"பவளப் பாறைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா முன்னெடுக்கும் நடவடிக்கை போதாது"
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையை ஒட்டி அமைந்துள்ள கிரேட் பேரியர் ரீஃப் பவளப் பாறைகள் இயற்கைக் கட்டமைப்பை அழிவிலிருந்து பாதுகாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் வரைந்துள்ள திட்டம் போதுமான பலன் அளிக்காது என ஆஸ்திரேலியாவின் அறிவியல் கழகம் கூறுகிறது.

பருவநிலை மாற்றம், கரையோரத்தில் நடக்கும் அளவுக்கதிமாக அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக பவளப் பாறைகளுக்கு ஏற்படுகின்ற பெரிய பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் பற்றி அரசாங்கம் கொண்டுவந்துள்ள ரீஃப் 2050 லாங் டர்ம் சஸ்டெய்னபிலிட்டி பிளான் என்ற நெடுங்கால நோக்கிலான பாதுகாப்புத் திட்டம் போதிய அளவுக்கு பேசவில்லை என அக்கழகம் தெரிவிக்கிறது.
பவளப்பாறைகள் சேதமடைந்து வருகின்றன என்பதும் அவற்றின் நிலை மோசமடைந்துவருகிறது என்பதும் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டதாகவும், அப்படி இருக்க அரசாங்கம் தற்போது அறிவித்துள்ள திட்டம் பவளப் பாறைகளின் தரம் மேம்பட வைப்பதற்கு போதுமானது இல்லை என்றும், பவளப்பாறைகள் மேலும் பாதிப்படைவதைத் தடுப்பதற்கும்கூட இத்திட்டம் போதுமானதாக இல்லை என்றும் அறிவியல் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டெர்ரி ஹியூஸ் கூறுகிறார்.
பவளப் பாறையின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போகின்ற உலக பருவ நிலை மாற்றம் சம்பந்தமாக இத்திட்டத்தில் பெரிதாக எதுவுமே பேசப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுனெஸ்கோ எச்சரிக்கை
அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த திட்டம் பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு திங்களன்றோடு முடிவடைந்ததுள்ளது.
இந்த திட்டம் வரும் ஜனவரியில் உலக பாரம்பரிய பாதுகாப்பு மையத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பாதுகாப்பு நிபுணர் குழு இதனை ஆராயவுள்ளது.
ஏற்கனவே உலகின் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியமாகத் திகழும் கிரேட் பேரியர் ரீஃப்பை ஆபத்தினை எதிர்கொள்ளும் பிரதேசங்கள் பட்டியலிலும் சேர்த்துவிடுவோம் என யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.
யுனெஸ்கோ அப்படிச் செய்தால், கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆஸ்திரேலியா மேற்கொள்ள முடியாமல் போய்விடும்.
உலகின் இயற்கை அதிசயம்
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குவீன்ஸ்லாந்து கரையோரப் பகுதியில் சுமார் 2500 கிலோமீட்டர் நீளமுள்ள பவளப் பாறைகள் தொடர் கிரேட் பேரியர் ரீஃப் ஆகும்.
கிட்டத்தட்ட மூவாயிரம் தனித்தனி பவளப்பாறைகள் தொகுதிகளும், தீவுகளும், மணல் மேட்டுத் தொடர்களும் சேர்ந்த ஒரு கட்டமைப்பு இது.
1500க்கும் அதிகமான மீன் இனங்கள், 400 வகையான பவளப் பாறைகள், 4000க்கும் அதிகமான மெல்லுடல் கடல் விலங்கினங்கள் வாழும் இந்தப் பகுதி உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.












