செவ்வாயில் உயிர்கள் உள்ளதா? 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான ஆஸ்திரேலிய பாறைகள் சொல்லும் ரகசியங்கள்

பாறைகள்

பட மூலாதாரம், FRANCES WESTALL / CNRS ORLÉANS

    • எழுதியவர், ஜோனதன் அமோஸ்
    • பதவி, பிபிசி அறிவியல் செய்தியாளர்

ஆஸ்திரேலியாவில் உள்ள பில்பாரா பகுதியில் 3.5 பில்லியன் (350 கோடி ஆண்டுகள்) ஆண்டுகள் பழமையான பாறைகள், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்தனவா என்பதை அறிய விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கிறது.

அந்த பாறைகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஆராய்ச்சியாளர்கள் அந்த பாறைகள் பழமையான நுண்ணுயிரிகளால் தங்கள் அம்சங்களை பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் இதே காலகட்டத்தைச் சேர்ந்த பழமையான பாறைகள் குறித்து நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் விண் ஊர்தி கண்டறியும்போது இந்த ஆஸ்திரேலிய பாறைகளின் அம்சங்களை அது ஒத்து இருக்கிறதா என ஆராய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னதாக உயிர்கள் இருந்தனவா என்பதற்கான ஆதாரத்தை பெர்சவரன்ஸ் ரோவர் தேடி வருகிறது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

நாசாவுடன் பணிபுரியும் லண்டனின் நேச்சுரல் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அந்த பாறைகளின் அம்சங்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர். குவிமாடங்களை போல காட்சியளிக்கும் அந்த பாறைகள் பழமையான நுண்ணியிரிகளால் உருவாக்கப்பட்டதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர், செவ்வாயில் ஜெசெரோ என்ற மிகப்பெரிய பள்ளத்தை ஆராய்ந்து வருகிறது. அடுத்த வருடம் பல இடங்களை ஆராய்ந்து பூமியில் உள்ள பாறைகளில் இருப்பதை போன்ற அம்சங்களை அங்குள்ள பாறைகளில் அது கண்டறியலாம்.

பில்பரா பாறைகள்

பட மூலாதாரம், FRANCES WESTALL / CNRS ORLÉANS

ஸ்ட்ரோமாடொலைட்ஸ் (stromatolites) எனப்படக்கூடிய பூமியின் பழமையான புதை படிமங்களுக்கான எடுத்துக்காட்டுகள் இவை.

இவை பாக்டீரியா மற்றும் வண்டல் படிமங்களால் உருவான சில மில்லி மீட்டர் அளவிலான அடுக்குகள் ஒன்றோடு ஒன்று குவிந்து ஒரு குவிமாடம் போன்ற அமைப்பை உருவாகியுள்ளன.

ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்ட மாதிரிகள் சில பூமியில் ஆதிகாலத்தில் தோன்றிய உயிர்களின் அடையாளங்களாக இருக்கலாம் என புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஒரு ஸ்ட்ரோமாடொலைட்ஸின் சில பகுதிகளை லண்டன் நேச்சுரல் ஹிஸ்ட்ரி அருங்காட்சியகத்தை சேர்ந்த கீரான் ஹிம்மே லூவிஸ் மற்றும அவரது குழுவினர் சோதித்தபோது அவை 3.48 பில்லியன் ஆண்டுகள் பழமையான புதை படிமங்கள் என்பதைக் கண்டறிந்தனர்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

அவை நுண்ணியிரிகளின் படிமங்களைக் கொண்டிருக்கவில்லை. அல்லது கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததைச் சுட்டிக் காட்டும் எந்த ஒரு கரிம கலவையையும் அவை கொண்டிருக்கவில்லை.

