வடகிழக்கு பருவமழை: குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல்நல கோளாறுகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

காய்ச்சல்

பட மூலாதாரம், triloks / Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் காய்ச்சல், சளி, இருமல் என உடல் நல பிரச்னைகளும் ஏற்படும். சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் பரவலாக ஏற்பட்டது. இந்நிலையில், வட கிழக்கு பருவ மழையையொட்டி, நாம் நம்மை எப்படி காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால உடல் நல பிரச்னைகளிலிருந்து தற்காத்துக்கொள்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

பொதுநல மருத்துவர் ஆதித்யா இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசுகையில், "மிகப்பெரும் அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை ஆங்காங்கே ஏற்பட்டு வருகின்றது. ஆனால், கொரோனா தடுப்பூசியை மக்கள் பரவலாக எடுத்துக்கொண்டதால், குறிப்பிட்ட தொற்று நமக்கு வந்துபோயிருந்தால் அதனுடன் இணைந்த இணை தொற்றுக்கும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். அதனால், டெங்கு உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை இல்லை" என்றார்.

எனினும் பருவமழை காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.

  • தினமும் காலை, மாலை என இருவேளையும் குளிக்க வேண்டும்.
  • ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டு உணவுகளையே உண்ண வேண்டும். உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உணவகங்கள் பயன்படுத்தும் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றால் உணவுப்பொருட்கள் எளிதில் கெட்டுவிடவோ அல்லது ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கோ வாய்ப்பு அதிகம்.
  • வீட்டில் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடும்போது அதிக காரம், எண்ணெய் சேர்க்காமல் இருப்பது நல்லது.
  • போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துதல் சிறந்தது. குளிர்காலத்தில் தாகம் அதிகமாக எடுக்காது. இருந்தாலும், தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிறுநீர் தொற்று ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு
  • உணவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • டெங்குவை ஏற்படுத்தும் கொசுப்புழுக்கள் நன்னீரில் உருவாகும் என்பதால், வீடுகளில் எங்கும் நன்னீரை தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • வாரத்திற்கு ஒருமுறை நிலவேம்பு குடிநீர் குடிப்பது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • மருத்துவமனையில் பணிபுரிவோர், மருத்துவமனைக் கழிவுகளை கையாள்வோர், துப்புரவுப் பணியாளர் உள்ளிட்ட தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளவர்களுக்கு இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும். யாருக்கெல்லாம் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறதோ அவர்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழை

பட மூலாதாரம், Rupendra Singh Rawat / Getty Images

  • மழைக்காலத்தில் காய்ச்சல் வருவது மிகவும் இயல்பு. காய்ச்சலின் முதல் நாளில் முழுமையாக ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யக்கூடாது. காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. பருவமழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் 2 நாட்கள் நீடிக்கும். ஒருவாரம் உடல் சோர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவர்களை சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
  • நீர்ச்சத்து அதிகமான உணவுப்பொருட்கள், பாரசிட்டமால் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும். ஆனால், காய்ச்சலுடன் சளி, இருமல், வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் அருகாமை மருத்துவர்களை சந்திக்க வேண்டும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

காய்ச்சல் இருக்கும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டார், நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர் அஷ்ரஃப் அலி.

  • நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும், கஞ்சி உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பழங்கள், பழச்சாறு அருந்தலாம். மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • கோவிட் போன்றே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொண்டு முகக்கவசம் அணிந்து சுய ஒழுக்கத்தைக் கடைபிடித்தல் நலம்.
  • காய்ச்சலுடன் அதிகப்படியான தலைவலி, உடல் வலி ஏற்படும்போது அருகாமை மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
காய்ச்சல்

பட மூலாதாரம், triloks / Getty Images

  • டெங்கு காய்ச்சல் என்றால், முன் நெற்றி வலி, முழங்கால் வலி, வயிற்று வலி இருக்கும். ரத்தம் உறையும் தன்மை குறைவதால், மலத்தின் நிறம் கருப்பு நிறமாகும். இந்த அறிகுறிகளை உதாசீனப்படுத்தக் கூடாது.
  • தாமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. சில மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செய்ய வேண்டியவை

குழந்தைகளை எப்படி காப்பது என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார், சென்னையை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் லக்ஷ்மி பிரசாந்த்.

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

  • குழந்தைகளை தினந்தோறும் வெந்நீரில் குளிக்க வைத்தல் நல்லது.
  • சானிட்டைசரை பயன்படுத்தி எப்படி கைகளை சுத்தமாக கழுவுவது என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • முழுக்கை கொண்ட உடைகளை அணிந்து, குழந்தைகளை எப்போதும் கதகதப்புடன் வைத்திருக்க வேண்டும்.
  • பருவமழைக்கால மருந்துகள் அடங்கிய 'கிட்' வைத்திருக்க வேண்டும். அடிப்படையான இருமல் மற்றும் காய்ச்சல் மருந்துகளை அதில் வைத்துக்கொள்ளலாம்.
சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

இதுதவிர, குழந்தைகள் நலனுக்கென மருத்துவர் ஆதித்யா சொல்லும் அறிவுரைகள்:

  • பருவமழை காலங்களில் மற்ற ஃபுளூ காய்ச்சல்கள் ஏற்படாமல் தடுக்க குழந்தைகளுக்கென உள்ள தடுப்பூசிகளை காலம் தாழ்த்தாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • விடுமுறை, பண்டிகை காலமாக இருப்பதால், இனிப்புகளை எடுத்துக்கொள்ளும்போது, குழந்தைகளுக்கு வாயில் பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதனால், குழந்தைகளுக்கு இனிப்புகளை அதிகம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து விட வேண்டும், அவர்கள் எவ்வளவு தண்ணீர் குடித்திருக்கின்றனர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
காணொளிக் குறிப்பு, சென்னையில் பரவும் காய்ச்சல்: பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: