You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டி20 மகளிர் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா
டி20 மகளிர் ஆசிய கோப்பை இறுதியாட்டத்தில், பாகிஸ்தான் அணியை 17 ரன்களில் வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய மகளிர் அணி வென்றுள்ளது.
ஆசிய அணிகள் பங்கேற்கும் டி-20 ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் இதில் பங்கேற்றன.
இதில் லீக் போட்டி பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றன.
இன்று தொடங்கிய இறுதியாட்டத்தில் , 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீராங்கனைகளான மந்தனா மேக்னா மற்றும் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மூத்த வீராங்கனை மித்தாலி ராஜ் நிதனமாக விளையாடி அரைச் சதம் எடுத்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது.
122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணி தொடக்கத்தில் நிதனமாக ரன் குவித்தாலும், இந்திய பந்துவீச்சாளர்களை சந்திக்க முடியாமல் விக்கெட்டுக்களை தொடர்ந்து பறி கொடுத்தது.
20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்கு 104 ரன்கள் மட்டும் எடுத்த பாகிஸ்தான் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய வீராங்கனை மித்தாலி ராஜ் ஆட்ட நாயகியாகவும், தொடர் நாயகியாகவும் அறிவிக்கப்பட்டார்.
இன்றைய வெற்றியின் மூலம், ஆசிய கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி, ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.