ஆனால் பாறையின் உயிரியல் தோற்றத்தை நிரூபிக்க முடியும் என அருங்காட்சியகத்தின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அதிக ரிசல்யூஷன் மற்றும் புகைப்படங்களை ஆராயும் தொழில்நுட்பங்களை கொண்டு இந்த பாறை அமைப்புகளை ஆராய்ந்தனர். சுற்றுச்சூழலில் இயல்பாக உருவாகக் கூடியவற்றுக்கு மாறாக, உயிரிகளின் வாழ்க்கை நடவடிக்கைகளால் மட்டுமே இத்தகைய ஸ்ட்ரோமாடொலைட்கள் உருவாகமுடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் கவனிக்கப்பட்ட ஓர் அம்சம் ஸ்ட்ரோமடோலைட்ஸின் அலை போன்ற மேல் பகுதி. அது ஒளியியை நோக்கி வளரக்கூடிய நுண்ணுயிரிகளால் எழும்பக் கூடியது.

இந்த அலைகள் போன்ற அமைப்புகள் முப்பரிமாணத்திலும் (இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக, முன்னிருந்து பின்னாக) ஒரே விகிதத்தில், ஒரே வடிவத்தில் உயிர்கள் வளராது என்பதால் உருவாகின்றன.

"இம்மாதிரியான கட்டமைப்புகளை நவீன பூமியில் உள்ள சூழலில் நாம் கண்டுள்ளோம். இதேபோன்று அந்த ஆஸ்திரேலிய பாறைகளில் நாம் காணமுடிகிறது," என விஞ்ஞானி ஹிக்மேன் லூயிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கும் பெர்சவரன்ஸ் ரோவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் ஜெசெரோ பள்ளத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தில் அதில் ஓர் ஆழமான ஏரி இருந்தது தெரியவருகிறது.

பள்ளத்தின் விளிம்பில் கார்போனேட் பாறைகள் உள்ளன. அது கரையோரங்களில் கொட்டப்பட்ட வண்டல்களை குறிக்கும் ஜெசெரோவில் ஸ்ட்ரோமடோலைட்ஸை வளர்க்கும் நுண்ணுயிரிகள் இருக்கலாம்.

ஸ்டோரோமலைட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

இங்கு உள்ள ஏரி 3.7 பில்லியன் (370 கோடி ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த வருடத்தின் முடிவில் பெர்சவரன்ஸ் ரோவர் ஜெசெரோ பள்ளத்தாக்கின் விளிம்பில் பயணிக்கும். அப்போது பில்பாரா ஸ்ட்ரோமடோலைட்ஸில் பார்த்த சில அம்சங்கள் அந்த பாறைகளில் உள்ளதா என்பதை ஆராயும்.

செவ்வாயில் உள்ள பெர்சவரன்ஸ் ரோவரின் ஆய்வுகள் சிலவற்றை புரிந்துகொள்ள ஆஸ்திரேலியாவில் கண்டறிந்த சில தகவல்கள் தங்களுக்கு பயனளிக்கும் என நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் எர்த் சயின்ஸ் கலெக்ஷன்ஸ் பிரிவின் தலைவர் பேராசிரியர் கரோலின் ஸ்மித் கூறுகிறார்.

"ரோவரில் உள்ள இமேஜிங் அமைப்பை கொண்டு நாங்கள் அதை கண்டறிய முயற்சிப்போம். ஆனால் அது செவ்வாயில் ஸ்ட்ரோமடோலைட்ஸ் உள்ளதா, இருந்தால் அது எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்தது. நாம் தவறான இடத்தில் அதை தேடிக் கொண்டிருந்தால் நிச்சயம் அதை காண முடியாது," என்று அவர் எச்சரிக்கிறார்

பின்னாளில் ஆராய்வதற்கு ஏதுவான சில மாதிரிகளை சேகரிப்பதுதான் பெர்சவரன்ஸ் ரோவரின் முக்கிய நோக்கமாகும்.

செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்ததா என்பதை நிரூபிப்பது கடினம். ஆனால் ஹிக்மே லூயிஸ் அதற்கான மாதிரியை உருவாக்கியதாக நம்புகின்றார்.

ஸ்ட்ரோமடோலைட்ஸில் உள்ள பல அடுக்குகள் அவை எவ்வாறு உருவாகின, எங்கிருந்து உருவாகின என்பதை நமக்கு காட்டும் என்கிறார் ஹிக்மேன்.

காணொளிக் குறிப்பு, கடிகாரங்களை சேர்த்து கின்னஸ் சாதனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: