You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் துவங்கியது இந்தியா
சனிக்கிழமை பிரிட்டனின் டெர்பியில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.
முதலில் மட்டை பிடித்து ஆடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் மூன்று பேர், இங்கிலாந்து பந்து வீச்சை சிதறடித்து, அதிரடியாக ரன்களை குவித்தனர்.
தொடக்க ஜோடியான பூனம் ராவத் 86 ரன், ஸ்மிரிதி மன்தானா 90 ரன்கள் எடுத்து அசத்தினர். அடுத்ததாக களம் இறங்கிய கேப்டன் மித்தாலி ராஜ் 71 ஓட்டங்களை குவிக்க 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 281 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியினர், இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.
தொடக்க ஆட்டக்காரர்களான பூமன்ட் 14 , டெய்லர் 22 என குறைவான ரன்களில் ஆட்டமிழக்க 11 ஓவர்களில் 42 ரன்களை இங்கிலாந்து எடுத்திருந்தது.
அடுத்து களமிறங்கிய நைட் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
ஐந்தாவதாக மட்டை பிடித்து ஆடிய வில்சன் மட்டும் நிலைத்து நின்று ஆடி 81 ரன்கள் எடுத்தாலும், ரன் அவுட் ஆகி வெளியேற இங்கிலாந்து தோல்வி ஏறக்குறைய உறுதியாகத் தொடங்கியது.
மொத்தம் 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, இங்கிலாந்து 246 ரன்களை எடுத்தது.
2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தன்னுடைய முதலாவது வெற்றியை பெற்றுள்ளது.
பிரிஸ்டலில் நடந்த இன்னொரு போட்டியில், நியுஸிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி, 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன் எடுத்தது. நியுஸிலாந்து அணி, 37.4 ஓவரில், ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்