உடல்நலத்தை பாதிக்கும் முதுகெலும்பு சார்ந்த நோய்கள் பெண்களை அதிகம் பாதிக்கின்றனவா?

முதுகெலும்பு நாள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எம்.ஆர்.ஷோபனா
    • பதவி, பிபிசி தமிழ்

இன்று உலக முதுகெலும்பு நாள். நம் உடல் இயக்கத்திற்கு பக்கபலமான ஒன்று, முதுகெலும்பு. நம்மில் 10 பேரில் 9 பேருக்கு முதுகு வலி ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

ஆனால், உடல் ஆரோக்கியம் தொடர்பாக இதயம், மூளை போன்ற மற்ற உறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் முதுகெலும்புக்கு கொடுப்பதில்லை. நம் கவனக் குறைவு தவிர, இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. முதுகெலும்பின் முக்கியத்துவம் குறித்த அறிவும், அதற்கான மருத்துவ நிபுணத்துவமும் 1990களில்தான் வளர ஆரம்பித்தது என்கிறார் சென்னையைச் சேர்ந்த முதுகு தண்டு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் விக்னேஷ் புஷ்பராஜ்.

இன்றைய காலகட்டத்தில், நாம் முதுகெலும்பு ஆரோக்கியத்திற்கு ஏன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை அவர் விளக்கிறார்.

முதுகெலும்பின் முக்கியத்துவம் என்ன?

நமது உடல் ஒரு கட்டடம் என்றால், அதை தாங்கிப் பிடிக்கும் ஒரு கட்டமைப்புதான் முதுகெலும்பு. இந்த முதுகெலும்பை கொண்டுதான் மற்ற உறுப்புகள் சரியாக செயல்படுகின்றன. முதுகெலும்பு வளைந்து இருந்தாலோ, அல்லது கூன் விழுந்திருந்தாலோ மற்ற உறுப்புகள் சரியாக செயல்படாது. நம் மொத்த உடல் செயல்பாட்டின் ஆணிவேராக இருப்பது முதுகெலும்பு.

இப்போது பொதுவாக நாம் நீண்ட நேரம் உட்கார்ந்து பணி செய்கிறோம். இது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது?

மருத்துவ ரீதியாக கூறினால், மனிதர்கள் இயல்பு என்பது நிற்பதும், படுப்பதுதான். மனிதர்கள் உருவாக்கிய ஓர் இயல்புதான் உட்கார்த்தல். நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது என்பது மனிதர்களின் இயல்பில் இல்லை. அப்போது நாம் இயற்கைக்கு எதிரான ஒரு விஷயத்தை செய்கிறோம்.

நாம் ஏதோ ஒரு வேலை செய்வது போல்தான் உட்கார்த்தல் என்பதும். உதாரணமாக, திடீரென ஒருவர் இருபது குடங்கள் தண்ணீர் தூக்க வேண்டும். அப்போது அவருக்கு என்ன ஆகும்? தசை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். அதேப் போன்று ஒரு வேலைதான், உட்கார்வதும். இருபது குடங்கள் தண்ணீர் தூக்கினால், நம் உடல் அதை எப்படி எதிர்க்குமோ, அதே போன்ற விளைவுகள் உட்காரும்போதும் ஏற்படுகின்றன.

நாம் உட்காரும்போது தசைகளுக்கு ஓய்வு கிடைப்பதில்லை. ஓய்வு கிடைக்காத தசைகள், அதன் பாரத்தை முதுகெலும்பில் இறக்கி வைக்கும். நாம் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் இதுதான் நடக்கும்.

டாக்டர் விக்னேஷ் புஷ்பராஜ், முதுகு தண்டு அறுவை சிகிச்சை நிபுணர்

பட மூலாதாரம், DR VIGNESH PUSHPARAJ

படக்குறிப்பு, டாக்டர் விக்னேஷ் புஷ்பராஜ், முதுகு தண்டு அறுவை சிகிச்சை நிபுணர்

மற்றொரு விஷயம், நாம் உடலை நீரற்ற நிலையில் வைத்திருப்பது. ஹைட்ரேட் என்பது என்ன? நாம் குடிக்கும் தண்ணீர் எல்லா உறுப்புகளுக்கும் சீராக சென்று அடைவது. தசைகளுக்கு போதிய நீர் கிடைக்காவிட்டால், அதுவும் இறுதியாக முதுகெலும்பை பாதிக்கிறது. இவை இரண்டும் அடிப்படையாக நாம் செய்யும் தவறுகள்.

தசை, முதுகெலும்பு பாதிப்புகளை தவிர்க்க நாம் செய்ய வேண்டியவை இரண்டு விஷயங்கள்:

1. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், குறைந்தபட்சம் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு, நீங்கள் எழுந்து நடந்து தசைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும்.

2. வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் ஏதேனும் ஓர் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இது நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதற்கு சமன் செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

முதுகெலும்பு நாள்

பட மூலாதாரம், Getty Images

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

முதுகு வலிக்கும், கழுது வலிக்கும் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. மருத்துவரைகளை அணுகினாலும், பெரும்பாலும் உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கை முறை மாற்றங்களையே பரிந்துரைப்பார்கள்.

ஆனால், உங்கள் கழுத்து முதல் கை வரை வலி ஏற்படுவது அல்லது முதுகு முதல் கால் வரை வலி ஏற்படுவது, உடல் மரத்துபோவது, அடிக்கடி இயற்கை உபாதைகள் வருவது, நடக்கும்போது சீரற்ற தன்மை இருப்பதாக உணர்வு போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். இவையெல்லாம் முதுகெலும்புடன் தொடர்புடையவையாக இருக்கலாம்.

முதுகெலும்பு நாள்

பட மூலாதாரம், Getty Images

மன அழுத்திற்கும் முதுகு வலிக்கு தொடர்பு உண்டா?

நிச்சயமாக உண்டு. மன அழுத்தம், கவலை போன்றவற்றை கையாள்வது நமது மூளை. இந்த விஷயங்களை மூளை கையாளும் போது, அது உடலில் எதிரொலிக்கும். அது முதுகு வலி, கழுத்து வலி, பொடுகு, முடி உதிர்தல் போன்றவையாக மாறும்.

முதுகெலும்பு தொடர்பான நோய்கள் அதிகம் யாரைப் பாதிக்கும்?

இவை ஆண்களை விட பெண்களைதான் அதிகம் பாதிக்கின்றன. முதுகெலும்பு மருத்துவத்தில் மிகப்பெரிய அறுவை சிகிச்சை என்பது ஸ்கோலியோசிஸ் (scoliosis). அதாவது, கூன் விழுந்த முதுகெலும்பை சரி செய்யும் அறுவை சிகிச்சை. இந்த அறுவை சிகிச்சை முதல், கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் எலும்பு முறிவுக்கு செய்யப்படுகிற சிறிய அறுவை சிகிச்சை வரை பெண்களுக்குதான் அதிகம் செய்யப்படுகின்றன. பொதுவாக, அவர்கள் தங்கள் உடல்நலம் மீது அக்கறை கொள்வது ஆண்களை விட குறைவு.

அதுமட்டுமில்லாமல், மாதவிடாய் நிற்பதால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் ஒரு காரணம்.

முதுகெலும்பு நாள்

பட மூலாதாரம், Getty Images

அலைபேசி பயன்பாட்டிற்கும் முதுகெலும்புக்கும் உள்ள தொடர்பு என்ன?

நாம் எப்படி உட்கார வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி ஒரு பொருளைத் தூக்க வேண்டும் என அனைத்துக்கும் சரியான உடல் நிலை அமைப்பு, அல்லது பொசிஷன், எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்குவது எர்கனாமிக்ஸ் (ergonomics) ஆகும். இதற்கு ஏற்ப, நாம் நம் உடலை பழக்க வேண்டும்.

அலைபேசி பயன்பாட்டை பொருத்தவரையில், நாம் எவ்வளவு குனித்து அலை பேசியை பயன்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நமது கழுத்து நம் உடலின் எடையை தாங்கும். உதாரணமாக, நாம் 40 டிகிரி தலையை குனிந்து அலைபேசி பயன்படுத்தினால், நம் கழுத்தின் மீது 40 பவுண்ட் சுமை ஏறும். அதனால், தலையின் கோணத்தை 0 டிகிரியாக வைத்து, அதாவது தலையை நிமிர்த்தி அலைபேசியை பயன்படுவது சிறந்த முறை.

காணொளிக் குறிப்பு, சிசேரியன் மூலம் குழந்தை பெறுவது அதிகரிப்பது ஏன்? காரணங்களும், தவிர்க்கவேண்டியவையும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: