ஆன்டிபயாட்டிக்-எதிர்ப்பு சூப்பர்பக்: இந்தியா புதுவித தொற்றுடன் போராடுகிறதா?

பட மூலாதாரம், MANSI THAPLIYAL
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
மேற்கு இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள லாப நோக்கற்ற, ஆயிரம் படுக்கைகள் கொண்ட கஸ்தூர்பா மருத்துவமனையில் மருத்துவர்கள், ஆன்டிபயாட்டிக்-எதிர்ப்பு "சூப்பர்பக் தொற்றுகளுடன்" போராடி வருகின்றனர்.
இந்த சூப்பர்பக், பாக்டீரியா ஒரு குறிப்பிட்ட கால அளவில் மாற்றம் அடையும்போது உருவாகும் தொற்று ஆகும். இந்த சூப்பர் பக் ஏற்படுத்தும் தொற்றுகளிலிருந்து குணப்படுத்தவும், தொற்றை அழிக்கவும் உபயோகிக்கபப்டும் மருந்துகளுக்கு எதிராக செயலாற்றுபவை ஆகும்.
மருத்துவ ஆய்விதழான தி லான்செட், இத்தகைய தொற்று கடந்த 2019ம் ஆண்டில் 10 லட்சத்து 27 ஆயிரம் உயிரிழப்புகளை நேரடியாக ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கிறது. இத்தகைய கடும் தொற்றுகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கேடயங்களுள் முதல் வரிசையில் உள்ள ஆன்டிபயாட்டிக்குகள் இத்தகைய தொற்று பாதிப்புகளில் பெரும்பாலும் செயல்படுவதில்லை.


மருத்துவர்களால் "ஆன்டிமைக்ரோபியல் எதிர்ப்பு" தொற்று என்று அழைக்கப்படும் இதனால் மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் புதிதாக பிறந்த 60,000 குழந்தைகளின் இறப்புக்கு ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு தொற்று காரணமாக உள்ளது. அரசாங்கத்தின் இதுகுறித்த திடுக்கிட வைக்கும் சமீபத்திய அறிக்கை, எந்தளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.
இத்தகைய ஐந்து முக்கியமான பாக்டீரியா நோய்க்கிருமிகளை எதிர்த்து சிறப்பான முறையில் எந்த ஆன்டிபயாட்டிக் செயலாற்றும் என்பது குறித்த சோதனைகள் கஸ்தூர்பா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், முதன்மையான மருந்துகள் எதுவும் அரிதாகவே அவற்றை எதிர்த்து செயலாற்றுவது கண்டறியப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இ.கோலி (எஸ்செரிசியா கோலி), இவை மனிதர்கள் மற்றும் விலங்குகளுள் கெட்டுப்போன உணவுகளை உட்கொள்ளும்போது குடலில் காணப்படும் பாக்டீரியாவாகும்; கிளெப்ஸியெல்லா நிமோனியே (Klebsiella pneumoniae). இவை நுரையீரலில் தொற்றை உண்டாக்கி நிமோனியா ஏற்படுவதற்கும், ரத்தம், தோலில் உள்ள வெட்டுக்காயங்களில் தொற்று ஏற்படுவதற்கும் மேலும் மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது; அடுத்ததாக இறப்பை ஏற்படுத்தும் ஸ்டாஃபிலோகோக்கஸ் ஆரியஸ், இது காற்றின் வாயிலாக உணவில் பரவும் பாக்டீரியா - உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்ட பாக்டீரியாக்களுள் சிலவாகும்.
இந்த நோய்க்கிருமிகள் ஏற்படுத்தும் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதில் முக்கிய ஆன்டிபயாட்டிக்குகள் கூட, 15 சதவீதத்திற்கும் குறைவாகவே செயலாற்றுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். சிசியூ பிரிவுகளில் உயிர்காக்கும் கருவிகளுடன் உள்ள நோயாளிகளின் நுரையீரலை தாக்கவல்ல, பல மருந்துகளை எதிர்க்கும் இயல்புகொண்ட 'அசினெபாக்டெர் பௌமன்னி' எனும் நோய்க்கிருமி அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது.
"எங்களுடைய நோயாளிகளுள் கிட்டத்தட்ட அனைவராலும் செலவுகரமான ஆன்டிபயாட்டிக்குகளை பெற முடியாது. ஐசியூவில் வென்டிலேட்டரில் உள்ளவர்களுக்கு ஏற்படும் நிமோனியாவால் அவர்கள் இறக்கும் ஆபத்து ஏற்படுகிறது," என அம்மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் எஸ்.பி. காலந்த்ரி கூறுகிறார்.
ஐசிஎம்ஆர் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் சமீபத்திய அறிக்கையின்படி, கார்பபெனெம் எனப்படும், பல நோய்க்கிருமிகளை அழிக்கவல்ல சக்திவாய்ந்த ஆன்டிபயாட்டிக்குக்கு எதிராக செயல்படுவது ஓராண்டில் மட்டும் 10% உயர்ந்துள்ளது. இந்த அறிக்கை, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 30 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிடம் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு குறித்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்தது.
"இந்த மருந்து செப்சிஸ் (உயிருக்கு ஆபத்தான நிலை) மற்றும் ஐசியூவில் மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முதல் வரிசையில் உள்ள மருந்து என்பதால், இது எச்சரிக்கைக்குரிய ஒன்றாகும்," என, ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளரும் அந்த ஆய்வை வழிநடத்தியவருமான மருத்துவர் காமினி வாலியா தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, ஒரு நோய்க்கிருமியால் உருவாகும் நிமோனியாவுக்கு 2021ம் ஆண்டில் 43% மட்டுமே முதல் வரிசை ஆன்டிபயாட்டிக்குகளால் சிகிச்சையளிக்க முடிந்தது, இந்த விகிதம் 2021ம் ஆண்டில் 65 சதவீதமாக இருந்தது என்பது மேலும் கவலைக்குரியதாக உள்ளது.
நிலைமை மோசமாக உள்ளதாக கூறும் கொல்கத்தாவின் ஏ.எம்.ஆர்.ஐ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நிபுணராக உள்ள சஸ்வதி சின்ஹா, ஐசியூவில் உள்ள "10-ல் ஆறு நோயாளிகள்" ஆன்டிபயாட்டிக் தொற்று பாதிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார். "நிலைமை உண்மையில் எச்சரிக்கும் வகையில் உள்ளது. இந்த நோயாளிகளுள் சிலருக்கு சிகிச்சை அளிக்க நம்மிடம் அதிகமான வாய்ப்புகள் இல்லை என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம்" என்கிறார் அவர்.


கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் நிமோனியா, சிறுநீர் பாதை நோய்த்தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுடன் வரும் புறநோயாளிகளிடத்திலும் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு பரவலாக உள்ளது என கஸ்தூர்பா மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது சோதனை மிகுந்ததாக உள்ளது. "நிலைமை மிகவும் நம்பிக்கையற்று உள்ளது. அதிகமான ஆன்டிபயாட்டிக்குகளை வாங்க ஆர்டர் செய்வது பலன்களை விட அதிக ஆபத்துகளையே உருவாக்கும்," என்கிறார் மருத்துவர் காலந்த்ரி.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் வரைமுறையின்றி ஆன்டிபயாட்டிக்குகளை பரிந்துரைப்பதாக பொது சுகாதார நிபுணர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், MANSI THAPLIYAL
உதாரணமாக, காய்ச்சல் அல்லது சாதாரண சளி போன்றவற்றை ஆன்டிபயாட்டிக்குகள் சரி செய்யாது. மலேரியா போன்ற வைரஸ் தொற்று, ஒற்றை செல் பாரசைட்டால் ஏற்படும் மலேரியாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கும் ஆன்டிபயாட்டிக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன. வயிற்றுப்போக்கு மற்றும் மேல் சுவாசக்குழாய் தொற்று நோய்கள் போன்று ஆன்டிபயாட்டிக்குகள் குறைவாகவே செயலாற்றும் பிரச்னைகளுக்கும் அவை தொடர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன.
கொரோனா காலகட்டத்தில் சிகிச்சை முறையில் குழப்பம் ஏற்பட்டபோது நோயாளிகளுக்கு ஆன்டிபயாட்டிக்குகள் அளிக்கப்பட்டதால், எதிரான விளைவுகளே ஏற்பட்டன. கடந்த ஆண்டு ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வில், இந்திய மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்ட 17,534 நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எனினும், மிகவும் தீவிரமான, கடினமான பாக்டீரியா தொற்றுகளை சமாளிப்பதற்கு ஒதுக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள், இந்திய மருத்துவமனைகளில் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் 75% ஆகும் என ஆய்வுகள் வாயிலாக தெரியவந்துள்ளது.
உண்மையில் மருத்துவர்களை முழுவதும் குறை சொல்ல முடியாது. நெரிசலான பொது மருத்துவமனைகளில், மருத்துவர்கள் நோயாளிகளை கவனித்து, அவர்களின் பிரச்னைகளை கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் நேரப் போதாமையுடன் இருப்பதாக, மருத்துவர் காலந்த்ரி கூறுகிறார்.
கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஆன்டிபயாட்டிக்குகள் குறித்த அறியாமையால், ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு குறித்தும் பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை. உடல்நிலை சரியில்லாதபோது வசதி படைத்தவர்களும் படித்தவர்களுமே ஆன்டிபயாட்டிக்குகள் எடுத்துக்கொள்கின்றனர், மேலும் அவற்றை பரிந்துரைக்குமாறு மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

