ஆஸி, இலங்கை அணிகளிடம் எளிதாக வென்ற இந்தியா நியூசிலாந்திடம் தடுமாறியதா?

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, ஒருநாள் போட்டி தொடரை வென்றது.

ஆஸி, இலங்கை அணிகளிடம் எளிதாக வென்ற இந்தியா நியூசிலாந்திடம் தடுமாறியதா?

பட மூலாதாரம், REUTERS/DANISH SIDDIQUI

இத்தொடரை வென்ற இந்தியா தொடர்ந்து ஏழாவது முறையாக இருதரப்பு ஒருநாள் போட்டி தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது.

அதே வேளையில், அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 4-1 என்று எளிதாக வென்ற இந்தியா, அதற்கு முன்பு இலங்கையில் அந்நாட்டுக்கு எதிராக நடந்த ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டி தொடர் என அனைத்தையும் வென்று ஒயிட்வாஷ் செய்தது.

கடந்த முறை இந்தியாவில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்த ஒருநாள் தொடரில், நியூசிலாந்து அணி கடும் சவால் அளித்ததால் இந்தியாவால் மிகவும் போராடி 3-2 என்றே தொடரை வெல்ல முடிந்தது.

நியூசிலாந்திடம் இந்தியா தடுமாறியதா?

பட மூலாதாரம், ICC

படக்குறிப்பு, நியூசிலாந்திடம் இந்தியா தடுமாறியதா?

இம்முறையும் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளதால், இது நியூசிலாந்து அணியின் சிறப்பான பங்களிப்பா அல்லது இந்திய அணியின் பலவீனமா என்பது குறித்தும் ,வரும் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு இவ்விரு அணிகளுக்கும் எந்தளவு உள்ளது என்பது குறித்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விஜய் தாஹியா பிபிசி தமிழிடம் உரையாடினார்.

'' நியூசிலாந்து அணி மிக சிறப்பாக விளையாடியது என்றே சொல்ல வேண்டும். அந்த அணியில் மிக பெரிய ஜாம்பவான்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரு அணியாக அவர்கள் ஒருங்கிணைத்து விளையாடியதுதான் அந்த அணியை ஒரு சவால் மிக்க அணியாக மாற்றியுள்ளது '' என்று விஜய் தாஹியா தெரிவித்தார்.

இந்தியாவின் சுழல் பந்துவீச்சை ஆஸ்திரேலியாவை விட நியூசிலாந்து சிறப்பாக எதிர்கொண்டது என்று தெரிவித்த விஜய் தாஹியா, உண்மையில் நியூசிலாந்து அணியே இந்த தொடரை வெல்ல தகுதி வாய்ந்த அணி என்றும், இறுதி கட்டங்களில் சற்றே தடுமாறியதால் அந்த அணியை தொடரை வெல்ல முடியவில்லை என்று விஜய் தாஹியா குறிப்பிட்டார்.

உலக கோப்பையை வெல்ல யாருக்கு வாய்ப்பு?

''நியூசிலாந்து அணி உலக கோப்பையை இதுவரை வெல்லாவிட்டாலும், இம்முறை அவர்கள் சிறப்பாக விளையாடுவர் என்று எதிர்ப்பார்க்கலாம். இங்கிலாந்து அணியின் ஆடுகளங்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் இருக்கும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

''இந்திய அணியில் பல திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். அணியின் பந்துவீச்சு நல்ல நிலையில் உள்ளது. வரவிருக்கும் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பங்களிப்பை பொருத்தும், வெளிநாடுகளில் அடுத்த ஆண்டில் நடக்கும் ஒருநாள் தொடர்களின் முடுவுகளை வைத்தும் உலக கோப்பையில் இந்திய அணியின் தாக்கம் இருக்கும்'' என்று கூறினார்.

ஆஸி, இலங்கை அணிகளிடம் எளிதாக வென்ற இந்தியா நியூசிலாந்திடம் தடுமாறியதா?

பட மூலாதாரம், BCCI

உலககோப்பை தொடங்க இன்னமும் காலம் இருப்பதால், இப்போதே யார் வெல்ல முடியும் என்று திடமான கருத்து கூற முடியாது என்று தெரிவித்த தாஹியா, ''உலக கோப்பையை வெல்ல இம்முறை இங்கிலாந்து அணிக்கு மிகவும் நல்ல வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற அணிகளுக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு இம்முறை பிரகாசமான வாய்ப்பு உள்ளது'' என்று குறிப்பிட்டார்.

நியூசிலாந்து அணியின் பலமா? இந்திய அணியின் அலட்சியமா?

2019-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பையில் அண்மையில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களின் தாக்கம் எந்தளவு இருக்கும் என்பது குறித்து கிரிக்கெட் வீரரும், விமர்சகருமான ரகுராமன் பிபிசி தமிழிடம் பேசினார்.

கிரிக்கெட் வீரர் ரகுராமன்
படக்குறிப்பு, கிரிக்கெட் வீரர் ரகுராமன்

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர் பற்றி குறிப்பிட்ட ரகுராமன் ''பொதுவாகவே ஒருநாள் போட்டி தொடர்களில் நியூசிலாந்து அணி ஒரு வலிமையான அணி. அண்மையில் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணிக்கு மிகவும் சவால் அளித்தது'' என்று தெரிவித்தார்.

உலக கோப்பையை வெல்ல இந்தியாவின் வாய்ப்பு எப்படி?

உலக கோப்பையை வெல்லும் அணி மிகவும் மன வலிமைபெற்ற அணியாக இருக்க வேண்டும் என்று கூறிய ரகுராமன், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகள் முக்கிய போட்டிகளான அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் நியூசிலாந்து போன்ற அணியை வெல்வதற்கு இந்த அணிகளின் மன வலிமைதான் காரணம் என்று கூறினார்.

''இந்திய அணியின் பந்துவீச்சு தற்போது நல்ல நிலையில் உள்ளது. உலக கோப்பை போட்டிகளில் டோனி நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும். அதுதான் அணிக்கு நன்மை தரும்.புவனேஷ் குமார் மற்றும் பூம்ரா இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்'' என்று இந்திய அணியின் வாய்ப்பு குறித்து அவர் தெரிவித்தார்.

சிறப்பாக பந்து வீசி வரும் பூம்ரா

பட மூலாதாரம், BCCI

படக்குறிப்பு, சிறப்பாக பந்து வீசி வரும் பூம்ரா

''எனது பார்வையில் இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் ஆகிய அணிகள் வரவிருக்கும் உலக கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளாக இருக்கும்'' என்று ரகுராமன் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :