மனநல ஆரோக்கியம்: கவலையை எப்படி உங்கள் நன்மைக்காக பயன்படுத்திக் கொள்வது?

பயம்

பட மூலாதாரம், Getty Images/Javier Hirschfeld

    • எழுதியவர், ட்ரேஸி டென்னிஸ் திவாரி
    • பதவி, பிபிசி ஃபியூச்சர்

கவலை மற்றும் நாம் சிறப்பாக வாழவில்லையோ என்ற எண்ணத்தினால் எழும் பயம் உட்பட பல்வேறு காரணங்களால் நவீன வாழ்க்கை மிகவும் சிக்கலானதாக உள்ளது. ஆனால் உளவியலாளர் ட்ரேசி டென்னிஸ்-திவாரி, இந்தக் கவலை நமக்கு நன்மை பயக்கும் என்கிறார்.

என் மகன் பிறவி இதய நோயுடன் பிறந்தபோது, நான் என்னை இழந்துவிட்டேன். அவனுக்கு இதய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. மேலும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை நான் உணர்ந்தேன். முடிவு நன்றாக இருக்காது என்பதைப் புரிந்துகொண்டாலும், சிறந்த கவனிப்பை அவனுக்கு வழங்க முடிந்தால் நேர்மறையான முடிவு கிடைக்கலாம் என்பதையும் நான் அறிந்திருந்தேன்.

அந்த நேரத்தில், நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துவது கடினமாக இருந்தது. ஆனால் கவலை மூலம் என்னை உற்சாகமாக வைத்திருக்கலாம் என்று கற்றுக்கொண்டேன். எதிர்காலம் நிச்சயமற்றதாக இருந்தாலும், என்னுடைய செயல்கள் முடிவை மாற்றலாம் என்பதை அறிந்திருந்ததால், நம்பிக்கையற்ற சூழ்நிலையில் செயல்பட என் கவலை எனக்கு உதவியது. நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க கவலை ஒரு கருவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

எனினும், கவலை பலருக்கு கடினமான விஷயமாகவும், மோசமான உணர்வுக்கு ஒத்த பொருள் கொண்டதாகவும் இருக்கலாம்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

1980களில் என்னுடைய இளமைக்காலத்தில், மன அழுத்தம் என்பது உணர்வு ரீதியான அசௌகரியங்களைக் குறிப்பிடுவதற்கான சுருக்கமாக இருந்தது. உங்கள் திருமண திட்டமிடல் எப்படி இருக்கிறது என்றால், நன்றாக இருக்கிறது, ஆனால் நான் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்பார்கள். உங்கள் கீமோதெரபி சிகிச்சை எப்படி நடக்கிறது என்று கேட்டால் மிகவும் மன அழுத்தமாக உள்ளது, ஆனால் நான் சமாளிக்கிறேன் என்பார்கள்.

இன்று, கவலை யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 2004ஆம் ஆண்டு முதல் கவலை என்ற வார்த்தைக்கான தேடல் 300 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக கூகுள் ட்ரெண்ட்ஸ் காட்டுகிறது. நல்ல காரணங்களோடே கவலை நம் மனதில் உள்ளது. அமெரிக்க மக்கள்தொகையில் 31 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நீடித்த கவலையை எதிர்கொள்கிறார்கள். இது பொதுவான கவலை, பீதி மற்றும் சமூகக் கவலையாக இருக்கலாம்.

மருத்துவ உலகிற்கு அப்பால், நம்முடைய வாழ்க்கையிலும் அந்த வார்த்தை பரிட்சயமாகிவிட்டது. அசௌகரியமாக உணர்கிறேன் என்ற சொல்லுக்கான இடத்தை மன அழுத்தம் என்ற சொல் எடுத்துக்கொண்டது. அச்சம் முதல் மகிழ்ச்சியான எதிர்பார்ப்பு வரை அனைத்தையும் உள்ளடக்கியதாக இந்த வார்த்தை மாறியுள்ளது. இந்த வார்த்தையை எதிர்மறையான அர்த்தத்தில் அடிக்கடி பயன்படுத்துவதால், அச்சுறுத்தல் தரக்கூடியதாகவும், தவறான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டதாகவும் உள்ளது.

சில கவலைக் கோளாறுகள் உள்ளன. அவை மனநல நோயறிதலில் மனச்சோர்வு மற்றும் அடிமையாதலைவிட மிகவும் பொதுவானவை. உலகின் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு கவலைக் கோளாறால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பு விகிதங்கள், குறிப்பாக இளைஞர்களிடையே கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

டஜன் கணக்கான சிகிச்சை முறைகள், 30 வகையான கவலை எதிர்ப்பு மருந்துகள், நூற்றுக்கணக்கான சுய வழிகாட்டும் புத்தகங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தீவிர ஆய்வுகள் என இத்தனை தீர்வுகள் இருந்தும் பிரச்சனையின் அளவை அவற்றால் ஏன் குறைக்க முடியவில்லை?

பயம்

பட மூலாதாரம், Getty Images/Javier Hirschfeld

'ஃப்யூச்சர் டென்ஸ்' எனும் புத்தகத்தில் நான் குறிப்பிட்டுள்ளபடி, இந்த தோல்விக்கான காரணம், கடந்த காலங்களில் கவலை நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மனநல நிபுணர்கள் மக்களை தவறாக வழிநடத்தியதுதான். 21ஆம் நூற்றாண்டில் கவலையைப் புரிந்துகொள்வதற்கும், அதனுடன் வாழ்வதற்கும், அதை உங்கள் நன்மைக்காகப் பயன்படுத்தவும் ஒரு புதிய மற்றும் நம்பிக்கையான அணுகுமுறையை நான் முன்மொழிகிறேன்.

கவலை போன்ற உணர்ச்சிகள் குறித்து நீண்ட காலமாக எதிர்மறையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. பண்டைய ரோமானிய கவிஞர் ஹோரேஸ் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, கோபம் ஒரு குறுகிய பைத்தியம் என்று எழுதியுள்ளார். ஆனால் கடந்த 150 ஆண்டுகளில் டார்வினின் The Expression of Emotion in Man and Animals தொடங்கி, கோபம், பயம், கவலை போன்ற உணர்ச்சிகள் ஆபத்தை விட அதிக நன்மை பயக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டோம். கோபமும் உயிர் வாழ்வதற்கான ஒரு கருவியே. தகவல் அளித்தல் மற்றும் தயார் படுத்தல் மூலம் இது சாத்தியமாகிறது.

கவலை என்பது, ஒரு விஷயம் சரியாக நடக்கலாம் அல்லது தவறாக நடக்கலாம் மற்றும் கொரோனா பரிசோதனை முடிவு எப்படி வரும் என்று காத்திருப்பது போன்ற நிச்சயமற்ற எதிர்காலம் பற்றிய தகவல். உறுதியான மற்றும் சமகால ஆபத்து குறித்த எண்ணங்கள் கவலை அல்ல, அது பயம்.

பயம் நம்மைச் சண்டையிடவோ அல்லது உறைந்து நிற்கவோ தயார்படுத்துகிறது, அதேநேரம், கவலை ஒரு பண்பட்ட நிலையை உருவாக்குகிறது. இது விழிப்புடன் இருக்கவும், எதிர்கால ஆபத்தைத் தவிர்க்கும் வழியில் செயல்படவும் நம்மைத் தயார்படுத்துகிறது. மேலும், நேர்மறையான சாத்தியக்கூறுகளை யதார்த்தமாக்குகிறது.

மன அழுத்தம்

பட மூலாதாரம், Getty Images/Javier Hirschfeld

நாம் கவலையாக இருக்கும்போது, நம்முடைய மூளை அதிக கவனம் மற்றும் செயல்திறனுடன் செயல்படுகிறது. நாம் எதைப் பற்றி கவலைப்படுகிறோமோ, அதற்காக வேலை செய்யவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும், கூடுதல் உத்வேகத்துடன் இருக்கவும் அது நம்மைத் தூண்டுகிறது. எனவேதான் பரிணாமக் கோட்பாட்டின் கண்ணோட்டத்தில், கவலை அழிவுகரமானது அல்ல. அது உயிர்வாழ்வதற்கானது என்ற தர்க்கம் உள்ளடங்கியுள்ளது.

ஆனால், நாம் கவலையை நண்பனாக பார்ப்பதற்குப் பதிலாக எதிரியாகப் பார்க்கிறோம்.

கவலைக் கோளாறுகள் நம்மை முடக்கிவிடும் என்றாலும்கூட, தவறான உணர்வைக் குறிக்கும் கவலை என்ற சொல்லின் பரவலான பயன்பாடு சிக்கலானது. ஏனெனில் அதன் மூலம், கவலையை அனுபவிப்பது ஆபத்தானது மற்றும் அழிவுகரமானது, அதற்கான தீர்வு அதைத் தடுப்பது அல்லது ஒழிப்பது என்ற இரு தவறான கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

நம்முடைய தவறுகளை சரிசெய்வதற்கான விஷயமாக தினசரி கவலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தீவிர கவலை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான நமது முயற்சிகள் நமது அன்றாட வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும்போது மட்டுமே அதை கவலைக் கோளாறாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவை மட்டுமே மனநல நோய் தன்மையாக ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு மாறான கவலை உணர்வு ஆரோக்கியமானதாகவும் இயல்பானதாகவும் கருதப்பட வேண்டும். மேலும், அவை நமக்கு நன்மையும் பயக்கும்.

மற்ற நோய்களான தொற்று நோய்கள் முதல் புற்றுநோய்கள் வரை, கவலையை கட்டுப்படுத்தாமல் நாம் மன ஆரோக்கித்துடன் இருக்க முடியாது. வெறுமனே புற்றுநோய் செல் நம் உடலில் இருப்பதால் மட்டுமே, நமக்கு உடல்நிலை சரியில்லை என்று அர்த்தமாகாது.

தொற்று நோய் அல்லது புற்றுநோய் போலல்லாமல், கவலையைத் தவிர்ப்பது மற்றும் அடக்குவது நிச்சயமாக அதை அதிகரிக்கச் செய்யும். அதே நேரத்தில் அதை எதிர்கொள்வதற்கான ஆக்கப்பூர்வ வழியைக் கண்டறிவது மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்வதில் இருந்தும் நம்மைத் தடுத்துவிடும். இது கவலையின் தீய சுழற்சி.

மன அழுத்தம்

பட மூலாதாரம், Getty Images/Javier Hirschfeld

கவலை ஏற்படுத்தும் ஆபத்து அதோடு நின்றுவிடாது. அதைக் கட்டுப்படுத்த முடியும் மற்றும் கையாள முடியும் என்ற கோணத்தில் பார்ப்பதிலிருந்தே அது நம்மைத் தடுத்துவிடும்.

கவலை என்பது சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நிச்சயமற்ற சூழ்நிலையில் நிலைத்திருக்கவும், புதுமைப்படுத்தவும், சமூக ரீதியாக இணைக்கவும், நம்பிக்கையுடன் இருக்கவும் உதவும் வகையில் பரிணமித்தது.

கவலை மிகவும் சிறந்ததாக இருந்தால், அது ஏன் தவறாக உணரப்படுகிறது?

கவலை அதன் வேலையைச் செய்ய மோசமாக உணரப்பட வேண்டும். விரும்பத்தகாத ஒன்று மட்டுமே ஒரு விஷயத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தவும், எதிர்கால ஆபத்தைத் தவிர்க்க கடினமாக உழைக்கவும் நம்மைத் தூண்டும்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

ஆனால், நம்மில் பலர் இந்தப் பயனுள்ள உணர்ச்சியைத் தவிர்க்கவும், புறக்கணிக்கவும் கற்றுக்கொண்டோம். தீ பிடித்தால் எச்சரிக்கை தரும் மணியோடு கவலையை ஒப்பிட்டுப்பாருங்கள். வீடு தீ பிடித்தவுடன் ஒலிக்கும் அந்த மணி, உடனடியாக தீயை அணைக்க முயற்சிகள் எடுக்க நம்மைத் தூண்டுகிறது. வீட்டை விட்டு வெளியே ஓடுவது அல்லது தீயணைப்புத் துறையை அழைப்பதற்குப் பதிலாக அந்த எச்சரிக்கை மணியை நாம் தவிர்த்தால் என்ன நடந்திருக்கும்?

