும் ஊழலற்ற ஆட்சியை வழங்கியிருக்கிறது சிபிஎம். தற்போது பிரிவினைவாதிகளோடு சேர்ந்து பாஜக அமைக்கவுள்ள கூட்டணி ஆட்சி மீண்டும் மலைவாழ் மக்களுக்கும் சமவெளியில் உள்ளவர்களுக்கும் இடையில் பிரிவினையின் விதைகளை ஊன்றி கலவரங்களுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது என்றார் பத்மநாபன்.
மே.வங்கத் தோல்வியின் நீட்சியா?
நீண்டகாலம் அதிகாரத்தில் இருந்ததால் கட்சி அணிகளிடையே ஏற்பட்ட எதேச்சதிகாரப் போக்கு தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்குமா என்று அவரிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். பாஜகவின் அதிகாரபலம், பண பலம், ஊடக பலம், கூட்டணி எல்லாவற்றையும் மீறி சுமார் 45 சதவீத வாக்காளர்கள் சிபிஎம்-முக்கு வாக்களித்துள்ளனர். சிபிஎம் ஊழியர்கள் அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும் நடந்துகொண்டதையே இது காட்டுகிறது என்றார் அவர்.

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்த சிபிஎம் அது முதல் தொடர்ந்து தோல்வியைத் தழுவுகிறது. திரிபுராவிலும் கணிசமான வங்காளிகள் இருக்கிறார்கள். வங்காளிகளிடம் தற்போது உருவாகியிருக்கும் சிபிஎம் எதிர்ப்பின் நீட்சியா இது என்று கேட்டபோதும் அதை மறுத்தார் பத்மநாபன்.
"வங்காளத்தில் உள்ள வங்காளிகளுக்கும், திரிபுரா வங்காளிகளுக்கும் இடையில் பொதுவான அரசியல் போக்கெல்லாம் இல்லை," என்று கூறிய அவர் கடந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் தோற்றாலும், திரிபுராவில் வெற்றி பெற்றதை அதற்கான நிரூபணமாக சுட்டிக்காட்டினார் பத்மநாபன்.
வேலையில்லாத் திண்டாட்டம்
வேலையில்லாத் திண்டாட்டம், அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பளக் குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அளிக்காதது ஆகிய உள்முகமான காரணங்களையும், பாஜக அதிகாரத்தையும், பணபலத்தையும் பயன்படுத்தியது, மக்களிடையே உள்ள பிரிவினையைப் பயன்படுத்தியது என்ற புறக் காரணங்களையுமே அவர் சுட்டிக்காட்டினார்.
நீண்டகாலம் ஆட்சியில் இருந்ததால் ஒருவேளை மாற்றம் ஏற்பட்டால் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று இளைஞர்கள் நம்பியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் உறவு விவாதம் காரணமா?
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் துணை அமைப்புகளில் பணியாற்றிய, கம்யூனிஸ்டு ஆதரவு எண்ணம் கொண்ட பலர் இணைந்து 'யங் பெங்கால்' என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.

அதன் செயலாளர் தேபர்ஷி சக்ரவர்த்தி பிபிசி தமிழிடம் பேசும்போது, திரிபுராவில் பாஜக பெற்ற வெற்றி வருத்தம் அளிக்கிறது. ஆனால், அதிர்ச்சி அளிக்கவில்லை என்றார். தங்களுக்கு சிபிஎம்-உடன் மாறுபாடு இருந்தாலும் இந்தமுறை அவர்கள் திரிபுராவில் வெல்லவேண்டும் என்றுதான் விரும்பினோம் என்றார் அவர்.
"கம்யூனிஸ்டுகள் 25 ஆண்டுகள் ஆண்டிருந்தாலும், மற்றவர்கள் தராத எதையும் அவர்களால் மக்களுக்குத் தந்துவிட முடியவில்லை. பாஜக அபாயம் வளர்ந்து வருவதை ஒட்டி, கம்யூனிஸ்டுகள் காங்கிரசோடு கூட்டணி வைக்கலாமா கூடாதா என்ற விவாதம் சிபிஎம் கட்சியை முடக்கிவிட்டது," என்றார்.
உங்கள் கருத்தில் கம்யூனிஸ்டுகள் காங்கிரசோடு கூட்டணி வைக்கவேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு, அது மாநிலத்துக்கு மாநிலம் உள்ள நிலைமைகளின் அடிப்படையில் எடுக்கவேண்டிய முடிவு. கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் அவர்கள் காங்கிரசோடு கூட்டணி வைக்கக்கூடாது. ஆனால், உ.பி. போன்ற மாநிலத்தில் அவர்கள் கூட்டணி வைக்கவேண்டும் என்றார்.
வீதிக்குச் செல்லவேண்டும்
காங்கிரசோடு கூட்டணி என்ற விவாதத்தின் பலனாகவே, திரிபுராவில் காங்கிரசில் இருந்த பலரை மொத்தமாக பாஜக இழுத்துக்கொண்டது என்றும், காங்கிரசின் வாக்கு இந்த தேர்தலில் 2 சதவீதத்துக்கும் கீழே குறைந்துவிட்டது இதைக்காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், காங்கிரசோடு கூட்டணி வைக்கலாமா, வேண்டாமா என்பதையெல்லாம் தாண்டி கம்யூனிஸ்டுகள் வீதிக்குச் செல்லவேண்டும், மக்களிடம் உறவாடவேண்டும். அவர்கள் இப்போது மக்களிடம் போவதில்லை என்கிறார் தேபர்ஷி.

'யங் பெங்கால்' அமைப்பின் தலைவர் பிரசன்ஜித் போஸ் இது தொடர்பாக முகநூலில் இட்ட ஒரு பதிவில், 25 ஆண்டுகால இடதுசாரி ஆட்சி மீதான அதிருப்தியின் பலனை அறுவடை செய்வதற்கான பாஜகவின் முயற்சி வெற்றி பெற்றிருப்பது வருத்தமளிப்பதாகவும், 2013ல் 52 சதவீதமாகவும், 2014ல் 64 சதவீதமாகவும் இருந்த இடது முன்னணியின் வாக்கு சதவீதம் 2018ல் 45 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
விலகிச் சென்ற பழங்குடிகள்
இடதுசாரிகளின் ஆட்சி மாதிரி, அவர்களின் கொள்கை மாற்று ஆகியவை மக்களின் கண்களுக்கு எவ்வளவு பெரிதாகத் தெரிகிறது என்பது குறித்து இடதுசாரிகள் சுயபரிசீலனை செய்துகொள்ளக் கோருகிறது இந்த புள்ளிவிவரம் என்று கூறிய அவர், பழங்குடி மக்களின் கணிசமான பகுதியினர், குறிப்பாக இளைஞர்கள் சிபிஎம் இடமிருந்து, இடது முன்னணியிடம் இருந்துவிலகிச் சென்றுவிட்டனர் என்கிறார்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
குறிப்பாக, வேலைவாய்ப்பு உருவாக்கம், பொருளாதார வளர்ச்சி, சமூக நீதி ஆகியவை தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளை இடது முன்னணி ஆட்சி நிறைவேற்றவில்லை என்பதை இந்த விலகல் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மேற்கு வங்கத்தில் ஏற்பட்டதைப் போன்ற மோசமான தோல்வி திரிபுராவில் சிபிஎம்-முக்கு ஏற்படவில்லை என்பதையும், மேற்கு வங்கத்தில் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரே தங்கள் தொகுதியில் தோற்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார் பிரசன்ஜித்.
கட்சி மட்டங்களில் எதேச்சதிகாரம்
சென்னையில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத இடதுசாரி சிந்தனையாளர் ஒருவர் இதுபற்றிக் கூறும்போது, மாணிக் சர்க்கார் அப்பழுக்கற்றவராக இருந்தாலும் நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்ததால் கட்சியின் வெவ்வேறு மட்டங்களில் ஏற்பட்ட எதேச்சதிகாரப் போக்கு தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.
வேலையில்லாத் திண்டாட்டத்தையும் முக்கியப் பிரச்சினையாகக் குறிப்பிட்ட அவர், திரிபுரா போன்ற ஒரு மாநிலத்தில் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான சாத்தியப்பாடுகள் இயல்பாகவே குறைவு என்பதையும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், TWITTER @NARENDRAMODI
இதையெல்லாம்தாண்டி, தற்போது நிலவும் புதுதாராளவாத யுகத்தில் அரசு செயல்படுவதற்கான வெளி சுருங்கி, எல்லாம் தனியாரிடம் போகிறது. மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இந்த அமைப்புக்குள் ஓர் அரசு நிறைவேற்றுவதற்கான சாத்தியம் குறைவு.
இந்நிலையில், தேர்தலில் பணபலத்தை பயன்படுத்துவது, இலவச வாக்குறுதிகள் இவையே தேர்தல் வெற்றிக்கான உத்திகளாகும். இந்த உத்தியை பாஜக பயன்படுத்திக்கொண்டுள்ளது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் வரலாறும், கொள்கையும் அவர்களது செயல்பாடுகளுக்கு ஒரு கட்டுப்பாட்டை விதிக்கின்றன. ஆனால், பாஜக-வுக்கு அப்படி எந்த கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் அகண்ட பாரதம் பேசுவார்கள், திரிபுராவில் செய்ததைப் போல பிரிவினைவாதிகளோடும் கூட்டணி வைப்பார்கள். இதுவும் ஒரு காரணம்.
அதே நேரம், பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் களத்தில் இறங்கி பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் வேலை செய்திருக்கிறார்கள் அதையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