பட மூலாதாரம், AFP
ஆன்டிபயாட்டிக்குகள் விலை குறைந்தும், நோய் கண்டறிதல் செலவுகரமானதாகவும் இருப்பதால், மருத்துவர்கள் பரிசோதனைகளுக்கு பரிந்துரைக்காமல் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். "தாங்கள் எதற்கு சிகிச்சை அளிக்கிறோம் என்பது மருத்துவர்களுக்கு சில சமயங்களில் தெரிவதில்லை. அதனால் எல்லாவற்றுக்கும் மருந்துகள் வாயிலாக சிகிச்சை அளிக்க அவர்கள் நினைக்கின்றனர்," என மருத்துவர் வாலியா கூறுகிறார்.
மருத்துவமனைகளில் ஏற்படும் தொற்றுகளும் இதற்கு காரணமாக அமைகின்றன. மோசமான சுகாதார நிலையை சரிசெய்ய பல சமயங்களில் நோயாளிகளுக்கு ஆன்டிபயாட்டிக்குகள் பரிந்துரைக்கப்படுகின்றன, "ஏனெனில், எந்த மருத்துவரும் தொற்று காரணமாக ஒரு நோயாளியை இழக்க விரும்புவதில்லை," என்கிறார் அவர்.
"தொற்று கட்டுப்பாட்டில் போதாமை, ஆன்டிபயாட்டிக்குகளை தேவையே இல்லாமல் அதிகமாக எடுத்துக்கொள்ளுதல் இதன் பின்னால் ஏராளமான தொற்று நோய்கள் உள்ளன," என உலகளவில் செயல்படும் பொது சுகாதார சிந்தனை மையமான ஒன் ஹெல்த் டிரஸ்ட் இயக்குனர் ரமணன் லக்ஷ்மிநாராயணன் கூறுகிறார்.
நோய் கண்டறியும் ஆய்வுக்கூடங்கள், தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை உருவாக்குதல், மருத்துவமனை தொற்றுகளை குறைத்தல், ஆன்டிபயாட்டிக் பயன்பாடு குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சியளித்தல் ஆகியவற்றில் இந்தியா அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் நம்புகின்றனர். இல்லையெனில், "வருங்காலத்தில் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு புதிய தொற்று நோயாக உருவாகும்," என எச்சரிக்கிறார் மருத்துவர் வாலியா.

தமிழ்நாட்டில் என்ன நிலை?
தமிழ்நாட்டில் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், "இதுவொரு சர்வதேச பிரச்னை. இந்தியா முழுவதும் ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு என்பது இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்த தரவுகள் இல்லை.
நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவது இதனால்தான். 'ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு சூப்பர்பக்' பெரும்பாலும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அதிகளவில் எடுத்துக்கொள்வதனாலேயே ஏற்படுகிறது. இதன்மூலம் நோய்க்கிருமிகள் மருந்துகளுக்கான எதிர்ப்பை உருவாக்கிக்கொள்ளும். மருத்துவர் ஒருமுறை பரிந்துரைத்ததை வைத்துக்கொண்டே அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது" என தெரிவித்தார்.


ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு: மெல்ல உருவெடுக்கும் தொற்றுநோய்
- உலக சுகாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
- ஆன்டிபயாட்டிக் எதிர்ப்பு இயற்கையாகவே ஏற்படுகிறது. ஆனால், மனிதர்கள் மற்றூம் விலங்குகளிடத்தில் ஆன்டிபயாட்டிக்குகளை தவறாக பயன்படுத்துவது அதனை அதிகப்படுத்துகிறது.
- நிமோனியா, காசநோய், கொனேரியா மற்றும் சல்மோனெல்லோசிஸ் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ஆன்டிபயாட்டிக்குகள், தற்போது செயல்திறனில் குறைந்து விட்டதால், இந்த தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது கடினமாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