தொடர் மன அழுத்தம் மற்றும் துன்பம் ஏற்படுத்தும் தாக்கத்தை நம்மால் புறக்கணிக்க முடியாது. வாழ்வின் சில கடினமான சூழ்நிலைகளில் நம்மில் எவரும் தீவிர மற்றும் மிகுந்த கவலையை உணரலாம். ஆனால் எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், அந்தக் கவலை வெளிப்படுத்துவதில் உள்ளார்ந்த ஞானம் இருப்பதாக நம்புவது மற்றும் அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும் என்று நம்புவதே சரியான வழியில் கவலைப்படக் கற்றுக்கொள்வதற்கான முதற்படியாகும்.

இந்த மனநிலை மாற்றத்தை உருவாக்குவது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வில், சமூகத்தைக் கண்டு அஞ்சும் சிலரை எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல் சில நடுவர்கள் முன்பு மேடையில் பேச வைத்தனர். இந்த சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று சிந்தித்துக்கொள்ளும்படியும் அவர்களுக்கு கூறப்பட்டது. அந்த அழுத்தமான சூழ்நிலையில் சிறப்பாகச் செயல்பட்ட அவர்கள், அதிக நம்பிக்கையுடனும், குறைவான கவலையுடனும் இருந்தனர். மேலும், அவர்கள் ஈடுபாட்டோடு இருந்தபோது அவர்களின் இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் நிலையாக இருந்தது.

ஒரு விஷயம் குறித்து கவலை கொள்வது, அதைச் சரிசெய்வதற்கான திறவுகோலாகும். இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் போது குறைந்த நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய இதய மாற்று நோயாளிகளை கருத்தில் கொள்ளுங்கள். அவர்கள் கவலையாக இருக்கும்போது மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சரியான வழியில் கவலை கொள்ள கற்றுக்கொள்வது என்பது அந்த உணர்வை முறைப்படுத்தி அதிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியைக் கண்டறிதல் மற்றும் பயனற்ற கவலையிலிருந்து விடுபடுதலாகும். கேட்பது, பயன்படுத்திக்கொள்வது, அதிலிருந்து விடுபடுவது ஆகியவற்றை கவலையின் மூன்று நல்ல சுழற்சிகளாக நினைத்துக்கொள்ளுங்கள்.

கேட்டல்

நாம் இப்போது இருக்கும் இடத்திற்கும் நாம் இருக்க விரும்பும் இடத்திற்கும் இடையேயான இடைவெளியை மூடுவதால், நம் கவனத்தை அதிகரிக்கவும், அதை நோக்கி நம்மை வழிநடத்தவும் கவலை உதவுகிறது. எனவேதான், கவலையில் நம்பிக்கை உள்ளது. அதில், எதிர்கால அச்சுறுத்தல்களை நாம் பார்க்கலாம். மேலும் நல்ல முடிவுகளை உருவாக்க நம்மால் உழைக்க முடியும் என்றும் நம்பலாம்.

ஆனால் இதை அடைவதற்கு, அந்தக் கவலை கஷ்டமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அமர்ந்து, கவனம் செலுத்தி, அதைக் கவனிப்போம். கவலையைக் கவனிக்கும் போது, ஆர்வமே நமது சிறந்த நண்பன்.

பயன்படுத்திக்கொள்ளல்

கவலையில் உள்ள பயனுள்ள தகவல்களைக் கண்டறிவது இலக்குகளை நோக்கிச் செயல்படுவதற்கும், நம்முடைய ஆற்றல்களை வழிநடத்தவும் நம்மைத் தயார்படுத்துகிறது. இலக்கைப் பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்குவது மனநிலையை உயர்த்துகிறது. மேலும், நம்முடைய ஈடுபாடு மற்றும் கற்றலை மேம்படுத்துகிறது. இந்த நன்மைகள் சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட நீடிக்கலாம்.

கவலையை நம்முடைய நோக்கத்தைத் தொடர்வதற்கும் முன்னுரிமை அளிப்பதற்கும் பயன்படுத்தும்போது, அது தைரியத்தைக் கொடுக்கும். கவலை நம்மை உத்வேகப்படுத்தி, நம் பலத்தை கட்டவிழ்த்துவிடுகிறது.

