மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 85% இடம்

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 85 சதவீத இடங்கள் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான தகுதித் தேர்வை நடத்தி, அதில் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர்களைச் சேர்க்கவேண்டுமென மத்திய அரசு கூறியது.

மத்திய அரசின் இந்த விதியை எதிர்த்தும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி சேர்க்கையை நடத்தவும் தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் "தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி சேர்க்கை மசோதா" ஒன்றை நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரும் இடம்பெறவில்லை.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் முன்னாள் கல்வியமைச்சரும் தி.மு.க. உறுப்பினருமான தங்கம் தென்னரசு இதுதொடர்பாக கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநில பாடத்திட்டத்தின்படி படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

தற்போது வெளியாகியிருக்கும் இது தொடர்பான அரசாணையில், மருத்துவக் கல்லூரிக்கான ரேங்க் பட்டியல் வெளியாவதற்கு முன்பாக தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தால், 12-ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும், ஒப்புதல் கிடைக்காவிட்டால் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் மருத்துவ கல்லூரி இடங்கள் நிரப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 7ஆம் தேதியன்று நீட் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 6877 மேல்நிலைப் பள்ளிகளில் 4.2 லட்சம் மாணவர்கள் அறிவியல் மற்றும் உயிரியல் பாடங்களத் தேர்வு செய்து படித்துள்ளனர். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் 268 பள்ளிகளில் வெறும் 4675 மாணவர்கள் மட்டுமே அறிவியல் படித்துள்ளனர். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களில் 88,431 பேர் நீட் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் சிபிஎஸ்இயின் கீழ் படித்தவர்கள் 4675 மாணவர்கள்தான். இது தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் சுமார் ஐந்து சதவீதம் மட்டுமே. மேலும் பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகள் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளன.

ஆகவே, எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், தமிழக அரசால் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படும் இடங்களில் 85 சதவீதம் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கும் மீதமுள்ள 15 சதவீதம் மற்ற பிரிவுகளின் கீழ் படித்தவர்களுக்கும் ஒதுக்கப்படும் என தமிழக அரசின் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீடு, நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலும் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடுகளின் அடிப்படையிலும் செயல்படுத்தப்படும். மாநிலத்தில் மொத்தமுள்ள மருத்துவ இடங்களை 15 சதவீதம் அளவுக்கு அகில இந்தியப் பிரிவுக்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள இடங்களில் இந்த முறை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்