விடுபடுதல்

கவலை ஒவ்வொரு முறையும் பயனுள்ளதாகவோ அல்லது நேரடியானதாகவோ இருக்காது. சில நேரங்களில், அது செய்தியை வெளிப்படுத்துவது மெதுவாக இருக்கும். மற்ற நேரங்களில், அது அர்த்தமற்றதாகவும் இருக்கும். எதிர்காலத்திற்குள் நம்மை சுழலைச் செய்யும் கவலை, வருத்தப்படவும், அதிகமாக உணரவும் வைக்கிறது. அதிலிருந்து விடுபடுவது எப்படி? பிடித்த கவிதையைப் படித்தல், இசையில் ஆறுதல் பெறுதல், உடற்பயிற்சி செய்தல், நண்பரைத் தொடர்பு கொள்ளல் என நம்மை மெதுவாக்கும் மற்றும் நிகழ்காலத்தில் மூழ்கடிக்கும் செயல்களில் கவனம் செலுத்துங்கள்.

சரியான வகையில் கவலை கொள்தல்

தொற்றுநோய், அரசியல் வேறுபாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் இந்த சகாப்தத்தில், நம்மில் பலர் எதிர்காலம் குறித்த கவலையை அதிகமாக உணர்கிறோம். அதைச் சமாளிப்பதற்காக உணர்ச்சியைப் பற்றி சிந்திக்க தற்போது கற்றுக்கொண்டுள்ளோம்.

ஆனால் உண்மையில் நாம் அதை பின்னோக்கிப் பெற்றுள்ளோம். பிரச்சனை கவலை அல்ல. கவலை என்பது நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்கிறோம், உடனடியாக சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று நமக்கு கூறும் தூதுவர். இது நம் வாழ்க்கையை மாற்ற வேண்டிய அல்லது நமக்கு ஆதரவு தேவைப்படும் வழிகளை சுட்டிக்காட்டுகிறது. கவலையைப் பற்றிய நமது நம்பிக்கைகளே இங்கு பிரச்னைக்குரியவை. அவை கவலையை நம்மால் நிர்வகிக்க முடியும் என்று நம்புவதிலிருந்தும், சமாளிக்கும் உத்திகள் மற்றும் அதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கற்றுக் கொள்வதிலிருந்தும் நம்மைத் தடுக்கின்றன.

கவலைக் கோளாறால் கண்டறியப்பட்ட ஒருவரின் முக்கிய பிரச்னை அவர்கள் தீவிரமான 'கவலையை அனுபவிப்பது' அல்ல. அந்த உணர்வுகளை நிராகரிக்க அவர்கள் வசம் வைத்திருக்கும் கருவிகளே. இது சுய கவனிப்பு, வேலை செய்தல், மற்றவர்களுடன் தொடர்புகொள்வது மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ்வது போன்றவற்றிற்கு இடையூறாக அமைகிறது. கவலை தொடர்பான நமது அணுகுமுறையை மாற்றுவது, கவலையிலிருந்து விடுபட நமக்கு உதவலாம்.

"சரியான வழியில் கவலைப்படக் கற்றுக்கொள்பவர் இறுதியானதைக் கற்றுக்கொண்டார்" என்று டேனிஷ் தத்துவஞானி சோரன் கீர்கே கார்ட் 180 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ளார். நாம் அனைவரும் கவலையுடன் பிறக்கிறோம். மனிதனாக இருப்பதன் வேலை என்னவென்றால், கவலை கடினமாக இருந்தாலும், சில சமயங்களில் பயமுறுத்துவதாக இருந்தாலும், அதை ஒரு நண்பனாகவும், புத்திசாலித்தனத்தின் ஆதாரமாகவும் மாற்ற கற்றுக்கொள்ளலாம். கவலையிலிருந்து விடுபடும்போது நம்மை நாமே காப்பாற்றிக்கொள்கிறோம்.

காணொளிக் குறிப்பு, தைராய்டு குறைபாடு: மாதவிடாய், இதயத்துடிப்பு, உடல் எடை, மகப்பேறு ஆகியவற்றை எப்படி பாதிக்கும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: